திருத்தணிகாசலத்துக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்துப் பார்க்கலாமே!- அரசுக்கு எழுத்தாளர் கண்மணி குணசேகரன் கோரிக்கை

திருத்தணிகாசலம்.
திருத்தணிகாசலம்.
Updated on
1 min read

தன்னிடம் கரோனா தொற்றைக் குணப்படுத்த மருந்து உள்ளது என்று அறிவித்த குற்றத்துக்காக போலி மருத்துவர் என்று குற்றம் சாட்டப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சித்த மருத்துவர் திருத்தணிகாசலம்.

சித்த மருத்துவத்தில் மருந்து உள்ளது என்று அவர் கூறியதை ஏற்காத மாநில அரசு, தற்போது சித்த மருத்துவர்களுக்கு வாய்ப்பளித்து அதன் மூலம் கரோனாவைக் குணப்படுத்தியும் விட்டது. கரோனாவுக்கு எதிரான போரில் கபசுரக் குடிநீர் இப்போது முக்கியப் பங்காற்றி வருகிறது.

கரோனாவைக் குணப்படுத்த சித்த மருந்துகளைப் பயன்படுத்திப் பார்க்கலாமே என்ற பேச்சுகள் வலுத்து வரும் நிலையில், “தற்போதாவது திருத்தணிகாசலத்துக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துப் பார்க்கலாமே” என்று தமிழக அரசுக்கு நடுநாட்டு எழுத்தாளர் என்று எழுத்துலகில் அறியப்படும் கண்மணி குணசேகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக கண்மணி குணசேகரன் தனது முகநூல் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

''தாழ்மையுடன் தமிழக அரசுக்கு...

நாளுக்கு நாள் எகிறும் தொற்று போலவே மரணங்களும்.

மக்களைத் தாண்டி மக்களின் பிரதிநிதிகளையும் வளைக்கும் தொற்று அபாயகரம்.

நிலைமை கை மீறுவதான காட்சி.

எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்கிற அச்சம்.

ஆங்கில மருந்துகளோ இன்னும் ஆய்வில்.

அவர் சொன்னதில் கொஞ்சம் குரல் கூடியிருக்கலாம்.

அரசுக்கு அவரின் பேச்சு சங்கடப்படுத்தியது என்பதை யாவரும் அறிவோம்.

ஆயினும் ‘என்னிடம் தொற்று நோய்க்கு மருந்து இருக்கிறது’ என்றுதான் சொன்னார்.

அது தம் மருந்து மீதான அவரின் அதீதம்தான்.

பிரஜைகளை மன்னிப்பதும் தானே, மன்னர்.

குண்டர் சட்டத்தோடு, காவல்துறையின் கட்டடியில் இருந்துகூட சித்தர் திருத்தணிகாசலத்திற்கு தொற்று மருத்துவம் பார்க்க ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம்தானே...

எல்லா நோய்களுக்கும் தழைகளும் வேர்களுமாய் மருந்து விளைந்த மண்தானே இது.

பாரம்பரியமான ஏதேனும் ஒரு வேர், தழை அவரிடம் இருந்து விட்டால்... இந்த இக்கட்டுக்கு பேருதவிதானே...

கட்டுக்கதையாக இருக்கும் பட்சத்தில் காலத்துக்கும் வெளிவராதபடிக்கு அவரை கட்டடியிலேயே போட்டு விடுங்கள்.

இது தமிழக அரசுக்கு நடுநாட்டு எழுத்தாளனின் தாழ்மை விண்ணப்பம்''.

இவ்வாறு கண்மணி குணசேகரன் தனது பதிவில் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in