Last Updated : 14 Jun, 2020 01:04 PM

 

Published : 14 Jun 2020 01:04 PM
Last Updated : 14 Jun 2020 01:04 PM

பிழைப்பதற்கு சென்னை... வாழ்வதற்கு சொந்த ஊர்

உலகம் முழுக்க அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா, நம் தமிழகத்தையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. தலைநகரம் சென்னையில், நாளுக்குநாள் கரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.


சென்னையின் முக்கால்வாசி பகுதிகள், அடுக்குமாடிக் கட்டடங்களாகிவிட்டன. பெருங்குடியிருப்புப் பகுதிகளாகிவிட்டன. நம் வீட்டுக் கதவைத் திறந்தால், அடுத்த வீட்டுக் கதவில் இடிக்கும் அளவுக்கு வீடுகள், நெருக்கியடித்துக் கட்டப்பட்டிருக்கின்றன.


இன்றைக்கு சமூக இடைவெளியைப் பேசிக்கொண்டிருக்கிறோம். இந்த இடைவெளியை வீட்டில் இருந்தே, வீட்டின் அமைப்பிலிருந்தே தொடங்கவேண்டும் என்பதுதான் இந்த கரோனா கற்றுக் கொடுத்திருக்கும் பாடம்.


இருபது வருடங்களுக்கு முன்பு, சென்னையில் வேலை செய்பவர்கள், தாம்பரத்தில் வீடு வாங்கினார்கள். பெருங்களத்தூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி என்றெல்லாம் இடம் வாங்கிப் போட்டார்கள். பத்து வருடங்களுக்கு முன்பு அதிகம் பேர், அங்கே வீடு கட்டி குடியிருந்தார்கள். இப்போது மறைமலைநகர், சிங்கபெருமாள் கோயில் என பல பகுதிகளில் இடம் வாங்கி, வீடு கட்டிக்கொண்டு, சென்னைக்குள் வந்து வேலை பார்க்கிறார்கள்.


பத்துவருடங்களுக்கு முன்பு, இவையெல்லாம் கேலியாகவும் கிண்டலாகவும் பேசப்பட்டன. ‘விட்டா, விழுப்புரத்துல வீடு கட்டிட்டு சென்னைக்கு வேலைக்கு வருவீங்க போல’ என்று நக்கல் செய்தார்கள். ‘வீடே இல்லாத இடத்துல வீடு கட்டிட்டு, அத்துவானக் காட்ல எப்படிய்யா இருக்கீங்க?’ என்று கேலியாகச் சொன்னார்கள். ‘வீட்டுக்குப் போய் தூங்கறதுக்கும் காலைல எந்திரிச்சதும் வேலைக்குக் கிளம்பறதுக்கும்தான் டைம் சரியா இருக்கும்’ என்று விமர்சித்தார்கள். ஆனால், இன்றைய கரோனா கற்றுத் தந்த சமூக இடைவெளியை, இவர்கள் அறியாமலும் புரியாமலுமே செயல்பட்டு வாழ்ந்து வருகிறார்கள் எனும் உண்மை வியப்பானதுதான்.


‘சிட்டிக்குள்ளே வீடு வாங்கற அளவுக்கு பணமில்லை. சதுர அடியே எக்கச்சக்கம். அப்படியே வாங்கினாலும் கையிருப்புக்கும் வாங்கற சம்பளத்துக்குக் கிடைக்கிற பேங்க் லோனுக்கும் 600 சதுர அடி, 700 சதுர அடி வீடுதான் கிடைக்கும். கொஞ்சம் காத்தோட்டம் கிடைக்குமான்னா அதுவுமில்ல. வெளிச்சமும் கிடையாது. இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் பன்னெண்டு பதினாலு அடுக்கு வீடுகள்னா, வெளிச்சம் எப்படிக் கிடைக்கும்? அதான், சென்னைக்கு அவுட்டர்ல இடம் வாங்கினேன். எனக்கே எனக்குன்னு ஒரு வீடு வாங்கினேன்’ என்று அன்றைக்கு உருக்கமாகவும் விளக்கமாகவும் சொன்னவர்களை, கேலியாய் விமர்சனம் செய்தவர்கள்தான் அதிகம். அப்படி கிண்டலடித்தவர்கள், அடுத்தடுத்த வருடங்களில், சென்னைக்கு வெளியே புறநகர்களுக்கு நகர்ந்து விட்டார்கள் என்பதுதான் நகரம் நெருக்கடியத்ததின் விளைவு.

’’இருக்கிற நகையையெல்லாம் வித்தோம். கூடுவாஞ்சேரி தாண்டி இடம் வாங்கினோம். பேங்க்ல சம்பள விவரம் கொடுத்தோம். கிடைச்ச லோனுக்குத் தக்கபடி, ஆயிரம் சதுர அடி தாண்டி வீடு கட்டி, அம்சமா குடியிருக்கோம். வீட்டோட விசாலம், மனசுக்கும் வந்துரும்னு சொல்லுவாங்க. அதேபோல, ஊர்லேருந்து சொந்தக்காரங்க வந்தாலும் நல்லாவே தங்கலாம்ங்கற மாதிரிதான் வீடு இருக்கு. இதெல்லாம் சென்னைக்குள்ளே சாத்தியமே இல்லை. சென்னைல வேலை. சென்னை புறநகர்ல வீடு. இதான் நிம்மதின்னு அப்பவே நாங்க முடிவெடுத்து வந்துட்டோம்’’ என்று தாம்பரம் தாண்டி குடியிருப்பவர்கள் பலரும் சொல்லுகிறார்கள்.


கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு, மேல்மருவத்தூர் வரைக்கும் புறநகர் ரயில்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. போதாக்குறைக்கு, விமானநிலையத்திலிருந்து சென்னை நகருக்குள் மெட்ரோ ரயில் சேவையும் வந்துவிட்டது. திருமால்பூர், காஞ்சிபுரம், மேல்மருவத்தூர், அந்தப் பக்கம், அரக்கோணம், திருவள்ளூர் என்றெல்லாம் மக்கள் சென்னைக்குள் வந்து தினமும் வேலை பார்த்துவிட்டு, வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். சென்னைக்குப் புறநகர்களெல்லாம் பெரும்பாலும் சமூக இடைவெளி வீடுகளாக கட்டமைக்கப்பட்டிருக்கின்றன என்பதுதான் தற்போதைய சூழலின் பெரும் ஆறுதல்.


ராயப்பேட்டையில் உள்ள கல்லூரியில் வேலை பார்த்து வந்த பேராசிரியருக்கு வீடு, ராயப்பேட்டையில்தான் இருந்தது. ஆனால் அடுத்த சில வருடங்களில், சென்னைக்கு வெளியே ஊரப்பாக்கம் பகுதியில் வீடு வாங்கிக் குடியேறினார். அங்கிருந்து ராயபேட்டை கல்லூரிக்கு வந்து பணிபுரிந்தார். அவர்... கவிஞர் இன்குலாப். இப்படி, அரசுப் பணி செய்தவர்களும் தனியார் துறையில் பணிபுரிந்தவர்களும் சென்னைக்கு வெளியே உள்ள புறநகரைத் தேர்ந்தெடுத்தார்கள்.

இன்றைக்கு தாம்பரம் தொடங்கி செங்கல்பட்டு வரை உள்ள ஊர்கள் அனைத்தும், குட்டிகுட்டி நகரங்களாகிவிட்டன. சென்னை தி. நகரில் கிடைப்பது புரசைவாக்கத்தில், மயிலாப்பூரில், திருவான்மியூரில், அசோக்நகரில், விருகம்பாக்கத்தில், அண்ணாநகரில்,குரோம்பேட்டையில், வேளச்சேரியில், திருவொற்றியூரில், தாம்பரத்தில் என பல பகுதிகளில் கிடைக்கத் தொடங்கிவிட்டன. இவையெல்லாம் கரோனா வருவதற்கே முன்னதாகவே, காலமும் சூழலும் மனிதப் பெருக்கமும் பொருளாதாரமும் கற்றுக் கொடுத்த பாடங்கள். இன்றைக்கு கரோனா கற்றுத் தருகிற அனைத்துமே இன்னும் நான்கு தலைமுறைக்கான வேதங்கள்.

‘படிச்சு, பட்டணம் போய் நல்ல உத்தியோகம் பாத்து செட்டிலாகணும்’ என்பதுதான், கடந்த ஐம்பது வருடங்களாகவே ஆகச்சிறந்த லட்சியம். அப்படி சென்னைக்கு வந்து வேலை பார்த்து இங்கேயே தங்கிவிட்டவர்களே பெரும்பான்மை.

‘படிச்சோம், பட்டணம் போனோம், வேலைக்குச் சேர்ந்தோம். எல்லாம் சரி. அதுக்காக அங்கேயே இருந்துடமுடியுமா? சொந்த ஊருக்கும் நமக்குமான பந்தமே விட்டுப்போயிரும். அதனால, வயசாகற வரைக்கும், ரிடையர்டாகிற வரைக்கும் சென்னைல வேலை. அது முடிஞ்சதும், வயசான காலத்துல சொந்த ஊருக்குப் போய், நிம்மதியா பழைய நினைவுகளை அசைபோட்டுக்கிட்டு வாழ்ந்துட்டுப் போயிடணும்’ என்பதும் பலரின் திட்டமாகவும் ஆசையாகவும் கனவாகவும் இருக்கிறது.

‘’சொந்த ஊரு மாயவரம் பக்கம் கிராமம். என்னோட 24 வயசுல சென்னைக்கு வந்து வேலைக்குச் சேர்ந்தேன். கொஞ்சம் கொஞ்சமா கடனை அடைச்சேன். சிறுகச் சிறுக காசு சேத்து ஊர்ல, கிராமத்துல ஓட்டுவீட்டை ஒட்டுவீடாக்கினேன். கல்யாணம் நடந்துச்சு. மனைவியோட சென்னைல குடித்தனம். பசங்க பொறந்தாங்க. படிச்சாங்க. வளர்ந்தாங்க. நானும் ரிடையர்டானேன்.


சென்னைல, அப்போ மாதிரி காத்து இல்ல இப்போ. தண்ணி வசதியும் சுத்தமா இல்ல. ஊர்ல கிராமத்துல இருக்கிற ஒட்டுவீடு, சும்மாத்தான் இருக்கு. அங்கே காத்துக்கும் கவலையில்ல. தண்ணிக்காக, அதிகாலைல ரெண்டுமணிக்கு முழிச்சிருக்க வேண்டிய அவசியமும் இல்ல. அதான் மாயவரம் பக்கம் கிராமத்துக்கே நாங்க வந்துட்டோம். இப்படித்தான் வந்துடணும். ஒருகட்டம் வரைக்கும் சென்னைல வேலை பாத்துட்டு, அப்புறமா சொந்த ஊருக்கே வந்துடணும். வந்து செட்டிலாயிடணும். அப்பதான் அடுத்தடுத்து சென்னைல வந்து ஜெயிக்கணும்னு வர்ற மக்களை, இந்த சென்னை பூமியும் தாங்கும். ஏத்துக்கும்’’ என்று சொல்லும் ரயில்வே ரிடையர்டு பெரியவரின் வாழ்க்கை, நம் எல்லோருக்குமான சோறுபத உதாரணம்.


‘பிழைப்பதற்கு சென்னை. வாழ்வதற்கு சென்னை புறநகர்’. இது வாழ்க்கை கற்றுக் கொடுத்தது. ’பிழைப்பதற்கு சென்னை. பிறகு வாழ்வதற்கு சொந்த ஊர்’ இது கரோனா உணர்த்திய வாழ்க்கை முறை.


மயிலிறகு மிகத் தக்கையானது. எடையே இல்லாததுதான். ஆனால் மூட்டைமூட்டையாக மயிலிறகை ஏற்றினால், வண்டி தாங்காது எனும் திருக்குறள்... சென்னை மாநகருக்கும் பொருந்தும். எல்லா ஊருக்கும் பொருந்தும். எல்லாப் பெருநகரங்களுக்கும் பொருந்தும்.


‘வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் - இந்த
மண்ணில் நமக்கு இடமேது?’

என்ற கவியரசர் கண்ணதாசனின் வரிகள், வாழ்வதற்குப் பின்னர் பொருந்தக் கூடிய வரிகளாக அப்போது இருந்தன. இப்போது, சென்னை மாதிரியான பெருநகர நெரிசல் வாழ்க்கையில், வாழும் போதே பொருந்தக் கூடிய வரிகளாகிவிட்டன.


‘ரிலே ரேஸ்’ என்றொரு விளையாட்டு உண்டு. எங்கோ பிறந்து, சென்னைக்குப் பிழைக்க வந்து, அடுத்து பிழைக்க வருபவர்களின் கையில் அந்தக் குச்சியைக் கொடுத்துவிட்டு, சொந்த ஊர் திரும்புவது விளையாட்டல்ல... அதுதான் இனிதான வாழ்க்கை.


‘வாழு, வாழவிடு’ என்றொரு அற்புத வாசகம் உண்டு. ’வாழு... வாழ இடம் கொடு’ என்பதும் சென்னை மாநகரின் இப்போதைய மிக முக்கியமான தேவை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x