Published : 10 Jun 2020 06:08 PM
Last Updated : 10 Jun 2020 06:08 PM

புட்டிப் பால் அருந்திய புள்ளிமான் குட்டி: நெகிழவைக்கும் பழங்குடியினர் வாழ்க்கை

இயற்கையோடு இயைந்து வாழ கொடுத்து வைத்திருக்க வேண்டும். அதிலும் வன விலங்குகளோடு இயல்புநிலை மாறாமல் வாழும் வாழ்க்கை அபூர்வமானது. அதை இன்னமும் பழங்குடி மக்கள் வழுவாது கடைப்பிடித்து வாழ்ந்து வருகிறார்கள் என்பதற்கு அவ்வப்போது ஏதேனும் சான்றுகள் கிடைக்கத்தான் செய்கின்றன. அப்படித்தான் ஒரு புள்ளிமான் குட்டிக்கு ஒரு தாயும், சிறுமியும் பால் புட்டி கொண்டு பாலூட்டும் புகைப்படம் ஒன்று நம் பார்வையில் பட்டது.

கோவை மாவட்டம் டாப்ஸ்லிப், எருமைப்பாறை செட்டில்மென்டில் வசிக்கும் காடர் பழங்குடியினத்தைச் சேர்ந்த காட்டுக்குட்டி என்பவர், பொள்ளாச்சி சப் கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று வந்திருந்தார். பழங்குடிகளுக்கான வன உரிமைகள் மற்றும் பட்டா வழங்கல் குறித்த பேச்சுவார்த்தைகாக வந்திருந்த அவரின் செல்போனில்தான் இந்தப் புகைப்படத்தைப் பார்க்க முடிந்தது.

இதுகுறித்து காட்டுக்குட்டி பேசுகையில், “இது நடந்து ஒரு வருஷம் இருக்கும் சார். வழி தவறி எங்க வீட்டுக்கே வந்தது இந்த மான்குட்டி. பொறந்து 2 வாரக்குட்டியா இருந்திருக்கும். ரொம்ப சின்னக் குட்டியா இருக்கேன்னு பால் புட்டியில பால் ஊத்திக் கொடுத்தோம்; குடிச்சது. அடுத்த நாளும் வந்துடுச்சு. ஆனா, அப்ப மான் குட்டிக்கு வயிற்றுப்போக்கு இருந்ததைப் பார்த்து பால் சரியில்லைன்னு நிறுத்திட்டோம். அதுக்குப் பதிலா கஞ்சித் தண்ணி கொடுத்தோம். அப்புறம் பார்த்தா காலையில சாயங்காலம் மட்டுமல்ல. சில சமயம் ராத்திரியில கூட வந்து எங்க குடிசை வீட்டு முன்னால நிற்க ஆரம்பிச்சிடுச்சு.

இப்படி பதினைஞ்சு நாள் வந்துட்டிருந்தது. அப்புறம் அது வரவேயில்லை. நாங்களும் எதிர்பார்த்து ஏமாந்துட்டோம். சிறுத்தையோ, செந்நாயோ புடிச்சுட்டுப் போயிருக்கும்னு மனசைத் தேத்திக்கிட்டோம்” என்றார் நெகிழ்ச்சியுடன். தொடர்ந்து, தான் வசிக்கும் பகுதிக்கு வந்து செல்லும் வனவிலங்குகள் குறித்தும் பேசினார்.

“எருமைப்பாறை பழங்குடி செட்டில்மென்டில் 25 வீடுகள். இதுக்கும் கேரளா பார்டர் பரம்பிக் குளத்திற்கும் 1 கிலோ மீட்டர் இடைவெளிதான். இங்கே எந்நேரமும் காட்டுப் பன்றிகள் சுற்றிக்கொண்டு இருக்கும். நாங்கள் கஞ்சித் தண்ணி ஊற்றினால்தான் அந்த இடத்தை விட்டு நகரும். அது மட்டுமல்ல, குரங்குகள் எக்கச்சக்கம். ஏமாந்தா பருப்பு, அரிசி, சோறு எல்லாம் காலி பண்ணிடும். டாப்ஸ்லிப் புல்லு மொத்தையில மான்கள் ஆயிரக்கணக்குல இருக்கும். ராத்திரி கூட்டம் கூட்டமா மேயும். ஆனால், வீட்டுப்பக்கம் மான்கள் வராது. இந்தக் குட்டிதான் அதிசயமா அப்ப வீடு தேடியே வந்துச்சு.

என் சம்சாரம் தனலட்சுமி வச்சது அரிசிக்கஞ்சிதான். அதெல்லாம் நல்லா சாப்பிட்டுச்சு. முதல் நாள் பால்குடிச்சப்ப செல்போன்லதான் போட்டோ எடுத்தேன். இத்தனை நாள் வெளியில விடலை. அதுல என்ன பெரிசா இருக்குன்னு நினைச்சேன். அவ்வளவுதான்” என்று இயல்பாகச் சொன்னார் காட்டுக்குட்டி.

“சரி, உங்க காட்டுல கரோனா கட்டுப்பாடுகள் எப்படி?” என்று கேட்டேன். “கரோனா மாஸ்க்காவது ஒண்ணாவது. அதெல்லாம் எங்க ஜனங்க கண்டுக்கிறது இல்லை. ஆனா, கிருமிய பத்தி ஜனங்களுக்கு நல்லா தெரியுது. ஏன்னா கேரள போலீஸ் ரொம்ப கன்ட்ரோலா இருக்கு. அந்தப் பக்கம் எங்க சொந்தத்துலயே ரெண்டு மாசத்துல 2 சாவு ஆயிருச்சு. கேரள போலீஸ் விடலை. இழவுக்கும், கருமாதிக்கும் எதுக்குமே போகலை” என்றார் வெள்ளந்தியாக.

இவர்களின் வாழ்நிலையைப் பற்றி பழங்குடிகள் நல ஆர்வலர் தனராஜ் பேசுகையில், “வனங்களில் வனவிலங்குகளுடன் பழங்குடிகள் உரையாடுவதும், அதனுடனே இயைந்து வாழ்வதும் ரொம்ப சகஜமானது. அதை இப்போதுள்ள மக்களும், அதிகாரிகளும்தான் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். பழங்குடிகளால்தான் வனம், வனவிலங்குகளுக்கு ஆபத்து என்ற தவறான கருத்தைப் பரப்புகிறார்கள்.

ஆழியாறு சுற்றுவட்டாரத்தில் உள்ள அட்டகட்டி, மாவடப்பு, குழிப்பட்டி பழங்குடி கிராமங்களில் போகும்போதெல்லாம் பார்க்கிறேன். ஒவ்வொருவர் வீடுகளிலும் அப்பகுதியில் உள்ள வனவிலங்குகள், பறவைகள் வந்து போகும். புலையர்களின் வீடுகளில் அணில் பிள்ளைகள் வளர்ப்பதைப் பார்த்திருக்கிறேன். விசாரித்தால், ‘இது அணில் குஞ்சு சார், இதோட தாய் இதை விட்டுட்டுப் போயிருச்சு. அதனால அது இங்கே வளருது. பெரிசாச்சுன்னா அதுவே காட்டுக்குள்ளே போயிடும்’னு சாதாரணமா சொல்லுவாங்க. ‘வழிதவறி வரும் விலங்குகள் எதுவானாலும் வளர்த்து காட்டுக்குள்ளே அனுப்பறதுதான் எங்க வேலை’னும் சொல்லுவாங்க.

காடர்கள் வசிக்கும் பகுதியில காட்டுப்பன்றிகள் வந்து அவங்க வீட்டு சுவத்தை எல்லாம் தோண்டிட்டு இருக்கும். யாரும் பன்றிகளை விரட்ட மாட்டாங்க. ராஜஸ்தான்ல ‘பிட்ஸ்நோ’ன்னு ஒரு பழங்குடிச் சமூகம் இருக்கு. அந்த இனத்தைச் சேர்ந்த பெண்கள் ஒரு மார்பகத்துல தன் குழந்தைக்கும், இன்னொரு மார்பகத்துல மானுக்கும் பால் கொடுப்பாங்க. அப்படி படம் எல்லாம் வெளியாகி அது உலகப் பிரசித்தி பெற்றது. மான் வழிதவறி வந்துடுச்சுன்னு அடைச்சுப் போட மாட்டாங்க. சுத்த விட்டுருவாங்க. அது ஓடிப்போனா ஓடிப்போகட்டும்னு நினைப்பாங்க. அது தங்களுக்குச் சொந்தமானதுன்னு நினைக்கவும் மாட்டாங்க. சல்மான் கான், மான் வேட்டையாடியபோது அவரைக் கையும் களவுமா பிடிச்சு ஒப்படைச்சது இந்த பிட்ஸ்நோ பழங்குடிகள் தான். அவங்களுக்கு மான்கள் தெய்வம் மாதிரி” என்றார்.

இயற்கையின் மேன்மையை உணர்ந்தவர்களுக்குச் சக உயிர்கள் மீது இயல்பான அன்பு இருப்பதில் வியப்பில்லைதான்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x