Published : 17 Jun 2020 11:40 AM
Last Updated : 17 Jun 2020 11:40 AM

கரோனாவால் அதிகரிக்கும் குழந்தைத் தொழிலாளர் எண்ணிக்கை

கரோனா நோய்த்தொற்று என்பது சுகாதாரப் பிரச்சினையாக மட்டுமே பொதுவாக அணுகப்படுகிறது. இந்நோய் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் சமூகத்தில் நிலவி வரும் பிரச்சினைகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. அப்படி காலந்தோறும் நீடித்துவரும் சமூகப் பிரச்சினையான குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை இந்தக் கரோனா காலத்தையொட்டி அதிகரிக்கும் என்கிற அச்சம் எழுந்துள்ளது.

ஒரு கோடி குழந்தைத் தொழிலாளர்கள்

‘உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்’ கடந்த 12 ஆம் தேதி நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் ஒரு கோடி குழந்தைத் தொழிலாளர்கள் இருந்தனர். பின்னர் 2018 ஆம் ஆண்டு யுனிசெஃப் ஆய்வு அறிக்கையின்படி இந்த எண்ணிக்கை ஒரு கோடியே பத்து லட்சத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது.

குழந்தைகளின் உரிமைகளுக்காகச் செயல்படும் ‘குழந்தைகள் உரிமை, நீங்களும் ‘Child Rights and You’ (CRY) அமைப்பு ‘கரோனாவும் இந்தியா குழந்தைத் தொழிலாளர்களும்: சவால்களும் தீர்வுகளும்’ என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கை நடத்தியது. இதில் குழந்தைத் தொழிலாளர்கள் மத்தியில் செயல்படும் செயற்பாட்டாளர்கள், ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் நாட்டில் கரோனாவுக்குப் பிறகான காலத்தில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை தற்போதுள்ள நிலையைவிட மேலும் அதிகரிக்கும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேபோல் தற்போது குழந்தைத் தொழிலாளர்களாக உள்ள பல குழந்தைகள் இந்த நோய் காலத்தில் எவ்வித பாதுகாப்புமின்றி நிர்கதியாக விடப்பட்டுள்ளனர் என்பதும் கவனப்படுத்தப்பட்டுள்ளது.

நாடு சரிந்தால் வீடும் சரியும்

குழந்தைகள் தொழிலாளர்களாகத் தள்ளப்படுவதற்கு அவர்களின் ஏழ்மையான சமூக நிலையே அதற்கான நிர்பந்தத்தை உருவாக்குகிறது. இந்நிலையில் இந்தக் கரோனா காலம் கடுமையான வேலையின்மையை உருவாக்கியுள்ளது. நாட்டின் பொருளாதாரம் மேலும் சரிந்துவரும் நிலையில் சமூகத்தின் கீழ்நிலையில் உள்ள ஏழை மக்களுடைய வீட்டின் பொருளாதாரமும் கடுமையாகச் சரிவைச் சந்தித்துள்ளது என்றே பொருளாகும். அவர்களின் வாழ்வாதாரமே தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. அன்றாடம் உணவுத் தேவைக்காகவாவது குழந்தைகள் வேலைக்குச் செல்லும் நிலையை இச்சூழல் உருவாக்கியுள்ளது.

ஏழ்மை நிலையில் இருக்கும் குழந்தைகள் படிக்கச் சென்றுவிட்டால், உழைக்காமல் அவர்களுக்கான உணவை யார் வழங்குவார்கள் என்ற கேள்விக்கான பதிலாகவே காமராஜர் மதிய உணவுத் திட்டத்தைப் பள்ளிகளில் கொண்டுவந்தார் எனலாம். கல்வி குறித்த போதுமான புரிதல் இல்லாத நிலையிலிருந்த நம் சமூகத்தில், ஒரு வேலை உணவாவது பள்ளிக்குச் சென்றால் குழந்தைக்குக் கிடைக்குமே எனப் பல பெற்றோர்கள் தம் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பினார்கள் என்பதை மறுக்கமுடியாது.

புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள்

சென்னை போன்ற நகரங்களிலிருந்து படித்து வந்த புலம்பெயர் தொழிலாளர்களின் வீட்டுப் பிள்ளைகள் இப்போது தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டனர். பள்ளிக் கூடங்கள் மூடப்பட்டுள்ளன. இவர்களுக்குப் பள்ளியில் கிடைத்துவந்த சத்துணவு இப்போது இல்லை. இவர்களின் பெற்றோர்களுக்கும் வேலை பறிபோயுள்ளது. குழந்தைகளும் அவர்தம் குடும்பமும் பசியோடு பரிதவித்து நிற்கின்றனர். இப்படியான மோசமான வாழ்நிலையை எதிர்கொள்ள குழந்தைகள் தங்களின் உழைப்பைச் செலுத்த வேண்டிய நிர்பந்தத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். பள்ளி இடைநிற்றலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

இவ்வாறு ஏழை மக்களின் குறைந்தபட்ச நிலையான வாழ்வையும் இந்தக் கரோனா சிதைத்துவிட்டது. இப்படியான சூழ்நிலையில் உள்ள குழந்தைகள் குறித்து அரசுக்கு ஒரு பார்வையில்லாமல் போனால் இக்கரோனா காலத்திற்குப் பிறகு குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை உயரவே செய்யும் என்பதை மறுக்கமுடியாது.

மீட்பது மட்டும் தீர்வல்ல

சாதாரண காலத்திலேயே குழந்தைத் தொழிலாளர்களை வேலை தளங்களிலிருந்து மீட்டு அவர்களுக்கான சிறப்புப் பள்ளிகளுக்கு அனுப்பப்படுவார்கள். அதற்காக மட்டுமே அரசு சிறிதளவு பணம் ஒதுக்கும் வேலையைச் செய்யும். மீட்கப்பட்ட குழந்தை ஒருவருக்கு இவ்வளவு என்ற ஒதுக்கீட்டின்படி அக்குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளிகளை நடத்துவதும் அதில் அவர்களைப் பயிற்றுவித்து பொதுப் பள்ளிக்கு மாற்றுவதையும் தொண்டு நிறுவனங்கள் மூலமே மேற்கொள்ளப்படுகிறது. இதில் பல்வேறு போதாமைகள் இருப்பதைக் களத்தில் செயல்படுபவர்கள் கூறுகின்றனர்.

அரசின் நிதி ஒதுக்கீடும் அதன் மூலம் நடத்தப்படும் இந்தச் சிறப்புப் பள்ளிகளும் குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டவர்களை மையப்படுத்தப்பட்டவையே. உண்மையில் கூடுதல் கவனம் செலுத்தப்படவேண்டியது குழந்தைத் தொழிலாளர்கள் உருவாகும் நிலையை மாற்றுவதாகும். ஆனால், அதற்கான திட்டமிடல்கள் நம் நாட்டில் மிகக்குறைவேயாகும்.

கல்விக்கான நிதியைக் கூடுதலாக ஒதுக்கி, அனைவருக்குமான இலவசக் கட்டாயக் கல்வியை உளப்பூர்வமான வகையில் வழங்குவதை அரசு உத்தரவாதப்படுத்தினால் மட்டுமே குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்கமுடியும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x