

மேரி மேலனை (1869-1938) மேதையென்று சொல்வதை சிலர் மறுக்கலாம். அயர்லாந்தில் பிறந்த அவர் மிகச் சிறந்த சமையல் கலைஞர் என்பதில் சந்தேகமில்லை. அதன் காரணமாகத்தான் அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்த பணக்காரக் குடும்பங்களில் சமையலராக அவருக்கு வேலை கிடைத்தது.
1900-களில் அவர் வேலை பார்த்த வீடுகளைச் சேர்ந்தவர்களுக்கு டைபாய்டு காய்ச்சல் திடீரெனத் தொற்றியது. நியூயார்க்கில் அந்தக் காலத்தில் டைபாய்டுக் காய்ச்சல் பற்றிப் பெரிதாகத் தெரியாத நிலையே இருந்தது.
அப்போது மருத்துவ ஆராய்ச்சியாளர் ஜார்ஜ் சோபர், டைபாய்டு தொற்றுப் பரவலுக்கு மேரியே காரணம் என்று கண்டறிந்தார். இத்தனைக்கும் அந்தக் காய்ச்சல் மேரியை எந்த வகையிலும் பாதித்திருக்கவில்லை, மேரிக்கு வெளிப்படையான நோய் அறிகுறிகள் எதுவும் இல்லை.
இன்றைக்கு கோவிட்-19 தொற்றில் இந்தியாவில் 80 சதவீதத் தொற்று உள்ளோர் எந்த அறிகுறியும் இல்லாமல் இருப்பது போலவே மேரியும் இருந்தார். அந்தக் காய்ச்சல் கடைசிவரை அவரை பாதிக்கவில்லை.
முதன்முறை அவர் பிடிக்கப்பட்டு, அவருடைய விருப்பத்துக்கு மாறாக மருத்துவமனையிலேயே மூன்று ஆண்டுகள் அடைத்துவைக்கப்பட்டார். அதன் பிறகு அவர் வெளியேற அனுமதி வழங்கப்பட்டது. மருத்துவமனையிலிருந்து வெளியேறிய பிறகு, அவருக்கு சமையலர் வேலை எங்குமே கிடைக்கவில்லை. அதன் காரணமாக சலவையாளராக மேரி வேலைசெய்யத் தொடங்கினார். ஆனால், போதுமான வருமானமில்லை.
இதன் காரணமாக பெயரை மாற்றிக்கொண்டு மீண்டும் சமையலர் வேலையில் சேர்ந்தார் மேரி. அப்போது மீண்டும் அவர் சென்ற வீடுகளில் டைபாய்டு காய்ச்சலால் மக்கள் அவதிப்படத் தொடங்கினார்கள். இந்தப் பின்னணியில் மேரிக்கு நோய்த் தடுப்பாற்றல் அதிகமாக இருந்ததையும், அவர் வேலை செய்த பணக்கார வீடுகளில் நல்ல உணவு, பாதுகாப்பு இருந்தவர்களுக்குக்கூட நோய்த் தடுப்பாற்றல் குறைவாக இருந்ததையும் கவனிக்க வேண்டும்.
1915இல் மீண்டும் அவர் பிடிக்கப்பட்டு வாழ்க்கை முழுக்க மருத்துவமனையில் தனிமைக் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். அத்துடன் 'டைபாய்டு மேரி' என்று தூற்றவும்பட்டார்.