Last Updated : 16 Jun, 2020 11:14 AM

 

Published : 16 Jun 2020 11:14 AM
Last Updated : 16 Jun 2020 11:14 AM

அடங்குவோம், ஒடுங்குவோம், கொண்டாடுவோம்!  நான்கு மாவட்ட மக்களின் கனிவான கவனத்துக்கு..! 

எண்பதுகளில் வந்த ‘முரட்டுக்காளை’ படத்தில், ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ பாடல் இன்றைக்கும் மறக்க முடியாத பாடலாக அமைந்திருக்கிறது. அதில் ‘ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்’ என்ற வரிகளைச் சொல்லாதவர்களே இல்லை. இன்றைய கரோனா காலத்தில், ‘ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்’ என்று கும்மாளம் போடமுடியவில்லை. அப்படியான குதூகல மனநிலையில் நம் உலகம் இல்லை. குறிப்பாக, நம் தமிழகம் இல்லை. அதிலும் குறிப்பாக, நம் சென்னை மாநகரம் இல்லவே இல்லை.

வந்தாரை வாழவைக்கும் சென்னை என்றொரு வாசகம் சத்திய வார்த்தை. மொத்தத் தமிழகத்தின் கடைக்கோடி கிராமங்களில் இருந்து வந்தவர்களைக் கூட அரவணைத்துக் காக்கும் அற்புத நகரம் சென்னை, இன்றைக்கு கரோனாவின் பிடியில் சிக்குண்டு தவிக்கிறது.

வழக்கமான நடைமுறைக் காலத்தில், தினமும் பேருந்தில் இருந்தும் ரயிலில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களும் யுவதிகளும் சென்னைக்கு வேலைக்கு வந்துகொண்டுதான் இருந்தார்கள். வேலை தேடி சென்னைக்கு வந்தவர்கள் ஏராளம். அண்ணன், சித்தப்பா பையன், அத்தை வீடு, மாமா பையன், நண்பன், நண்பனின் நண்பன் என்றெல்லாம் யாரோ ஒரு துணை இருக்க, ஒரு லிங்க் கிடைக்க... அந்த நம்பிக்கையுடனும் தன் மீது தான் கொண்ட நம்பிக்கையுடனும் சென்னை மாநகருக்குள் வலதுகாலை வைத்த எத்தனையோ பேர், இன்றைக்கு நல்ல நிலைமையில் இருக்கிறார்கள்.

‘அப்போ சென்னைக்கு வரும்போது, கண்ணைக் கட்டி காட்ல விட்டது மாதிரி இருந்துச்சு. எந்த ஏரியா எங்கே இருக்குன்னே தெரியாது. எத்தனை தடவை போனாலும் ஒரு ஏரியாவும் தெருவும் புரியவே இல்ல. ஆனா சென்னை இப்போ எனக்கு அத்துப்படி’’ என்கிறார்கள் பலரும்.

கஷ்டப்பட்டு, முட்டிமோதி, அங்கே இங்கே தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு, வேலைக்குள் நுழைந்து, நாலு காசு வீட்டுக்கு அனுப்பி, கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்துவிடவேண்டும், செட்டிலாகிவிட வேண்டும் என்று மேன்ஷன்களில் தங்கி, கையேந்தி பவன்களில் சாப்பிட்டு, கடற்கரையில் வாக்கிங் சென்று, ஷாப்பிங் மாலுக்குள் வெறிக்க வெறிக்க நுழைந்து, ரங்கநாதன் தெருவுக்குள் நசுங்கிப் பிதுங்கி வெளியே வந்து... என்கிற சென்னை வாழ்க்கை ஒருபோதும் எவரையும் கைவிட்டதில்லை. எவருக்கும் அலுக்கவும் இல்லை.

''சென்னைக்கு வேலைக்கு சேர்ந்த முதல் நாள். நாலாவது மாடில எனக்கு ரூம். அங்கேருந்து சென்னை சாலையைப் பாத்தேன். ஏகப்பட்ட பஸ், கார், வேன், டூவீலர். ஹாரன் சத்தம், கொளுத்தியெடுத்த வெயில். மத்தியான ஒன்றரை வெயில் வேளைல கூட, டிராபிக் ஜாம்ல, ஊர்வலம் போற மாதிரி வண்டிலாம் ஊர்ந்து ஊர்ந்து போவுது. நான் சொல்றது இருபது வருஷத்துக்கு முன்னாடி கதை. அன்னிக்கி நைட் தூக்கமே வரலை. கிளம்பி ஊருக்கே போயிடலாம். இந்த சென்னையும் நெரிசல் வாழ்க்கையும் வேணவே வேணாம்டா சாமீ’ன்னு நினைச்சேன். ஆனா பல்லைக் கடிச்சிக்கிட்டு பத்து நாள் ஓட்டினேன். பத்தாம் நாள்... இந்த சென்னையை விட்டு போகவே கூடாதுன்னு முடிவெடுத்தேன். சென்னை எனக்குள்ளே இரண்டறக் கலந்துருச்சு'' என்று நண்பன் சொன்னான்.

ஹூம்... இதெல்லாம் ஒருகாலம். இப்போது கரோனாவின் காலம். மொத்தத்தையும் கலைத்துப் போட்டு ஆட்டம் போடுகிறது இந்த கரோனா வைரஸ்.

‘ஊரைவிட்டு விலக்கி வைக்கிறேன். இதான்டா என் தீர்ப்பு’ன்னு சந்தன மார்புடன், பிடரி முடியை சிலுப்பிக் கொண்டு விஜயகுமார் சாரட் வண்டியில் இருந்து இறங்கி மரத்தடி பஞ்சாயத்தில் சொல்வாரே... அப்படி, எந்த வண்டியில் எப்படி வந்ததோ... ஒவ்வொரு ஊரையும் ஊரைவிட்டு விலக்கிவைத்துவிட்டது கரோனா.

‘இந்த சென்னை மாநகரத்திலே...’ என்று ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தில் கவுண்டமணி சொல்லிக்கொண்டே இருப்பார். ஆனால், சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில்தான் இப்போது கரோனா வூடுகட்டி அடிக்கிறது எனும் செய்தி, மொத்த தமிழகத்தையும் கலக்கத்தில் வைத்துவிட்டது.

ஓட்டு எண்ணிக்கை போல, ‘நேத்திக்கி ராயபுரத்துல இவ்ளோ இருந்துச்சு. இன்னிக்கி எவ்ளோ... டிவில சொல்லிட்டாய்ங்களா?’ என்று சென்னையின் ஒவ்வொரு பகுதியையும் ஒட்டுமொத்தமாக சுழற்றியடித்துக்கொண்டிருக்கிறது கரோனா.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் என்று சென்னையும் சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களும் முழு ஊரடங்கு எனும் வளையத்துக்குள் வந்திருக்கிறது. இப்போது நான்கு மாவட்ட மக்களும், மிக விழிப்புடனும் தெளிவுடனும் செயல்பட வேண்டிய (செயல்படவே இல்லாமல்) இருக்கவேண்டிய தருணம் இது.

கொளுத்தியெடுக்கும் வெயில், வெளுத்துவாங்கும் மழை, அடித்துப் புரட்டும் புயல் என கண்ணுக்குத் தெரிகிற விஷயத்துக்கு பயப்படுகிறோம். அதேசமயம், கண்ணுக்குத் தெரியாத வைரஸை, ஏதோ ஜஸ்ட் லைக் தட் என்றுதான் டீல் செய்கிறோம்.

ஊரடங்கு என்பதன் அர்த்தத்தை நாம் உணரவில்லை. ஊரடங்கை மீறியவர்கள் மீது கோடிக்கணக்கில் இதுவரை அபராதத் தொகை வசூலித்த விவரம் சொல்லியும் நாம் தெளிவுக்கு வரவில்லை. ‘அறுபது வயசுக்கு மேல உள்ளவங்களுக்குத்தான்’ என்பதும் ‘ஷுகர், பிபி இருந்தா ஜாக்கிரதையா இருக்கணும்’ என்பதெல்லாம் கடந்து, இருபது முப்பது வயது இளந்தாரிகளுக்கும் வந்துகொண்டிருக்கிறது கரோனா. பத்துப்பன்னிரண்டு வயது குழந்தைகளாச்சே... என்று இரக்கமோ அன்போ காட்டாமல், அட்டாக் பண்ணிக்கொண்டிருக்கிறது இந்த வைரஸ். இன்னமும் நாம் ஏதோ பிக்னிக் போகிற மனோநிலையில், பைக்கில் மனைவி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு, சாகச மனநிலையிலேயே உலவிக் கொண்டிருக்கிறோம்.

இப்போது 19-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அறிவித்திருக்கிறது தமிழக அரசு. இந்த ஊரடங்கு என்பது நமக்காகத்தான். கரோனாவை ஊரடங்கிற்குள் அடைத்துவிடமுடியாது. நாம்தான் ஜாக்கிரதையாக, உஷாராக, திடமாக, தெளிவாக இருந்து ஊரடங்கை கடைப்பிடிக்கவேண்டும்.

பாடம் நடத்திக் கொண்டிருக்கும் ஆசிரியரிடம், ‘சார்...’ என்று சொல்லி, ஒற்றை விரல் காட்டி, உச்சா போவதற்கு அனுமதி கேட்கிற குழந்தைகளாட்டம், ‘மாத்திரை வாங்கறதுக்கு வந்தேன் சார்’, ‘நாலு நாளா வெளியவே வரல சார், இப்பதான் சார் வந்தேன்’, ‘வீட்டுக்கு வேணா வந்து பாருங்க சார், காய்கறிகள் சுத்தமா தீர்ந்துபோச்சு. அதான் வாங்கவந்தேன்’, ‘பால் திரிஞ்சு போச்சு சார். வீட்ல பாப்பாலாம் இருக்கு. அதான் பால் வாங்கலாம்னு...’... என்று வெயிலே கூரையெனக் கொண்டு பணியாற்றும் போலீஸ்காரர்களிடம் ஏதேதோ சால்ஜாப்பு சொல்லி ஏமாற்றுகிறோம். நாம்தான் ஏமாறுகிறோம், நம்மை நாமே ஏமாற்றுகிறோம் என்பதை நாம்தான் புரிந்துகொள்ளவேண்டும்.

19-ம் தேதி ஊரடங்கிற்கு இன்னும் மூன்று நாட்கள் இருக்கின்றன. உங்கள் வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் உட்கார்ந்து பேப்பர், பேனா எடுத்துக்கொண்டு என்னென்ன வாங்கவேண்டும், என்னென்ன தேவை என்பதை ஒரு லிஸ்ட் போடுங்கள். அவை சத்தான பொருட்களா, தேவையான பொருட்களா, அவசியம் சாப்பிட்டே ஆகவேண்டிய பொருட்களா என்று ஒன்றுக்கு மூன்று முறை ஒவ்வொருவராக வடிகட்டுங்கள்.

சட்டையை மாட்டுங்கள். செருப்பைப் போடுங்கள். வண்டியை எடுங்கள். ஒருமுறை... ஒரேயொரு முறை கடைவீதிக்குச் சென்று எல்லாவற்றையும் மொத்தமாக வாங்கிவந்துவிடுங்கள். அல்லது இருப்பதைக் கொண்டு இந்த நாட்களை ஒப்பேற்றிவிடமுடியுமா. அதையும் பாருங்கள். பஜ்ஜி பக்கோடா முக்கியம்தான். அதைவிட உயிர் முக்கியம்தானே. சுவர் இருந்தால்தானே சித்திரம்.

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர், ஐந்து நாட்களுக்கு ஒருமுறை கடைவீதிக்குச் செல்கிறார். அப்படிச் செல்லும்போது, பக்கத்து வீட்டுக்கு என்னதேவை என்பதையும் கேட்டு, அதையும் வாங்கி வந்து தருகிறார்.

துவரம் பருப்பு வாங்க ஒருநாள், உளுந்தம்பருப்பு வாங்க ஒருநாள், தலைவலி மாத்திரைக்கு ஒருநாள், கத்தரிக்காய் வாங்க ஒருநாள், உருளைக்கிழங்கு வாங்க ஒருநாள், ‘செமயா கொசு கடிக்குதுங்க’ என்று சொல்லி கொசுபத்தி வாங்க ஒருநாள், ‘பசங்களுக்கு ஸ்நாக்ஸே இல்லீங்க’ என்று சொல்லி, பிஸ்கட்டோ முறுக்கோ வாங்குவதற்கு ஒருநாள் என்று, ஊர்வலம், கடைவலம், வீதிவலம் என்று வந்தால், அது ஊரடங்காக எப்படியிருக்கும்? நாம்தான் அடங்கவேண்டும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு முதலான நான்கு மாவட்டங்களையும் மொத்தத் தமிழகமும் பார்த்துக்கொண்டிருக்கிறது. இந்த ஊரடங்கிற்குப் பிறகு, கரோனா எண்ணிக்கை அதிகமாகாமல் இருந்தால், எல்லா மாவட்டத்து மக்களுக்கும் ஒரு நம்பிக்கையை நாம் விதைப்பவர்களாவோம். தைரியத்தைக் கொடுப்பவர்களாவோம்.

வீட்டுக்குள்ளேயே முடங்கிவிட்டால், கரோனாவின் வில்லத்தனமெல்லாம் எடுபடாது என்பதை எல்லோருக்கும் உணர்த்தும் நிலையில் நான்கு மாவட்ட மக்களும் இருக்கிறோம். ’ஊரடங்கு’ என்று அரசு வழியைத்தான் காட்டும். அதன்படி அடங்கவேண்டியது நாம்தான் என்பதை உணர்ந்து செயல்படும் அவசர, அவசியத் தருணம் இது.

ஊரடங்கு காலத்தில் நாம் அடங்கிக் கிடப்பதை அறிந்து, அந்த கரோனாவே ‘என்னய்யா... ஒரு ஈ காக்காவைக் கூட காணோம்’ என்று மூக்கில் விரல் வைக்கவேண்டும். தெறித்து சென்னையை விட்டு ஓடவேண்டும். ஒவ்வொரு ஊரிலிருந்தும் ஓடவேண்டும்.

நாம் எப்போதுமே நமக்காக வாழ்வதில்லை. அப்பா, அம்மாவுக்காக, மனைவி மக்களுக்காக, உடன்பிறப்புகளுக்காக என்றெல்லாம் வாழ்கிறோம். இப்படி அன்பான கட்டமைப்புடன் வாழ்வதற்கு, நாம் வாழவேண்டும், கரோனா பிடிக்குள் சிக்காமல் வாழவேண்டும் என்பதையும் கருத்தில் கொள்வோம்.

‘ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்’ என்பது குதூகலமான பாட்டு வரி. ‘அடங்குவோம் ஒடுங்குவோம் கொண்டாடுவோம்’ இதுதான் இப்போதைய நம் வாழ்க்கைக்கான முக்கியமான தத்துவம்.

அடங்குவோம் ஒடுங்குவோம் கொண்டாடுவோம்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x