

கரோனா காலகட்டத்தில் பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்திருப்பதைப் போலவே இறைச்சியின் விலையும் அதிகரித்துவிட்டது. குறிப்பாக, பிராய்லர் கோழியின் விலை இரு மடங்காகிவிட்டது. கரோனாவுக்கு முன் கிலோ 120 ரூபாயாக இருந்த பிராய்லர் கோழி இன்றைய விலை ரூ.240 ஆகியிருக்கிறது. ஆட்டிறைச்சி 600 ரூபாயில் இருந்து ஆயிரமாக உயர்ந்து இப்போது 700, 800 என்று நிலைபெற்றிருக்கிறது.
இந்தத் துயர காலத்திலும் மக்களை வஞ்சிக்காமல் இருப்பது மாட்டிறைச்சிதான். கரோனாவுக்கு முன்னர் கிலோ 200 முதல் 250 ரூபாய் வரையில் விற்பனையான மாட்டிறைச்சி இப்போதும் அதே விலையில்தான் விற்பனையாகிறது. இத்தனைக்கும் கரோனாவுக்கு எதிராகப் போராடத் தேவையான ஜிங்க் சத்தும், புரதச் சத்தும் மாட்டிறைச்சியில் அதிகம் உள்ளது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதுபற்றி மதுரையைச் சேர்ந்த அழகேசன் என்பவர் கூறியபோது, "நான் மருந்து விற்பனைப் பிரதிநிதி. மாட்டிறைச்சி சாப்பிடுவது இழிவானது என்று கருதும் குடும்பப் பின்னணியில் பிறந்தவன்தான் நான். ஆனால், வெளியூர்களில் பேச்சிலராகத் தங்கி வேலை பார்த்தபோது, என்னுடைய ஊதியத்தில் அடிக்கடி ஓட்டல்களில் ஆட்டிறைச்சி சாப்பிடுவது கட்டுப்படியாகாது என்பதால், மாட்டிறைச்சி சாப்பிடப் பழகினேன். பிறகு அதன் ருசிக்கு அடிமையாகிவிட்டேன். இப்போது எனக்குத் திருமணமாகிக் குழந்தைகள் இருக்கிறார்கள்.
'இந்த நேரத்தில் தினமும் ஒரு முட்டை, இரண்டு தம்ளர் பால், அடிக்கடி மாட்டிறைச்சி சாப்பிடுவது நல்லது' என்று நான் சந்திக்கிற மருத்துவர்கள் எல்லாம் சொல்கிறார்கள். எனவே, வாரந்தோறும் அரைக்கிலோ மாட்டிறைச்சி எடுப்பதை வழக்கமாக்கியிருக்கிறேன். என் மனைவியும் அதனை ஏற்றுக்கொள்கிறார். '2 கிலோ சிக்கன் எடுப்பது, ஒரு கிலோ மட்டன் எடுப்பது, அரை கிலோ மாட்டிறைச்சி எடுப்பது மூன்றும் ஒரே திருப்தியைத் தருகிறது' என்று என் மனைவி சொல்கிறார்.
கடந்த இரண்டு மாதமாக மதுரையில் மீன், கோழி, ஆடு என்று எல்லா இறைச்சிகளின் விலையும் கன்னாபின்னாவென்று உயர்ந்திருக்கிறது. ஆனால், மதுரையில் நான் வாங்குகிற கடையில் கடந்த 3 மாதமாக மாட்டிறைச்சி ஒரே விலை, அதாவது கிலோ 230 ரூபாய்தான். நியாயமான விலையில், தரமான உணவு கிடைக்கிறது.
உணவு என்பது அவரவர் தனிப்பட்ட விஷயம். எனவே, இதைத்தான் சாப்பிட வேண்டும் என்று நான் யாரையும் வற்புறுத்துவதில்லை. ஆனால், மாட்டிறைச்சி எவ்வளவு மலிவானது என்பதையும், கேரளம் கோவிட்டுடன் போராட அது எவ்வளவு உதவியாக இருக்கிறது என்பதையும் என் நண்பர்களிடம் சொல்லத் தவறுவதில்லை” என்றார்.