

நிலைமை எப்போது சீராகும் என்று நிச்சயமாகத் தெரியாததால் பலரும் கஷ்ட ஜீவனத்திலேயே வாழ்வை நகர்த்துகின்றனர். மற்றொரு புறத்தில் கரோனா, பலரையும் மாற்றுத்தொழில் நோக்கியும் திருப்பியுள்ளது.
நாகர்கோவில் வஞ்சியாதித்தன் பெரிய தெருவில் உள்ள சின்னஞ்சிறிய உணவகம் ஒன்று முழுச்சாப்பாடு போக, தனியே குழம்பு விற்பனையும் செய்கிறது. அவியல், சாம்பார், காளிஃபிளவர், ரசம், புளிக்குழம்பு என பட்டியல்போட்டு தனித்தனியே 20 ரூபாய்க்கு தருவதாகப் போர்டு வைத்திருந்ததைப் பார்த்துவிட்டு அதன் உரிமையாளர் சுப்பிரமணியத்திடம் பேச்சுக் கொடுத்தேன்.
“நாலஞ்சு வருசமாவே இந்தப் பெட்டிக்கடை சைஸான ஹோட்டலை நடத்திட்டு இருக்கேன். வீட்ல இருந்து நாங்க குடும்பமா சமைப்போம். அதை அப்படியே கொண்டுவந்து இங்க வைச்சு விப்பேன். எங்க ஹோட்டலில் சாப்பாடே 60 ரூபாய்தான். ஆனால், லாக்டவுனுக்குப் பின்னாடி அதை வாங்கவே பலருக்கு வசதியில்லை.
அப்போதான் சிலர், ‘கூட்டு, குழம்புகளை தனித்தனியா விற்றால் உதவியா இருக்கும்’னு யோசனை சொன்னாங்க. அரசு கொடுத்த ரேஷன் அரிசி செழிப்பா இருக்கு. அதில் சோறு சமைத்துவிட்டு குழம்பு மட்டும் வாங்கிப்போம்னு சொன்னாங்க. என்னோட கடைக்கு வர்றவங்க சொன்ன ஆலோசனை எனக்கும் பிடிச்சுருந்துச்சு. சாப்பாடு 60 ரூபாய்க்கு கொடுக்குற அதேநேரத்தில் அவியல், சாம்பார், ரசம், புளிக்குழம்பு, முட்டைக்கோஸ், கிழங்கு கறின்னு தனித்தனியா 20 ரூபாய்க்கு கொடுக்க ஆரம்பிச்சேன்.
மக்களோட வாழ்க்கை எந்த அளவுக்கு இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பாம இருக்குன்னு தெரியுறதுக்கு ஒன்னே ஒன்னு சொல்லவா? என்னோட கடையில் சாப்பாடு வாங்க வர்றவங்களை விரல்விட்டு எண்ணிடலாம்.
அதே நேரத்துல, 20 ரூபாய்க்குக் கூட்டு அல்லது குழம்பு வாங்கிச் சாப்பிடறவங்கதான் அதிகமா இருக்காங்க. வாரத்துல இரண்டு நாள் மீன்கறியும் உண்டு. அதுமட்டும் 50 ரூபாய். இதுல எங்களுக்கு பெருசா லாபம் எதுவும் கிடைக்காது. ஆனா, நாலு பேருக்கு நாக்குக்கு ருசியா கொடுத்த நிறைவு இருக்கு” என்றார் சுப்பிரமணியம்.