Published : 18 Jun 2020 02:23 PM
Last Updated : 18 Jun 2020 02:23 PM

இடையில் இருக்கும் சுவர் பிரித்து வைத்தாலும் மனதால் மிக நெருக்கமாகவே உணர்கிறோம்: கரோனா தொற்றுக்கு ஆளான செவிலியரின் கணவர் உருக்கம்

சீனாவில் தொடங்கி உலக நாடுகளையே நிலைகுலைய வைத்த கரோனா வைரஸ், இந்தியாவிலும் தனது கோரமுகத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. சுகாதாரப் பணியாளர்கள் பலரும் நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

அந்தவகையில், குமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த செவிலியர் ஆன்சியும் கரோனா தொற்றுக்கு ஆளானார். அவர் நாகர்கோவில், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதே மருத்துவமனையில் அவரது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.

செவிலியர் ஆன்சியின் கணவர் புரூஸ்லி கோபால் வழக்கறிஞர். அதிமுகவில் விலவூர் பேரூராட்சி செயலாளராகவும் இருக்கிறார். ஒரு வயதே ஆன தனது மகளையும், வயதான பெற்றோரையும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் இருந்தவாறே கவனித்துக் கொண்டிருக்கிறார் புரூஸ்லி. பச்சிளம் குழந்தையைத் தன்னோடு வைத்துக்கொண்டு, தாயைத் தேடித் தவிக்கும் அந்தக் குழந்தையின் தவிப்புக்குச் சமாதானம் சொல்லிக்கொண்டே நம்மிடம் பேசத் தொடங்கினார் புரூஸ்லி கோபால்.

“என்னோட மனைவி, பத்துகாணி ஆரம்ப சுகாதார நிலையத்துல செவிலியரா இருக்காங்க. என் மகளுக்கு இப்போ ஒரு வயசுதான் ஆகுது. வீட்டம்மாவுக்கு களியக்காவிளை சோதனைச் சாவடியில் டியூட்டி போட்டாங்க. ஒருநாள் ராத்திரி டியூட்டி முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும் லேசா இரும ஆரம்பிச்சாங்க. கூடவே காய்ச்சலும் அடிச்சது. முதல்ல வழக்கமான காய்ச்சல்தான்னு மாத்திரை கொடுத்தோம். ஆனால், செவிலியர் என்பதால் என் மனைவி அப்பவே இது கரோனாவாக இருக்கலாம்னு ஊகிச்சுட்டாங்க.

உடனே அவுங்களே வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்திக்கிட்டாங்க. குழந்தையை அவங்ககிட்டவே விடல. நாங்களும் மனைவி இருந்த ரூம் பக்கமே போகலை. மறுநாள் டெஸ்ட் எடுத்து ரிசல்ட் வர்ற வரைக்கும் இதை ஃபாலோ செஞ்சோம். பாசிட்டிவ்னு தெரிஞ்சதும் மொத்தக் குடும்பத்தையும் அரசு மருத்துவமனைக்குக் கூட்டிட்டு வந்தாங்க. ஆனா, முன்னமே எங்களை நாங்களே தனிமைப்படுத்தி இருந்ததால் பாப்பா உள்பட எங்க யாருக்கும் கரோனா தொற்று வரல.

இப்போ நான், பாப்பா, என்னோட பெற்றோர் நான்கு பேரும் ஜி.எச்.சில்தான் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கோம். கூட்டிட்டு வந்தப்போ எடுத்த டெஸ்ட்டில் கரோனா தொற்று இல்லைன்னு வந்துச்சு. இந்த வாரத்திலேயே இன்னொரு டெஸ்ட்டும் எடுப்பாங்க. என் மனைவிக்கு 9-வது நாளில் டெஸ்ட் எடுப்பாங்க. இரண்டு முறை நெகட்டிவ் வந்தாதான் வீட்டுக்கு விடுவாங்க.

பாப்பாதான் அம்மாவை ரொம்ப மிஸ் பண்றா. ‘குழந்தைங்களுக்கு தாய்ப்பால்தான் நோய் எதிர்ப்பு சக்திக்கு அஸ்திவாரம். ஆனா, இன்னிக்குப் பலரும் அழகு கெட்டுப்போகும்னு அதை உடனே நிறுத்திடுறாங்க. நம்ம அந்த தப்பை செய்யவே கூடாதுன்னு’ அடிக்கடி என் மனைவி பேசுவா. அதேநேரம் வேலைக்குப் போறதால பல நேரங்களில் குழந்தைக்கு ஃபீடிங் பாட்டிலே உதவியா இருக்கு. இந்தக் கரோனா நேரத்திலும் ஃபீடிங் பாட்டில்தான் பாப்பாக்கு ரொம்ப உதவியா இருந்துச்சு.

என்னதான் இருந்தாலும் தாயும், பிள்ளையும் நேருக்கு நேர் பார்த்துக்க முடியாத குறை இருக்கத்தானே செய்யும்? எனக்கும் என் மனைவிக்கும் இடையில் ஒரே ஒரு சுவர்தான் இருக்கு. ஒரே காம்பவுண்டில் இருந்துட்டு நேருக்குநேர் பார்க்க முடியாம வாட்ஸ் அப் வீடியோ காலில்தான் பேசிக்கிட்டு இருக்கோம்.

நான் இங்க இருக்குறது தெரிஞ்சதும் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம், மாவட்டச் செயலாளர் ஜான் தங்கம் உள்பட பலரும் போனில் கூப்பிட்டு நலம் விசாரிச்சாங்க.

என்னோட மனைவி டியூட்டியில் இருக்கும்போது முகக்கவசம், கையில் கிளவுஸ்னு ரொம்ப பாதுகாப்பாகத்தான் பணி செய்தார். ஆனாலும் கரோனா சின்ன இடைவெளி கிடைத்தாலும் எளிதாகத் தொற்றிக்கொள்ளும் நுண் கிருமி. அப்படி இருந்தும் பொதுமக்களில் சிலருக்கு இன்னும்கூட அந்த பயம் இல்லை. இஷ்டத்துக்கு சுற்றுகிறார்கள். அரசு நமக்காகத் தீவிரமாக போராடிக் கொண்டிருந்தாலும் மக்கள் அனைவரும் ஒத்துழைப்பதால் மட்டுமே நாம் கரோனாவை வெல்ல முடியும்.

என் மனைவி இருமியபோதே நாங்கள் தனித்து இருந்தோமே. அந்த விழிப்புணர்வுதான் இப்போதைய தேவை. எங்களுக்குள் இருக்கும் இந்த இடைவெளி உடலால் மட்டுமே ஆனது. மனதால் மிக நெருக்கமாகவே இருக்கிறோம்” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே ‘வீல்’ என அழுகைச் சத்தம் கேட்கிறது. “பாப்பாக்கு பசிக்குது போல... பால் ஆத்திக் கொடுக்கணும்” என்றவாறே விடைகொடுக்கிறார் புரூஸ்லி கோபால்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x