Last Updated : 09 Jun, 2020 05:04 PM

 

Published : 09 Jun 2020 05:04 PM
Last Updated : 09 Jun 2020 05:04 PM

தென்மாவட்டத்துக்குத் திரும்புபவர்களின் அன்பான கவனத்துக்கு!- ஒரு சாமானியனின் அலைச்சல் அனுபவங்கள்

சென்னையில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரிப்பதால் பொதுச் சமூகத்தின் மனத்தில் உருவாக்கப்பட்ட பயம் கோரத் தாண்டவம் ஆடத் தொடங்கிவிட்டது. சென்னை பாதுகாப்பான நகரமல்ல எனக் கருதிப் பலரும் தங்களது சொந்த ஊர்களை நோக்கிப் பயணப்படுகிறார்கள். அவர்களில் ஒருவராக நானும் சென்னையிலிருந்து தென்காசி செல்வதற்காக, தமிழக அரசு இ-பாஸ் பெறுவதற்காக அறிவித்துள்ள வழிமுறைகளைப் பின்பற்றி பாஸ் பெற்றுக்கொண்டு, வாடகை கார் ஒன்றை அமர்த்தி வயதான பெற்றோருடன் கிளம்பினேன். இரவின் பயணம் ஆபத்தென்று கருதி அதிகாலை ஐந்தரை மணி அளவில் புறப்பட்டோம்.

வழியெங்கும் கிட்டத்தட்ட பெருங்களத்தூர் தொடங்கி விழுப்புரம்வரை பலர் இருசக்கர வாகனத்திலும் நான்கு சக்கர வாகனத்திலும் குடும்பம் குடும்பமாக விரைந்துகொண்டிருந்தனர். முகக் கவசம் அணிந்துகொண்டும் வண்டியில் வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் எல்லாம் சுமைகளைத் திணித்துக்கொண்டும் தனி மனித இடைவெளியைப் பேண வாய்ப்பில்லாதபடியும் சென்றுகொண்டிருந்தார்கள். பின்னிருக்கைகளில் அமர்ந்திருந்த பலர் கைகளில் தொலைக்காட்சிப் பெட்டிகளை ஏந்தியிருந்தார்கள். தொண்ணூறுகளுக்குப் பின்னே கட்டில், மெத்தை, மேசை, நாற்காலி வரிசையில் ஒரு எளிய குடும்பத்தின் அத்தியாவசியப் பொருள் பட்டியலில் அதுவரைக்கும் ஆடம்பரப் பட்டியலில் இடம்பெற்றிருந்த தொலைக்காட்சிப் பெட்டி இடம்பெறத் தொடங்கியது இங்கு நினைவுகொள்ளத்தக்கது. எனவே, தொலைக்காட்சிப் பெட்டியை ஏந்திச் செல்லும் பலர் சென்னையைவிட்டு விலகிச் செல்கிறார்களோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.

பரனூர் முதல் திருமங்கலம் வரையிலும் பரந்துவிரிந்திருந்த சுமார் ஏழெட்டு டோல் கேட்களில் வாகன வரிசையில் காத்திருந்து பணம் செலுத்த நேர்ந்தது. திருமங்கலம் வரையிலும் பெரிய தொந்தரவு இல்லை. அங்கிருந்து தென்காசி செல்லும் சாலையில் கார் திரும்பிய பின்னர் எதிரில் மோதுவதுபோல் விரைந்துவந்த வாகனங்கள் அச்சமூட்டின. பொதுவாக, அனைத்துச் சோதனைச் சாவடிகளிலும் பெரிய விசாரணையின்றி சுலபமாக அனுமதித்துவிட்டார்கள். மதியம் இரண்டு மணிவாக்கில், தென்காசியின் நுழைவாயிலான சிவகிரியில் அமைந்திருந்த சோதனைச் சாவடியில் நாங்கள் நுழைந்தபோது, சிக்கல் ஏற்பட்டது.

சென்னையில் கரோனா தொற்று நாள்தோறும் ஆயிரம் பேருக்கு மேல் பரவத் தொடங்கியதால் சென்னையிலிருந்து வருவோரை முறையான பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்க வேண்டும் என்பது ஆட்சியரின் உத்தரவு என அங்கிருந்த அலுவலர்கள் தெரிவித்தனர். சென்னையில் இருந்து வந்தவர்களைக் காத்திருக்கவைத்தனர். நினைத்தபடி எளிதாக ஊர் திரும்ப இயலாதோ என்னும் அச்சம் மெதுவாக அரும்பத் தொடங்கியது.

சென்னையில் இருந்து வந்தவர்களின் ஆவணங்களைச் சோதித்துவிட்டு முதலில் தெர்மல் ஸ்கேனர் மூலம் சோதித்துப் பார்த்தனர். பின்னர் அருகில் உள்ள தனியார் கல்லூரிக்குச் சென்று கரோனா தொற்றுப் பரவலுக்கான சோதனையை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரினர். அலுவலர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் வழிகாட்டிச் சென்றார். அவரைப் பின் தொடர்ந்து வாகனங்களில் சென்றோம். சோதனைக்கென அழைத்துச் சென்ற தனியார் கல்லூரியில் இருந்த அரசு ஊழியர்கள் சிலர் மேசை மீது நீளமான நோட்டுப் புத்தகங்களை வைத்துக்கொண்டு ஒவ்வொருவரது பெயரையும் குறித்துக்கொண்டனர். ஆனால், கரோனா சோதனைக்கான எந்த முன்னெடுப்பும் அந்த மையத்தில் இல்லை. அதன் பின்னர் தான் இன்று கரோனா சோதனை நடைபெறாது என்பதையும் அது நாளைக்குத் தான் என்பதையும் தெரிவித்தனர். அதுவரை முகாமில் அமைக்கப்பட்டுள்ள அறைகளில் எல்லோரும் தங்கவைக்கப்படுவார்கள் என்றும் கூறினார்கள்.

ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தனித் தனி அறை ஒதுக்கப்படும் என்று சொல்லி அந்த அறைக்கு அழைத்துச் சென்றனர். உள்ளே நுழைந்தவுடன் ஒரு அறையும் அதைத் தொடர்ந்து மற்றோர் அறையும் இருந்தன. தனிமைப்படுத்தலுக்காக அமைக்கப்பட்டிருக்கும் மையத்தில், ஒரு வாயில் இரு அறைகள். அறையில் ஒரு இரும்புக் கட்டிலும், பெஞ்சு ஒன்றும் அடுத்தடுத்து இணைத்துப் போடப்பட்டிருந்தன. இரண்டு நாற்காலிகளும், மேசை ஒன்றும் காணப்பட்டன. கூரையில் மின் விசிறி ஒன்று இருந்தது. அந்த அறையையும் அறைக்கு வெளியே இருந்த பொதுவான கழிப்பறையும் பார்த்தபோது அங்கே தங்குவது கடினமாக இருக்கும் என்ற எண்ணமேற்பட்டது.

அம்மா (69), அப்பா (74) இருவரது முகத்திலும் அச்சரேகைகள் அடர்ந்து பரவத் தொடங்கின. இங்கே எப்படிடா தங்க முடியும்? என்று பலவீனமாக முணுமுணுத்த அவர்களது பதற்றத்தையும் பயத்தையும் தணிப்பதற்காகச் சில சமாதான மொழிகளைச் சொன்னேன். ஆனால், நிலைமை கட்டுக்குள் இல்லை என்பது தெரிந்தது. ஊழியர்களிடம் இங்கே தங்க முடியாது என்றும் எனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு மறுநாள் வந்து கரோனா சோதனை எடுக்க அனுமதிக்கும்படியும் கேட்டுக்கொண்டேன். ஆனால், அரசின் விதிமுறைகளில் இந்த வேண்டுகோளுக்கு இடமிருக்கவில்லை. அலுவலர்கள், “நாங்க இதுல ஒண்ணும் பண்ணமுடியாது சார். எங்களுக்கு என்ன சொல்லியிருக்காங்களோ அதைத் தான் செய்ய முடியும் வேறு ஏதேனும் சொல்ல வேண்டுமென்றால் உயரதிகாரிகளிடம் பேசிக்கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டனர்.

முகாமில் இருக்க மனம் ஒப்பாதவர்கள் ‘பெய்டு குவாரண்டைன்’ என்று சொல்லப்பட்ட தனியார் விடுதியில் தங்கிக்கொள்ளலாம் என்று அலுவலர்கள் அறிவித்தார்கள். தென் மாவட்டங்களில் தனிமைப்படுத்துதலுக்காக இப்படி ‘பெய்டு குவாரண்டைன்’ அனுமதிக்கப்படுகிறது என்கிறார்கள். வீட்டிலிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள வாய்ப்பிருப்பவர்களிடம், எக்காரணத்தைக் கொண்டும் வீடுகளில் சென்று தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்க இயலாது என்று தெளிவாகவும் உறுதியாகவும் தெரிவித்துவிட்டார்கள். சென்னையிலிருந்து சொந்த காரில் வந்த ஒருவர் தனது குடும்பத்துடன் தனியார் விடுதியில் தங்கச் சம்மதம் தெரிவித்துச் சென்றுவிட்டார். எல்லோரையும் அப்படி உடனே முடிவெடுக்கவிடவில்லை பொருளாதாரச் சூழல்.

அடிப்படை வசதிகளே முறையாகப் பராமரிக்கப்படாத அந்த அறையில் தங்கினால் நிச்சயம் கரோனா தொற்றிவிடுமோ என்னும் அச்சவுணர்வு மேலெழுந்தது. இதற்கு முன்னர் அந்த அறையில் யார் தங்கியிருந்தார்களோ, அறையை முறையாகச் சுத்திகரித்திருப்பார்களா என்பன போன்ற சந்தேகங்கள் எழுந்தன. ஏனெனில், அங்கிருந்த ஊழியர்களே சானிடைஸரைத் தங்கள் சொந்தச் செலவில் வாங்குவதாகத் தெரிவித்தனர். தனியார் விடுதிக்குச் செல்லவா, வேண்டாமா என்ற குழப்பம்வேறு சேர்ந்துகொண்டது. இதிலிருந்து எப்படித் தப்பிப்பது என்று தெரிந்தவழிகள் எல்லாவற்றையும் பயன்படுத்தி முயன்று பார்த்தேன்.

இப்படியான முகாமில் தங்கித்தான் ஆக வேண்டும் என்னும் அரசின் பிடிவாதமான முடிவு எந்தவகையில் கரோனா பரவலுக்கு உதவும் என்பதை எவ்வளவு யோசித்தும் உணர்ந்துகொள்ள இயலவில்லை. வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வழியற்றவர்களுக்கு அரசு ஒரு முகாமை ஏற்படுத்தித் தருவது சரிதான். ஆனால், அனைவரையுமே போதுமான அடிப்படை வசதியற்ற முகாமில் தங்கச் சொல்லி வற்புறுத்துவது என்ன நியாயம்?

எளிதாக ஊர்திரும்பிவிடலாம் என்றிருந்த எண்ணமே என்னைப் பகடிசெய்யத் தொடங்கியது. ஒரு புறம் பெற்றோரின் பரிதாபமான தோற்றம், மறுபுறம் அடிப்படை வசதிகளே பூர்த்திசெய்யப்பட்டிராத முகாமின் தங்கும் அறை, இன்னொரு புறம் பூகோள உருண்டைபோல் மனத்துக்குள் சுழன்றுகொண்டிருந்த கரோனா வைரஸ் உருவம், இது போதாதற்கு எங்களைப் பத்திரமாக அழைத்துவந்த வாகன ஓட்டுநர் வேறு முடிந்தவரை விரைவில் அங்கேயிருந்து புறப்பட்டுவிட வேண்டும் இல்லையென்றால் தன்னையும் முகாமில் வைத்துவிடுவார்களோ என்னும் பயத்தில் நச்சரிக்கத் தொடங்கியது எல்லாமுமாகச் சேர்ந்து நெருக்கடி நிலையை வலுப்படுத்தத் தொடங்கியது.

நமது அரசும் அதன் அமைப்புகளும் கரோனா குறித்துப் பொது ஊடகங்களில் அளித்துவரும் நம்பிக்கைகளுக்கும் யதார்த்த நிலைக்கும் இடையே பாரதூரமான வேறுபாடு இருந்தது. தொடர்ந்து பல்வேறு வகையான முயற்சிகளுக்குப் பிறகு, எனது சொந்த ஊரில் உள்ள ஒரு முகாமுக்குச் செல்ல அதிகாரிகளிடம் அனுமதி கிடைத்தது. அங்கே சென்றுவிட முடிவெடுத்துப் பெற்றோருடன் புறப்பட்டேன். குறைந்தபட்சம் சொந்த ஊருக்காவது சென்றுவிடலாமே?

தென்காசியில் அமைந்திருந்த தனிமைப்படுத்துதல் முகாமுக்கு நாங்கள் வந்துசேர்ந்தபோது, மணி எட்டரை இருக்கும். தொடர்ந்த அலைச்சலால் சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய், கண் அழுத்த நோய் போன்ற சில பாதிப்புகளைக் கொண்ட அம்மாவும் வயது காரணமாக அப்பாவும் மிகவும் சோர்வுடன் காணப்பட்டார்கள். முகாமில் இருந்த சீருடை அணிந்த காவலர் ஒருவர் எனது பெயர் பெற்றோர் பெயர் உள்ளிட்ட விவரங்களைப் பெற்றுக்கொண்டார். எந்தச் சூழலிலும் வாகனத்தைவிட்டு நாங்கள் இறங்காமலும் அவரது அருகில் சென்றுவிடாமலும் பார்த்துக்கொண்டார். சென்னையிலிருந்த வந்தவர்களை கரோனா தொற்றுப் பரவியவர்களோ எனக் கருதும் அச்சவுணர்வு சொந்த மாவட்டத்து அரசு அலுவலர்களிடம் பரவியிருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டேன்.

அந்தக் காவலர், ‘‘அடுத்த நுழைவாயில் வழியே சென்று மாடியில் உங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் அறைக்குச் செல்லுங்கள். அது தனி அறைதான் டாய்லெட், பாத்ரூம் எல்லாம் தனியாக உள்ளது” என்று சொன்னார். எங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறை அமைக்கப்பட்டிருந்த மாடிக்குச் செல்லும் படிகளின் முன்னே பத்துப் பதினைந்து இளைஞர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். வயதான பெற்றோருடன் சுமைகளைத் தூக்கிக்கொண்டு நடுத்தர வயதுக்காரன் வாகனத்திலிருந்து இறங்கி நடந்து வந்த காட்சி அவர்களது இரக்கத்தைப் பெருமளவில் சுரக்கச் செய்திருக்கக்கூடும். அந்த முகாமில் பெற்றோருடன் நாங்கள் தங்குவது எங்களுக்கு எவ்வளவு பெரிய ஆபத்தாக முடியக்கூடும் என்பதை அவர்கள் விலாவாரியாக எடுத்துக்கூறினார்கள். நாங்கள் தங்கயிருந்த அறையை ஒட்டிய அறையில் இருந்த ஒருவர் அன்று காலையில்தான் கரோனா பாஸிட்டிவ் என்று அடையாளம் காணப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார் என்று அவர்கள் கூறியவுடன் கிட்டத்தட்ட நிராதரவான நிலையில் வயதான பெற்றோருடன் நின்றுகொண்டிருக்கிறேன் என்பதை உணர்ந்தேன். ஆபத்து சூழ்ந்துள்ளது. ஆனாலும், போராட வேண்டுமே ஒழிய அங்கே தங்கக் கூடாது என்று முடிவெடுத்தேன்.

அங்கிருந்து மீண்டும் காவலர் அமர்ந்திருந்த இடத்துக்கு முழுமையாக களைத்துப்போய்விட்ட பெற்றோருடன் நடக்கத் தொடங்கினேன். இரண்டிடங்களுக்கும் இடையே சுமார் எண்ணூறு மீட்டர் தொலைவு இருக்கும். இரவு நேரம். மேடு பள்ளமான சாலை, இருளான சூழலில் ஒரு கையில் சுமைகள், மற்றொரு கையில் அம்மாவைப் பிடித்துவர, அருகே அப்பா என மூவரும் கைபேசி வெளிச்சத்தில் நடந்துவந்தோம்.

காவலருக்கும் அங்கே இருந்த மற்றோர் ஊழியருக்கும் எனக்குமான உரையாடல் முடிவில் அந்த நாள் எங்களுடைய ஆயுளில் இறுதிநாளாக அமைந்துவிடுமோ எனும் கொடுங்கனவு எழுந்தது. சற்று அதீமான எண்ணம்தான். என்ன ஆனாலும் பரவாயில்லை இங்கே தங்க இயலாது என்றும் அதுதொடர்பான போராட்டத்தில் ஒருவேளை மூவரும் இறந்தாலும் பரவாயில்லை அது இந்த வெட்டவெளியிலேயே நிகழட்டும் என்றும் அந்த நெருக்கடி நிலைக்கு எங்களை ஒப்புக்கொடுத்துவிட்டோம்.

ஒரு சாமானியன் தேர்ந்தெடுக்க எந்த நிகழ்தகவும் வாய்ப்பளிக்காத நிலையில் இருக்கும் ஒரே ஒரு வாய்ப்பைத் தான் அவன் தேர்ந்தெடுக்க வேண்டும் என்னும் யதார்த்தம் சம்மட்டியாக உள்மண்டைக்குள் உயர்ந்து தாழ்ந்துகொண்டிருந்தது. இது என் ஒருவனின் துயரம் அல்ல. சென்னையிலிருந்து ஆசை ஆசையாக தென் மாவட்டத்துக்குத் திரும்பும் பலரும் இப்படியான பல துன்பங்களை எதிர்கொள்கின்றனர்.

இப்போது என்னிடம் சில கேள்விகள் எழுந்தன. கரோனா தொற்றுப் பரவிவிடக் கூடாது என்ற அரசின் எச்சரிக்கையுணர்வுக்கும் பரவலைத் தடுப்பதற்குமான அரசின் நடவடிக்கைகளுக்கும் இடையே உருவாகியிருக்கும் பெரும்பள்ளத்தில் தொடர்ந்து சாமானியர்கள் விழுந்துகொண்டே இருக்கிறார்கள் என்பதை எப்படி அரசு உணராமல் இருக்கிறது? கரோனா தொற்று சமூகத் தொற்றாகிவிடக் கூடாது என்பதற்காகத் தனிமைப்படுத்தும் முகாமில் தங்கவைப்பதன் மூலம் ஒருவருக்கு கரோனா தொற்று பரவக்கூடிய சாத்தியம் பெருமளவில் உள்ள சூழலை எப்படிப் புரிந்துகொள்வது? கரோனா பரிசோதனைக்கு முன்னரே ஒருவரை தொற்றுப் பரவியவர் என்பதுபோல் நடத்துவது என்ன நியாயம்?

வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள வாய்ப்பு உள்ளபோதும் அவர்களைச் சொந்த வீடுகளில் தங்க அனுமதிக்காமல் கண்காணிப்புக்கு ஏதுவானது என்ற சப்பையான காரணத்துக்காகத் தனியார் விடுதிகளுக்கு மடைமாற்றுவதன் பின்னணியிலுள்ள மறைபொருள் எது? வெறும் புள்ளிவிவர ஆவணங்களுக்காகவும் ஆட்சியர்களின் நிர்வாகத் திறமைக்கான சான்றுகளுக்காகவும் சாமானிய மனிதரின் வாழ்க்கை பந்தாடப்படுவது சரிதானா? உண்மையிலேயே இங்கு என்ன நடக்கிறது நாம் காப்பாற்றப்படுகிறோமா, கைவிடப்படுகிறோமா? நம் கண் முன்னே கரைந்துகொண்டிருக்கும் நமது இயல்பான சூழலை உயிர்ப்புடன் மீட்கப் போகிறோமா சடலமாகப் புதைக்கப் போகிறோமா? பெருந்துயரம் எது? கரோனாவா? அதை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் அரசின் நடவடிக்கைகளில் தென்படும் பல குளறுபடிகளா? இது எல்லாவற்றுக்கும் மேலாக இந்த இரவு எப்படி விடியப்போகிறது?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x