Last Updated : 19 Jun, 2020 12:04 PM

 

Published : 19 Jun 2020 12:04 PM
Last Updated : 19 Jun 2020 12:04 PM

சொந்த ஊர் அன்புடன் வரவேற்கவில்லை!

ஊர்ப்பிரியம் என்பது யாருக்குத்தான் இல்லை. நல்ல நாள் பெரிய நாள் என்றால், குடும்பம் சகிதமாக சொந்த ஊருக்குச் சென்று நான்குநாள் இருந்துவிட்டு வந்தாலே ஒரு எனர்ஜிதான். புத்துணர்ச்சிதான். நம் வீட்டுத் தெருவில் இறங்கி நடந்து சென்றாலே, கடைவீதிப் பக்கம் வந்தாலே, ‘வாங்க தம்பி, எப்போ வந்தீங்க?’, ‘என்னப்பூ... ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க போல’, ‘நீங்க மட்டும்தான் வந்தீங்களா. பொண்டாட்டி புள்ளைங்க வரலியா?’ என்றெல்லாம் விசாரிப்புகள், செளக்கியங்கள் என மனதே நிறைந்துவிடும். ஆனால்... இப்போதைய காலகட்டத்தில்... ‘சொந்த ஊர் நம்மை அன்புடன் வரவேற்கிறதா?’ என்றால் கேள்விக்குறிதான். அந்தக் கேள்விக்குப் பின்னே உள்ள பதிலை அறிந்தால்... ஆச்சரியக்குறிதான்! காரணம்... மூன்றெழுத்து... அது கரோனா!

இந்தக் கரோனா வந்தாலும் வந்தது... இன்னும் போனபாட்டைக் காணோம். ஏதோவொரு புயல் வரும். அதற்கு ஆசை ஆசையாகவோ, சம்பிரதாயப்படியோ பெயர் சூட்டுவார்கள். ஒரு நான்கைந்து நாள், காட்டுகாட்டு என காட்டிவிட்டுப் போய்விடும்.

வருடாவருடம், ஏப்ரல் மாதமும் மே மாதமும் வரும். கூடவே, கொளுத்தி எடுத்தே தீருவேன் என்று வெயிலும் வரும். ‘என்ன சார் இது... போன வருஷத்தை விட இந்த வருஷம் வெயில் இந்தப் போடு போடுது’ என்று உஷ்... சொல்லி, அப்பாடா சொல்லி, தாங்கலடா சாமீ என்று புலம்புவோம். ’நேத்திக்கி திருத்தணிலயும் கரூர்லயும் 107 டிகிரி வெயிலாம். இங்கே 102 டிகிரிதான் வெயில்தான். ஆனாலும் அதையே தாங்கமுடியலீங்க. போறபோக்கைப் பாத்தா இன்னும் வரக்கூடிய நாளை எப்படித்தான் தாங்கப் போறோமோ, போங்க’ என்று அங்கலாய்ப்போம்.

மழை மட்டும் என்னவாம். ‘மழையே வரலை மழையே காணோம் மழை தப்பிருச்சு’ என்றெல்லாம் மழை பற்றி, வெயில் காலத்தில் புலம்பு புலம்பு எனப் புலம்புவோம். வந்தால், ‘மழை வருது மழை வருது குடை கொண்டு வா’ என்று பாட்டு மட்டும் பாடுவதே இல்லை. ‘பொன்வானம் பன்னீர்த்தூவுது இந்நேரம்’ என்று பாடிச் சிலிர்ப்பதே இல்லை. ‘என்ன சார் இது... இந்த மழைக்கு ஒரு நேரங்காலமே கிடையாதா. காலைல வீட்லேருந்து கிளம்பும்போது, ஏழு மணிக்கே சுள்ளுன்னு வெயில் அடிச்சுச்சு. இப்போ பாத்தா செம மழை. ரெயின்கோட்டும் வீட்ல வைச்சிட்டு வந்துட்டேன். தொப்பலா நனைஞ்சுக்கிட்டே போனேன்’ என்று மழையை வரவேற்காமல், முனகித் திட்டுவோம்.
இதெல்லாம் விடுங்கள். சொந்த ஊரைப் பார்ப்போம்.

சொந்த ஊர் என்பது பிறந்த ஊர். நாம் பிறந்து தவழ்ந்து நடந்து வளர்ந்த ஊர். பள்ளியில் படிக்கும்போது புத்தகத்தைத் தொட்டிருக்கவே மாட்டோம். வாத்தியார் நம் காது தொட்டு, திருகியிருப்பார். பிரம்பை எடுத்து விளாசியிருப்பார். வகுப்பறை வராண்டாவில், எத்தனையோ முறை முட்டிபோட்டிருப்போம். ஓடியிருப்போம். ஆடியிருப்போம். ஆனால், ஒவ்வொரு முறை சொந்த ஊருக்குப் போகும்போதெல்லாம், மனைவி குழந்தைகளுடன் ஸ்கூல் வாசலில் நின்றுகொண்டு, ‘இதான் நான் படிச்ச ஸ்கூல், அதோ... அதான் என் க்ளாஸ் ரூம்’ என்றெல்லாம் மியூஸியம் ரேஞ்சுக்கு, திருமலை நாயக்கர் மஹால் ரேஞ்சுக்கு காட்டிக் காட்டி விவரிப்போம்.

பம்பரம் விட்ட இடம், கில்லி விளையாடிய மைதானம், அபார்ட்மெண்ட் ஆகிவிட்ட கிரவுண்டு, ஆரஞ்சு மிட்டாய் வாங்குகிற தாத்தாக் கடை... என்றெல்லாம் காட்டுவோம். மகிழ்வோம். பள்ளி நண்பர்கள், தெரு நண்பர்கள், சின்னவயதில் அப்பா கைப்பிடித்துக் கூட்டிப்போன சலூன்கடை ஐயா என்றெல்லாம் காட்டுவோம்.

தீபாவளி, பொங்கல், பிறந்த நாள், கல்யாண நாள் என்றால், கோயில் கொடை, திருவிழா, தேரோட்டம், காதுகுத்து, கல்யாணம், துஷ்டி, பெரியகாரியம் என்று ஒவ்வொரு முறை ஊருக்குச் செல்வதே கொண்டாட்டம்தான். மனசு பால்யத்துக்குள் இறங்கு பளீங் சடுகுடு விளையாடும் தருணங்கள்தான்.

ஆனால், இது கரோனாவின் காலம். நல்லநாள் பெரியநாள் எல்லாமே இப்போது கரோனாவின் கையில் வந்துவிட்டது.

சொந்த ஊரில் வேலை இல்லை என்பதால் சென்னைக்கு வந்தோம். ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ என்று உச்சிமுகர்ந்து வாரியணைத்தது. நல்ல வேலை, டெபிட் கார்டு வழிய சம்பளம், போதாக்குறைக்கு நம்மை நம்பி வங்கி வழங்கிய கிரெடிட் கார்டு, சம்பளம் வரும் அக்கவுண்டிற்கு ஒரு கார்டு, முன்பு வேலை பார்த்த நிறுவனம் தந்த வங்கி அக்கவுண்ட் கார்டு, பர்சனல் அக்கவுண்ட் ஏடிஎம் கார்டு என பர்ஸ் முழுக்க கார்டுகள் என்ன... கழுத்தில் தாலியென தொங்கிக் கொண்டிருக்கும் ஆபீஸ் அடையாள அட்டையென்ன... ஆசை ஆசையாக வங்கியின் கடனுதவியால் வாங்கிய பல்சர் பைக் என்ன... அந்த பைக்கில் அலுவலகம் வழங்கிய பெட்ரோல் என்ன... வீடென்ன, வாசலென்ன, ஆஹா இந்த வாழ்க்கைதான் என்ன?

எங்களுக்கும் காலம் வரும்
காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும்
வாழவைப்போமே!

என்று பாடாத குறையாக, ஊரில் வம்புதும்பு என அலைந்துகொண்டிருக்கும் சித்தப்பா பையன், படித்துவிட்டு சும்மா சுற்றிக் கொண்டிருக்கும் அக்கா பையன், ‘என்னை விட நீ மார்க் கம்மியாத்தான் எடுத்தே. ஆனா, மெட்ராஸ் போனே, உன் லைஃபே மாறிருச்சு மாப்ளே. எனக்கொரு வேலை கிடைச்சாத்தான் மாப்ளே கல்யாணம் ஆட்டுக்குட்டி எல்லாமே’ என்று 32 வயது நண்பன், குலுங்கி அழுது தோள் சாய்ந்து குமுற... அந்த நண்பனுக்கு சென்னையில் வேலை பார்சல்ல்ல்ல்ல்ல்ல்!

கோடை விடுமுறையில், தங்கை, தங்கையின் குழந்தைகள் வருவார்கள். நண்பன் குடும்பத்துடன் வருவான். அம்மாவும் அப்பாவும் வருவார்கள். முதல் நாள்... தீம் பார்க் அழைத்துச் செல்வோம். மறுநாள் ஷாப்பிங் மால் கூட்டிச் செல்வோம். அடுத்த நாள், ‘இன்னிக்கி வியாழக்கிழமை’ என்று மயிலாப்பூர் சாய்பாபா கோயிலுக்கு அழைத்துச் செல்வோம். பிறகு நாகேஸ்வரராவ் பார்க், தி.நகர் ரங்கநாதன் தெரு... இப்படியாக சுற்றிவந்து, மெரினா பீச்சில் காலார நடந்து, சுண்டல் வாங்கிக் கொடுத்து பீச் மணலைத் தட்டிவிட்டு, வீட்டுக்கு வந்து அக்கடாவென உட்கார்ந்தால்... ‘சென்னை ரொம்பவே மாறிருச்சுல்ல. நான் ஏழாவது படிக்கும்போது வந்தேன். அப்புறம் இப்பத்தான் வந்தேன்’, ‘என் நாத்தனார் பொண்ணுக்கு சீமந்தம்னு வந்தேன், காதுக்குத்துன்னு வந்தேன்’... என்று அப்பாவும் அம்மாவும் ப்ளாஷ்பேக் சொல்ல, ‘மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்’ என்று உள்ளே பாட்டு ஓடும், நாகேஷ் கணக்காக! ‘வணக்கம் வாழவைக்கும் சென்னை’ என்று நெகிழ்ந்து மகிழ்வோம்.

சென்னையின் ஜன நெரிசல் பிதுங்கி வழியும் ஒரு ஆட்டோ மட்டுமே சென்று வரக்கூடிய பதினெட்டு அடி தெருவில், பதினாறு வீடுகள் குடித்தனம் பண்ணுகிற ஒண்டுக்குடித்தனத்தில் வாடகைக்கு வசித்தாலும், உறவுகளும் தோழமைகளும் வந்து சென்ற சந்தோஷத்தில்... சென்னையில் இருப்பதே பெருமையாகத்தான் இருந்தது. காலர் தூக்கிவிட்டுக் கொண்டு வலம் வந்தேன்.

ஊருக்குச் சென்ற சமயத்தில், நீண்ட வருடங்கள் கழித்து யாரேனும் ‘எங்கேப்பா இருக்கீங்க?’ என்று கேட்டால், ‘நான் சென்னைல இருக்கேன். அங்கே செட்டிலாகி ஏழு வருஷமாச்சு’ என்று சொல்லும்போது, நம் முகத்தை ஒரு செல்ஃபி எடுத்துக்கொள்ளலாம். அவ்வளவு புத்துணர்ச்சியுடன் இருக்கும். 32 பற்களும் தெரிய, பற்பசை விளம்பரத்தில் வரும் பெண் கூட, நம்மிடம் தோற்றுத்தான் போவாள். ‘பாத்தியா... நம்ம முறுக்குமீசை மாரியப்பனோட புள்ள. மெட்ராஸ்ல இருக்கானாம். குடும்பம் குழந்தைன்னு அங்கேயே செட்டிலாயிட்டானாம்’ என்று சொல்ல, ‘நாய் சேகர் நாய் சேகர் நாய் சேகர்’ என்று மூன்று முறை வடிவேலு திரும்புவாரே... அப்படித்தான் கெத்து காட்டுவோம்!

ஆனால், இன்றைக்கு அடித்துப் பிடித்துக்கொண்டு, சொந்த ஊருக்குக் கிளம்பிக்கொண்டிருக்கிறார்கள் சென்னையில் வாழும் மக்கள் பலர். ‘இந்த ஊருக்கு என்னதான் ஆச்சு?’ என்று யாரிடமும் யாரும் கேட்கத் தேவையே இல்லாமல், தன் உக்கிரத்தை காட்டிக் கொண்டிருக்கிறது கரோனா. தமிழகத்தின் தலைநகரம் சென்னைதான் கரோனாவிலும் முதலிடம். இதையொட்டிதான்... ‘இந்த ஊரும் வேணாம் ஒண்ணும் வேணாம்’ என்று சொந்த ஊருக்கு ஓடுகிறார்கள்.

சொந்த ஊரில் வேலை இல்லை, வாழ வழி இல்லை என்று சென்னைக்கு வந்தவர்கள்தான் இப்போது சொந்த ஊருக்குக் கிளம்பிவிட்டார்கள். இவர்களில், சாமான்சட்டியெல்லாம் தூக்கிக்கொண்டு, ஒரு வேன் பிடித்துக் கிளம்பியதையும் பார்க்கமுடிந்தது.

மனிதர்கள் எப்போதுமே வித்தியாசமானவர்கள்தான். ‘ஊரடங்கு வீடடங்கு’ என்று அரசாங்கம் சொன்னது. நாம் ஊரடங்கவுமில்லை, வீடடங்கவுமில்லை. ஒரு ஏரியா விட்டு இன்னொரு ஏரியா, ஒரு மாவட்டம் விட்டு அடுத்த மாவட்டம் போகாதே என்று பேரிகார்டு போட்டது. தடும்புக் கம்பங்கள் கட்டியது. நீலக்கலர் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டுகளை தெருவின் நடுவே வைத்து, முட்டுக்கட்டைபோட்டது. ஆனால், ‘எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்பது நமக்குத் தெரியுதோ தெரியாதோ... எந்த சந்துக்குள் புகுந்து எந்த சந்துக்குள் நுழைந்து எந்த சந்துக்குள் திரும்பினால், தடையேதுமில்லை என்பதை கூகுள் மேப்பை விட்ட நாம்தான் தெளிவுறத் தெரிந்துகொண்டு, கித்தாப்பு காட்டி ஊரடங்கிலும் சென்னை நகரை வலம் வந்தோம்.

‘ஊரடங்கு வீடடங்கு’ என்று அரசு சொன்னதை காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை. ‘சொந்த ஊருக்குப் போய்விடுங்கள்’ என்று அரசும் சொல்லவில்லை. மனிதர்கள் வித்தியாசமானவர்கள். சொன்னால் செய்யமாட்டார்கள். செய்யாதே என்றால் செய்வார்கள். செய் என்றால் செய்யமாட்டார்கள். இப்போது உலுக்கிக் கொண்டிருக்கும் கரோனா விஷயத்திலும் இதுதான் நடந்துகொண்டிருக்கிறது.

‘நம்மூர்ல வேலையேதும் இல்லைன்னு பொழைக்க பட்டணம் போனான். இப்போ, இங்கே வந்துட்டான்யா’ என்று சொந்த ஊர்க்காரர்கள் பேசுகிறார்கள். கல்யாணம், காதுகுத்து, நல்ல நாள் பெரிய நாள், கோயில் கொடை ஏதுமில்லை. ஒட்டுமொத்த காரணம்... ஒரே காரணம்... கரோனா!

சென்னையில் அதிகரித்துக் கொண்டிருக்கும் கரோனா சூழலில், ஊரடங்கி வீடடங்கிக் கிடப்பதுதானே பாதுகாப்பு. ‘எரியுற கொள்ளியை எடுத்து யாராவது முதுகு சொரிஞ்சுக்குவாங்களா?’ என்று நம்மூரில், நம் சொந்த ஊரில் பழமொழியை நாம் மறந்தேபோனோம்.

சென்னையில் இருந்து கிளம்பினால், நேராக எங்கும் நிற்காமல், சொந்த ஊருக்கு, வீட்டுக்குச் சென்றுவிடுவோமா என்ன?

ஒன் பாத்ரூம் போகாமல், டீ குடிக்காமல், ஒரு வடை பஜ்ஜி சாப்பிடாமல், பிஸ்கட் பாக்கெட் வாங்காமல், வாட்டர் பாட்டிலோ முறுக்கு பாக்கெட்டோ வாங்காமல் சென்றுவிடவா போகிறோம். ‘அச்சிறுபாக்கத்துல டிபன் நல்லாருக்கும்’, ’முண்டியம்பாக்கத்துல பஜ்ஜி சூடா போடுவான்’, ‘உளுந்தூர்பேட்டை போய் அந்த ஹோட்டல்ல சாப்பிட்டுக்கலாம்’, ‘ராமநத்தத்துல ஒரு கடைல புரோட்டா பஞ்சு பஞ்சா இருக்கும்’ என்பதையெல்லாம் கடந்துதானே போவோம். ‘அங்கே வெள்ளரி விற்பார்கள், இங்கே முந்திரி கிடைக்கும், அங்கே கொய்யாப்பழம் சூப்பரா இருக்கும், பலாப்பழத்தை வாங்கி டிக்கில போடு’ என்றுதானே பிக்னிக் ரேஞ்சுக்கு, போகப்போகிறோம்.


’ஊரடங்கியிருந்தால்... வீடடங்கியிருந்தால்’ ஏன் பயம்? கரோனா என்ன... அந்தக் காலனே வந்தாலும்...

‘காலா உன்னை சிறுபுல்லென நினைக்கிறேன்
சற்றே என்னருகில் வாடா...
காலால் உனை மிதிக்கிறேன்’

என்று பாரதியார் போல், நாமும் மீசை முறுக்கி முழங்கலாமே! அடங்காமல் ஒடுங்காமல், ஊரைச் சுற்றினோம். இப்போது சொந்த ஊரில் சுற்றப் போகிறோம். என்ன லாஜிக் இது?

சென்னையில் இருந்து வந்தவர்களை, தனிமைப்படுத்தி வைக்கிறது மாவட்ட நிர்வாகம். வாசலில் அறிவிப்புப் பேப்பரும் ஒட்டுகிறது. ’என்ன... என்ன...’ என்று தெரு மக்கள் வந்து, பயந்து பயந்து, சமூக இடைவெளி விட்டு, அந்த அறிவிப்புப் பேப்பரை, பார்த்துவிட்டுப் போகிறார்கள். பிறகு இன்னும் சமூக........ இடைவெளியுடன் பார்க்கிறார்கள்.

‘மாப்ளே... எங்கேடா இருக்கே? ஊருக்கு வந்துருக்கேண்டா. ஆமாம்டா... சென்னைல இருக்கமுடியல. கரோனா ஆடுற ஆட்டம் தாங்கமுடியல. அதான் குடும்பத்தோட வந்துட்டேன். வர்றியாடா, கொஞ்சம் பேசிட்டிருப்போம்’ என்பதற்கு எதிர்முனையில் உற்சாக பதிலில்லை. ‘வேலை இருக்குடா’ என்று பதில் வருகிறது.

என்னுடைய கவலையெல்லாம் இரண்டே இரண்டு.

சென்னையில் கரோனா அதிகம். தினம் தினம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சென்னையைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் இப்போது சென்னையை விட்டு எங்கே போய் ஒளிந்துகொள்வார்கள்?

வாழ வழியில்லை என்று சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு வந்தார்கள். இப்போது சென்னையை விட்டு சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார்கள். சொந்த ஊரிலும் கரோனா அதிகரித்தால், அவர்கள் சொந்த ஊரிலிருந்து எங்கே செல்வார்கள்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x