Published : 13 Jun 2020 22:02 pm

Updated : 13 Jun 2020 22:02 pm

 

Published : 13 Jun 2020 10:02 PM
Last Updated : 13 Jun 2020 10:02 PM

குடிக்குத் தீர்வு; முடிக்கு இல்லையா?- சென்னை வாழ் சாதாரணனின் அலைச்சல் குறிப்புகள்

corona-and-hair

கரோனா, கரோனா என்று சீனா கதறியபோது, அது எங்கோ வேற்றுகிரகத்தில் உள்ளது என்ற தைரியத்தில் இங்கே பெரும்பாலானோர் இருந்தனர். நானும் அந்தப் பெரும்பாலானோரில் ஒருவன். மார்ச் மாதம் இத்தாலி முடங்கியது. அமெரிக்கா அலறியது. உலக சுகாதார நிறுவனம் கரோனாவைக் கொள்ளைநோய் என் அறிவித்தது. கேரளாவையும் கரோனா எட்டிப் பார்த்தது. அப்போதுதான் உள்ளூர சற்று உதறல் எடுக்கத் தொடங்கியது.

வீட்டிலிருந்தே வேலை பாருங்கள் என்று அலுவலகத்தில் சொல்லப்பட்டபோது, கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது என மனத்துக்குள் மணி அடித்தது. அதே சமயத்தில் முதல் லாக்டவுனும் அறிவிக்கப்பட்டது. வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருள், காய்கறி, பிஸ்கட், மாஸ்க் என அனைத்தையும் மக்கள் வாங்கிக் குவித்த காலகட்டம் அது. வீட்டுக்குத் தேவையானதை நானும் வாங்கினேன். காய்கறிக் கடை வீட்டுக்கு அருகில் இருந்ததால், மூன்று நாட்களுக்கு ஒருமுறை வாங்கினால் போதும் எனத் தீர்மானித்தோம்.


அமைதி அளித்த தீபம்

மோடி அவ்வப்போது தொலைக்காட்சியிலும் வானொலியிலும் மக்களின் மனத்தோடு பேசியதாலோ என்னவோ, லாக்டவுன் 2, 3, 4, 5 என லாக்டவுகள் நீட்டிக்கப்பட்டபோதும் அது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அச்சத்தில் மனம் உழன்றபோது, கை தட்டச் சொல்லி என்னுடைய அச்சத்தை அவர் அகற்றினார். நாளையைக் குறித்த நிச்சயமின்மை என்னுடைய நிம்மதியைக் குலைத்தபோது, தீபம் ஏற்றச் சொல்லி மனத்துக்கு அமைதியை அளித்தார். இது போதாது என்று, வானிலிருந்து பூக்களைத் தூவியும் வண்ணங்களைப் பொழிந்தும், உனக்காக நான் இருக்கிறேன் என நம்பிக்கையை அளித்தார்.

இடுக்கண் வருங்கால் நகுக

இது போதாது என்று, ’இடுக்கண் வருங்கால் நகுக’ என்பதை நிரூபிப்பது மாதிரி, முல்லை போல் மலர்ந்த தன்னுடைய சிரிப்பால், நம்முடைய முதல்வர் அடிக்கடி பேட்டி அளித்து, எனக்கு உற்சாகத்தை அளித்தார். கரோனா தொற்று 400-க்கும் குறைவாக இருந்தபோது, இன்னும் மூன்று நாட்களில் கரோனாவை முற்றிலும் கட்டுக்குள் கொண்டுவந்து விடுவோம் எனத் தன்னம்பிக்கையுடன் பேசினார். அவரின் தன்னம்பிக்கையைக் கரோனா பொய்த்துப் போகச் செய்தாலும், அவருடைய வார்த்தைகள் அளித்த நம்பிக்கை என்னுள் இன்னும் ஒளிர்ந்துகொண்டுள்ளது. சொல்லப்போனால், எந்தச் சூழலையும் எதிர்கொள்ளும் தைரியத்தை அளித்ததே ”மூன்று நாட்களில் கரோனாவை முடிவுக்குக்கொண்டு வந்துவிடுவோம்” என்ற அவருடைய வார்த்தைகள்தாம்.

அடம்பிடித்த மகள்

எனக்காகப் பகல், இரவு பாராமல் உழைக்கும் பிரதமரும், முதல்வரும் இருக்கும்போது எனக்கு என்ன பயம் இருக்க முடியும். வீட்டினுள் முடங்கியிருந்தபோது, ‘குறையொன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா’ எனப் பாடும் மனநிலையில்தான் இருந்தேன். ஆனால், இந்த நிலையை, என்னுடைய மகளின் விருப்பம் திடீரென்று மாற்றியது. “தலையில் முடி அதிகம் வளர்ந்து, உங்களைப் பார்ப்பது வேறு யாரையோ பார்ப்பது மாதிரி இருக்குது. பயமாகவும் இருக்குது. தயவுசெய்து முடி வெட்டுங்க” என்று ஒரு இரவில் என்னுடைய மகள் சொன்னார்.

இப்போது சலூன் எதுவும் இருக்காது என்று புரியவைக்க முயன்றேன். மகள் விடுவதாக இல்லை. அழுது அடம்பிடிக்கத் தொடங்கினார். பிரதமரும் முதல்வரும் நமக்காகப் படும் கஷ்டங்களை எடுத்துக் கூறி, அவர்கள் சொல்வதைக் கடைப்பிடித்து வீட்டிலேயே இருக்க வேண்டியது நம்முடைய கடமை எனத் தெரிவித்தேன். ”அப்படியானால், அவர்களுக்கு மட்டும் எப்படி முடி எப்போதும் ட்ரிம்மாக உள்ளது?” என்று பதிலுக்குக் கேள்வி கேட்டார். என்னடா தலைமுடிக்கு வந்த சோதனை என நினைத்துக்கொண்டு, நாளைக்கு எப்படியாவது முடி வெட்டி விடுகிறென் எனச் சொல்லி சமாதானப்படுத்தினேன்.

சலூன் தேடும் படலம்

காலையில் எழுந்தவுடனே மீண்டும் என்னை நச்சரிக்கத் தொடங்கினார். நானும் சலூன் கடையைத் தேடி தெருத்தெருவாக அலைந்தேன். சலூன் கடைகளுக்குத்தாம் எத்தனை பெயர்கள். சிசர்ஸ், டிரிம் கட், மென் & பியர்ட், குளோ, டோனி, கிரீன் டிரெண்ட், நேச்சுரல்ஸ் என வாயில் நுழையாத பல பெயர்களை கூகுள் காட்டியது. சரி பெயர் என்னவாக இருந்தால் என்ன, கடை இருந்தால் போதுமே என்ற மனநிலையில் அந்தக் கடைகளுக்குச் சென்றேன். எல்லாக் கடைகளும் மூடியே இருந்தன. என்ன செய்வது என்று தெரியவில்லை. மதுப்பிரியர்களின் நலனுக்காக, டாஸ்மாக்கைத் திறந்த நம்முடைய முதல்வர், ஏன் ஒரு சாதாரண குடிமகனின் முடிப் பிரச்சினைக்கான தீர்வைப் பற்றி நினைக்கவில்லை என்ற கேள்வி என்னுள் எழுந்தது. அவரின் தலைக்கு மேல் எவ்வளவு வேலை இருக்கும் என்ற என்னுள் உதித்த எண்ணம், அந்தக் கேள்வியை முளையிலேயே கிள்ளி எறிந்தது.

வீட்டுக்குப் போனால் மகள் அழுவார். முடி வெட்டி வரக்கூடத் துப்பு இல்லை என இல்லாளும் நினைக்கக்கூடும். இது ஒரு தன்மானப் பிரச்சினை என்பதால், முடி வெட்டாமல் வீடு திரும்புவதில்லை என முடிவு எடுத்தேன். ஒரு முட்டுச் சந்தில் முட்டி நின்றபோதுதான், ஒரு வீட்டின் மேல்மாடியில் தொங்கிய ஒரு அந்தப் பழைய பெயர்ப்பலகை கண்ணில்பட்டது. ‘சக்தி முடி திருத்தகம்’ என்ற பெயரைப் படித்தவுடன் என்னுடைய மனம் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தது.

மாடி ஏறிச் சென்றபோதுதான், அது சலூன் கடைக்காரரின் வீடு என்று தெரிந்தது. அவருக்கு வயது 70 இருக்கக்கூடும். அங்கே சூழ்ந்திருந்த வறுமையையும் பசியையும் அவருடைய கண்களும் வயிறும் காட்டின. “யார் நீங்க? என்ன வேண்டும்?” என்று கேட்டார். முடி வெட்ட வேண்டும் என்று சொன்னேன். “முடி வெட்ட முடியாதுங்களே. எங்க சங்கத்துல வெட்டக்கூடாதுனு சொல்லியிருக்காங்க’ எனத் தளர்வுடன் சொன்னார். எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் அவர் சம்மதிப்பதாகத் தெரியவில்லை.

கைகொடுத்த மனைவி

வழிகள் எல்லாம் அடைபட்டதால், வேறு வழியின்றி வீட்டுக்கே திரும்பினேன். கதவைத் திறந்த மகள் ஏமாற்றத்துக்கு உள்ளாகி அழத் தொடங்கினார். வேறு வழியின்றி, நானே முடி வெட்டிவிடுகிறேன் என என்னுடைய மனைவி உதவிக்கு வந்தார். எனக்குப் பயமாக இருந்தாலும், வேறு வழியில்லை. முடி வெட்டுவது எப்படி எனப் பல வீடியோக்களை மனைவி யூடியூப்பில் பார்க்கத் தொடங்கியபோது என்னுடைய இதயத்துடிப்பு எகிறத் தொடங்கியது.

ஒருவேளை சரியாக வரவில்லையென்றால், மொட்டை அடித்துவிடலாம் எனத் தீர்மானித்து மனைவியிடம் தலையைக் கொடுத்தேன். முடி வெட்டும்போது, கண்ணாடி பார்க்கும் வாய்ப்பு எனக்கு மறுக்கப்பட்டது. 30 நிமிடங்களுக்கு மேலாக இந்த முடிவெட்டும் படலம் நீடித்தது. இதுபோதும் என்று மனைவி முடிவு செய்த பிறகு, எனக்குக் கண்ணாடி வழங்கப்பட்டது. மிகுந்த நேர்த்தியுடன் வெட்டப்பட்டு இருந்தது, எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது. இன்ப அதிர்ச்சி என்றே சொல்லலாம். மகள் ஓடிவந்து சூப்பர் என்றாள். ஏற்றப்பட்ட தீபங்களும், விண்ணிலிருந்து தூவப்பட்ட மலர்களும் அவ்வளவு எளிதில் என்னைக் கைவிட்டுவிடுமா என்ன?

தொடர்புக்கு: mohamed.hushain@hindutamil.co.in


தவறவிடாதீர்!

Corona and hairகரோனாவும் தலைமுடியும்Blogger specialகரோனா வைரஸ்CoronavirusCovid 19

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

frog

பளிச் பத்து 34: தவளை

வலைஞர் பக்கம்

More From this Author

x