

ராமாயணத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மருந்துவாழ் மலையை புராதனச் சின்னமாக அறிவித்து அதன் புனிதத் தன்மையைக் காக்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
கன்னியாகுமரியில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மருந்துவாழ் மலை. மனதைக் கொள்ளை கொள்ளும் இயற்கை எழிலையும் விஞ்சி, நம் முன்னோர்களின் பாரம்பரிய வைத்திய முறையான சித்த வைத்தியத்தின் பெருமையை, நம் சந்ததிகளுக்கு ஓசையின்றிக் கடத்திக் கொண்டிருக்கிறது.
640 ஏக்கர் பரப்பளவையும், 1,200 அடி உயரத்தையும் கொண்டுள்ள இம்மலையில் 600-க்கும் அதிகமான மூலிகைகள் உள்ளன. அதனால் வந்த பெயர்தான் மருந்துவாழ் மலை. பெரும்பாலான மலைகளைப் போலவே, இதுவும் அனுமன் தூக்கிச்சென்ற சஞ்சீவி மலையின் சிறு துண்டு என்கிறார்கள். இங்கு கொட்டிக் கிடக்கும் மூலிகை வளம், சித்த மருத்துவத்தின் ஜீவ நாடியாகவும் உள்ளது. மலையுச்சியில் அனுமன் சிலையும் உள்ளது.
மருந்துவாழ் மலையின் அருகிலேயே அய்யா வைகுண்டர் ஏற்படுத்திய வைகுண்டபதி அமைந்துள்ளது. இதனால் அய்யாவழி பக்தர்கள் இம் மலையை மிகவும் புனிதமாகக் கருதி வருகின்றனர். மலையில் ஏராளமான குகைக் கோயில்களும் அமைந்துள்ளன. இப்போதும் சித்தர்கள் இம்மலையில் வாழ்வதாக இப்பகுதி மக்களுக்கு ஒரு நம்பிக்கை.
சித்தர்களில் முதன்மையானவரும், மருத்துவ சாஸ்திரம் அறிந்தவருமான அகத்திய மாமுனி இங்கு தங்கி பல ஏட்டுச் சுவடிகள் எழுதியதாகவும் ஒரு கருத்து உண்டு. இதேபோல் இங்குள்ள பிள்ளைத்தடம் குகையில் அய்யா வைகுண்டர், நாராயணகுரு ஆகியோரும் தங்கியிருந்து தவம் செய்துள்ளனர். இத்தகைய சிறப்புகளைப் பெற்ற மருந்துவாழ் மலையை புராதனச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மருந்துவாழ் மலைப் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் ஜெகன் வேலய்யா ‘இந்து தமிழ்’ இணையத்திடம் கூறுகையில், “ராவணனுடன் போர் செய்தபோது மயங்கிய லட்சுமணனுக்கும் வானரங்களுக்கும் வைத்தியம் செய்ய சில மூலிகைகள் தேவைப்பட்டன. அந்த மூலிகைகளுக்காக அனுமன் மலையைப் பெயர்த்து எடுத்துச்சென்றபோது விழுந்த சிறிய துண்டுதான் இது.
‘வருடியிருப்பதாலே மருந்துவாழ் மலையிலே மருந்து வளரலாச்சே சிவனே அய்யா’ என அய்யாவழியில் இது தொடர்பில் சாற்றுப் பாடலும் இருக்கிறது. இந்த மலைப்பாதையில் பரமார்த்தலிங்க சுவாமிகள் உள்பட பல கோயில்களும் உள்ளன. இதனால் இங்கு ஆன்மிகம், இயற்கை நேசத்தோடு அதிகமானோர் வருவார்கள். இந்த மலையின் உச்சியில் உள்ள விளக்கில் திருக்கார்த்திகை அன்று மூன்று நாள்கள் விளக்கு எரியும். மலையைச் சுற்றியுள்ள 9 கிலோ மீட்டர் தூரத்தை பக்தர்கள் கிரிவலம் வரும் வழக்கமும் இருக்கிறது.
இத்தனை சிறப்புப் பெற்றிருந்தாலும் இந்த மலையில் கழிப்பிடம், குடிநீர் வசதிகூட இல்லை. இதனால் இங்குவரும் ஆன்மிக அன்பர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஒவ்வொரு பெளர்ணமியின் போது இங்கு 500-க்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள். அதேபோல் ஞாயிறுதோறும் உடல் ஆரோக்கியத்துக்காக மலையேறுபவர்களும் அதிக அளவில் வருவார்கள். இவர்களின் வசதிக்காக இந்த மலைக்கு நாகர்கோவிலில் இருந்து பேருந்து வசதியும் செய்யவேண்டும். அரசு இதைப் புராதனச் சின்னமாக அறிவித்து மருந்துவாழ் மலையின் புனிதத்தைக் காக்கவேண்டும்” என்றார்.