ஊரடங்கு நிஜக் கதைகள் 3: தளிர்விட்ட புதுமை நட்பு
இந்த ஊரடங்குக் காலத்தில் பலருக்கும் தங்களுடைய அண்டை வீட்டினருடன் அறிமுகம் கிடைக்கவும், கூடுதலாகத் தெரிந்துகொள்ளவும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. பலரும் உறவை நன்கு பலப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். அதேநேரம் குருகிராமைச் சேர்ந்த அனாமிகாவோ, இந்தக் காலத்தில் முற்றிலும் புதிய நட்பை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்.
நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது, அவருடைய அண்டை வீட்டினர் ஹைதராபாத்தில் இருந்தார்கள். "உடனடியாக ஊர் திரும்புவதற்கு வழியில்லை. அதனால் எங்கள் வீட்டுத் தாவரங்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் ஊற்ற முடியுமா?" என்று அண்டை வீட்டினர் அனாமிகாவிடம் கேட்டார்கள்.
"அது கஷ்டமானதுதான். ஏனென்றால் வீட்டு வேலை, அலுவலக வேலை எல்லாம் எனக்குக் குவிந்து கிடந்தது. ஆனாலும், நாய், பூனையைப் போல சிலர் தாவரங்களை அளவுக்கு அதிகமாக நேசிக்கக்கூடியவர்களா இருப்பார்கள். அதனால், அவர்கள் வீட்டுத் தாவரங்களுக்கு நீருற்றச் சம்மதித்தேன்" என்கிறார். அதன் பிறகு தன்னுடைய வேலைத் திட்டத்தில் அண்டை வீட்டுத் தாவரங்களுக்கு தண்ணீர் ஊற்றுவதையும் அனாமிகா சேர்த்துக்கொண்டார்.
செழித்து நிற்கும் தாவரங்களை வாரம் ஒரு முறை படமெடுத்து, தன் அண்டை வீட்டினருக்கு அனாமிகா அனுப்பவும் செய்கிறார். தங்கள் வீட்டுத் தாவரம் காய்ந்துவிடவில்லை என்ற நிம்மதியுடன் அவர்கள் இருப்பார்கள், இல்லையா? இந்த நெருக்கடியான ஊரடங்குக் காலத்தில் தாவரங்களுடன் நட்புகொள்வது என்பது நிச்சயம் ஆசுவாசம் தரக்கூடியது. இயற்கையைப் புரிந்துகொள்வதற்கான, இயற்கைக்குத் திரும்புவதற்கான பாதையின் முதல் அடி என்றுகூட இதைச் சொல்லலாம்.
