

நுங்கு வெட்டி, விற்பனை செய்யும் மருத்துவ மாணவர் சிவாவுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் உதவிக்கரம் நீட்டியிருக்கும் நிலையில், “உதவிகளுக்கு நன்றி. எனினும், எங்கள் குடும்பத்துக்கே சோறு போடும் தொழிலை விடமுடியுமா?” எனத் தொடர்ந்து நுங்கு விற்று வருகிறார் சிவா.
ஈரோடு மாவட்டம், எழத்தூர் செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா. வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். இவரது குடும்பமே ஈரோடு மாவட்டம் நம்பியூர் பகுதிகளிலிருந்து நுங்கு குலைகளை மினி ஆட்டோவில் ஏற்றி, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்துக்கு எடுத்து வந்து வியாபாரம் செய்து வருகிறது. இவரின் அப்பா, அம்மா, அண்ணனுடன் இவரும் பத்து வருடங்களாக நுங்கு சீவி விற்று வருகிறார்.
இந்த நிலையில் கரோனா ஊரடங்கு காரணமாக இவர் பயின்று வரும் மருத்துவக் கல்லூரி மூடப்பட்டது. நுங்கு விற்கும் தொழிலும் முடங்கியதால் கல்லூரிக் கல்விக் கட்டணத்தைக் கட்ட முடியாத சூழ்நிலை. ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் மறுபடியும் நுங்கு குலைகளை இறக்கிச் சீவ ஆரம்பித்தனர் இவரும் இவரது குடும்பத்தினரும்.
இதையடுத்து, மருத்துவம் படிக்கும் மாணவர் நுங்கு சீவிக்கொண்டிருக்கிறார் எனும் செய்தி ஊடகங்களில் வெளியாகி, சமூக ஊடகங்களில் வைரலானது. இதை அறிந்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், இவரது கல்விக் கட்டணத்திற்கு உதவுவதாக அறிவித்தார். பல்வேறு தரப்பிலிருந்து உதவிகள் வந்துகொண்டிருக்கும் நிலையில், சிவா பழையபடி தன் குடும்பத்தினருடன் மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் சாலைக் கடையில் நுங்கு வெட்டிக் கொண்டிருக்கிறார்.
சிவாவிடம் பேசினேன்:
“தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தராஜன் ரூ.25 ஆயிரம் காசோலை அனுப்பியிருக்கிறார். இன்னும் என்ன உதவி வேண்டுமானாலும் செய்வதாகத் தனது உதவியாளர் மூலம் தெரிவித்திருக்கிறார். துபாய் வாழ் தமிழர் ஒருவர், உதவ முன்வந்திருக்கிறார்.
சென்னை மருத்துவர் ஒருவர் ரூ.10 ஆயிரம் வழங்குகிறார். சக மனிதருக்குக் கஷ்டம் என்றால் உதவி செய்ய இத்தனை பேர் முன்வருகிறார்களே என்று ஆச்சரியமாக இருக்கிறது. எனினும், உதவிகள் கிடைக்கின்றன என்பதற்காகக் குடும்பத் தொழிலை விட்டுவிட முடியுமா என்ன?” என்று மென்மையாகச் சிரிக்கிறார்.
தொடர்ந்து, “இன்றைக்கும் இந்தத் தொழிலில் தினசரி ரூ.2 ஆயிரம் வரை கிடைக்கிறது. சொந்தமாக நுங்குகள் ஏற்றி வரப் பயன்படுத்தும் ஆட்டோவுக்கு டீசல் அடிப்பது, அண்ணனை டிப்ளமோ படிக்க வைத்தது, நான் படித்து வரும் மருத்துவக் கல்லூரிக்குக் கட்டணம் கட்டியது எல்லாமே இந்த வருமானத்திலிருந்துதான். அதனால் இந்தத் தொழிலை விட எனக்கு மனம் வரவில்லை” என்கிறார்.
“சரி, டாக்டர் ஆனவுடன் என்ன செய்வீர்கள், அப்போது இந்தத் தொழிலை விட்டுத்தானே தீர வேண்டும்?” என்று வேடிக்கையாகக் கேட்டேன்.
“கிராமப்புற மக்களுக்கு வைத்தியம் பார்ப்பதுதான் என் லட்சியம். இப்போது எல்லோரும் எனக்கு உதவுவது மாதிரி என்னால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கும் செய்ய வேண்டும் என்று உறுதியாக இருக்கிறேன். நுங்கு விற்கும் தொழிலை நாங்கள் தொடர்ந்து செய்வோம். டாக்டர் ஆன பின்னாடி நுங்கு சீவி நாலு பேருக்கு கொடுத்தாத்தான் என்ன தப்பு? இதுவும் மக்கள் சேவைதானே?” என்று திருப்பிக் கேட்கிறார்.
சிவாவுக்குச் சின்ன வயசுதான். ஆனால், இவரிடம் கற்றுக்கொள்ள இந்தத் தலைமுறை இளைஞர்களுக்கு நிறைய இருக்கிறது.