Published : 17 Jun 2020 01:21 PM
Last Updated : 17 Jun 2020 01:21 PM

கோவிட்டும் நானும் 1- மக்களின் அலட்சியம் பயமுறுத்துகிறது

கேரளத்தில் மிக அதிகமான நோயாளிகளுக்கு கோவிட்-19 தொற்றுப் பரவுவதற்குக் காரணமாக இருந்தது, இத்தாலியில் இருந்து பத்தனம்திட்டை மாவட்டத்துக்குத் திரும்பிய 3 பேர். அதேநேரம் பத்தனம்திட்டை மாவட்டம் கோவிட்-19 தொற்றுப்பரவலை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியது. தேசிய அளவில் முன்னுதாரண மாவட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பத்தனம்திட்டை அரசு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் சரத் தாமஸ் தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார்.

இரண்டு மாத அறிவு மேம்பாடு

மார்ச் 6 ஆம் தேதியிலிருந்து பத்தனம்திட்டை அரசு மருத்துவமனையில் கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவருகிறோம். பல்வேறு மருத்துவ ஆய்விதழ்கள், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சக மருத்துவர்களுடனான ஆலோசனைகள், கேரள அரசு கொடுத்த வழிகாட்டு நெறிமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் சிகிச்சைக்கான மருந்துகளை முடிவுசெய்தோம்.

காய்ச்சலுக்குப் பயன்படுத்தும் வைரஸ் எதிர்ப்பு மருந்தான ஃபுளூவிர், அசித்ரோமைசின் எனப்படும் நுண்ணுயிர்க்கொல்லி (பாக்டீரிய எதிர்ப்பு) மருந்து, ஹைட்ராக்சி குளோரோகுயின் ஆகியவற்றையே பயன்படுத்தினோம்.

40 வயதுக்குக் குறைந்த நோயாளிகளிடம் மிதமான அறிகுறிகள், 40 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் போன்றவை தொடக்கக் கட்டங்களில் காணப்பட்டன. இந்த மூன்று மருந்துகளையும் தொடர்ந்து கொடுக்கத் தொடங்கியதில், அந்த மருந்துகளுக்கு அவர்களுடைய உடல் மெதுவாக எதிர்வினையாற்றுவதைக் கவனிக்க முடிந்தது. மூன்று நாட்களில் முன்னேற்றம் தெரியத் தொடங்கியது.

புதிய வைரஸ் நோயை நாங்கள் கையாளுவதால், எங்கள் அறிவை மேம்படுத்திக்கொள்ள பல்வேறு இணையக் கருத்தரங்குகளில் பங்கேற்க வேண்டியிருந்தது. என்னுடைய இரண்டு ஆண்டு மருத்துவ மேற்படிப்பில் பங்கேற்றதைவிட, கடந்த இரண்டு மாதங்களில் அதிக இணையக் கருத்தரங்குகளில் பங்கேற்றிருப்பேன்.

மனதைத் தேற்றுவது கடினம்

மூவரைக் கொண்ட எங்களுடைய மருத்துவக் குழு முதல்கட்டமாக 19 நோயாளிகளைக் கையாண்டோம். நாங்கள் எதிர்கொண்ட மிகப் பெரிய சவால் நோயாளிகளின் மனோதைரியத்தை மீட்டெடுப்பதுதான். கருவுற்றிருந்த கோவிட்-19 நோயாளி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இப்போது அவருக்குக் குழந்தை பிறந்துவிட்டது, ஆனால் பிரசவத்துக்குப் பிந்தைய மன அழுத்தத்தால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார். தன் பச்சிளம் குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்ட முடியவில்லை என்ற குற்றவுணர்வு அவரை வருத்துகிறது.

இந்தப் பின்னணியில் ஒரு நோயாளியின் மனதைத் தேற்றுவது, மாற்றுவது மிகக் கடினம். 20 நாளைக்கு ஓர் அறையில் தனியாக இருப்பது குறித்து யோசித்துப் பாருங்கள். அந்த இருபது நாட்களும் உங்களைச் சந்திக்கும் ஒரே நபரும் முழு உடலையும் மறைக்கும் பாதுகாப்புக் கவசத்தை அணிந்திருப்பார். அவருடைய முகம் ஒழுங்காகத் தெரியாது. சில நோயாளிகளைக் கையாளும்போது மனநல மருத்துவரின் உதவியை நாட வேண்டிவரும்.

வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால், இப்போதுதான் நான் அதிக பயத்துடன் இருக்கிறேன். மக்கள் இப்போது போலியாக நம்பத் தொடங்கிவிட்டார்கள். கோவிட்-19 என்பது மற்றுமொரு சாதாரண நோய் என்றும் அதை எளிதாகக் குணப்படுத்தி விடலாம் என்றும் அவர்கள் கருதுகிறார்கள். ஊரடங்கு சற்றே தளர்த்தப்பட்டபோது முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்றவற்றை மக்கள் கடைப்பிடித்ததைப் பார்க்க முடிந்தது. இப்போது எல்லாம் சாதாரணமாகிவிட்டது. மக்கள் இப்படி அலட்சியமாகச் செயல்படத் தொடங்கினார்கள் என்றால், நிலைமை கைமீறிப் போக நாளாகாது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x