

பிஹார் முசாபர்பூ ரயில் நிலையத்தில் இறந்து கிடந்த புலம்பெயர் தொழிளாளியான தாயை எழுப்ப முயன்று போர்வைக்குள் செல்வதும் வருவதுமாக இருந்த குழந்தை குறித்த நெஞ்சைப் பிசைந்த வீடியோ ஒன்றை நாம் சில நாட்களுக்கு முன்பு பார்த்து அதிர்ந்தோம்.
குழந்தையின் தாயார் அர்வினா காத்தூன் (23) கோடை வெயில், பசி, தாகத்தினால் இறந்தார் என்று செய்திகள் வெளியானது. பயணிகளுக்கு ரயிலினுள் உணவோ, நீரோ வழங்கப்படவில்லை என்பதே ஊடகங்களின் செய்தியாகும்.
கிழக்கு மத்திய ரயில்வே உடனே மறுத்து அவர் ஏற்கெனவே நோயுற்றவர் அதனால்தான் இறந்தார் என்று ட்வீட் செய்தது.
பிரஸ் இன்பர்மேஷன் பீரோவின் புதிய உண்மை அறியும் குழு பிரிவு ஊடகங்கள் தெரிவித்த சாவின் காரணமான வெயில் கொடுமை, பசி, குடிநீரின்மை ஆகியவற்றை ’தவறானது’ கற்பிதமானது’ என்று வர்ணித்தது. பிஐபியின் பிஹார் பிரிவு அர்வினா ஏற்கெனவே நோயுற்ற நிலையில்தான் ரயிலில் ஏறினார் என்று கூறியது, இதனை அவரது குடும்பத்தினரும் கூறினர்.
ஆனால் பிஐபி குடும்பத்தினர் கூறிய எந்த விவரத்தையும் வெளியிடவில்லை. அர்வினா என்ன நோயினால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருந்தார் என்ற விவரமும் இல்லை.
இந்நிலையில் ஆல்ட் நியூஸ் என்ற உண்மை அறியும் ஊடகம் அர்வினாவின் குடும்பச் சூழல், அவர் மரணத்திற்கான உண்மையான காரணமான பட்டினிச்சாவு என்பதை படுபாடுபட்டு மறைக்கத் துணிந்த தகிடுதத்தங்களை தனது விசாரணை மூலம் அம்பலப்படுத்தியுள்ளது, அதன் விவரம் வருமாறு:
உண்மையில், இறந்த அர்வினா பிஹார் கதிஹார் மாவட்டத்தின் ஸ்ரீகோல் கிராமத்தில் வசித்த மிகவும் ஏழ்மையானவர். தாய் தந்தை 6 சகோதரிகள் இவருக்கு. 3 பேருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர்கள் ஒரே வீட்டில்தன வசித்து வந்தனர். வருமானம் சாப்பிடுவதற்குப் போதவில்லை. மறைந்த அர்வினாவை அவரது கணவன் ஓராண்டுக்கு முன்னதாக விவாகரத்து செய்திருந்தான். குடும்பத்தைக் காப்பாற்ற அவர் தன் 2 குழந்தைகளுடன் குஜராத்துக்கு கட்டிட வேலைக்குச் சென்றார். லாக்டவுனால் வேலை போனது, பணம் கரைந்தது. மே 23ம் தேதி ஒருவழியாக அகமதாபாத்திலிருந்து கதிஹாருக்கு ரயிலைப் பிடித்தார். ஆனால் பயணத்தின் போது மே 25ம் தேதி அர்வினா இறந்து போனார். ரயில் முசாபர்பூர் சேருவதற்கு 2 மணி நேரம் முன்பாக அவர் இறந்து போனார்.
இவரது மரணம் பத்திரிகைகளின் தலைப்புச் செய்தியாக கொந்தளிப்பு ஏற்பட பிஐபி இவருக்கு ஏற்கெனவே நோயிருந்தது என்று கூறியது. அர்வினாவின் மைத்துனர் மொகமது வாஸிர் இவரும் ரயிலில் பயணம் செய்தார். இவரும் அர்வினா உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் நோயுற்றிருந்தார் என்று தனது போலீஸ்புகாரில் தெரிவித்திருந்தார், இவருக்கு எழுதப்படிக்கத் தெரியாது என்பதற்குப் பிற்பாடு வருவோம். ஐக்கிய ஜனதாதள ராஜிவ் ரஞ்சன் பகிர்ந்த வீடியொவில் இந்த மைத்துனர் வாசிர் ரயில் உணவு, குடிநீர் கொடுத்ததாகக் கூறினார். அர்வினாவுக்கு நோய் இல்லை என்று இப்போது கூறினார். இதே வாசிர் பிபிசிக்குத் தெரிவிக்கும் போது அர்வினாவுக்கு முன்னாடியே நோய் இல்லை என்றார்.
இந்நிலையில் ஆல்ட்நியூஸ் ஊடகத்தின் உண்மை அறியும் குழு அர்வினா உறவினர்களைச் சந்திக்க காசிம் இர்பானி என்பவரை அணுக அவரும் அர்வினாவின் குடும்ப உறுப்பினரைச் சந்தித்தார். ஆல்ட்நியூஸ் இவர்களிடம் கேட்க வேண்டிய கேள்விகளை குறித்து கொடுத்தது. இப்போது மைத்துனர் வாசிர் வேறு மாதிரி பேசினார். ரயிலில் உணவும் குடிநீர் அளிக்கவில்லை என்று குண்டைத் தூக்கிப் போட்டார். அர்வினாவுக்கு முன்கூட்டிய வியாதி எதுவும் இல்லை என்ற கூற்றை மாற்றவில்லை.
போலிஸ் புகாரில் அர்வினா உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் நோயுற்றவர் என்று வாசிர் அளித்த புகாரில் எழுதப்பட்டிருப்பது பற்றி வாசிர் கூறிய போது தனக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்றும், தன் பெயரை மட்டும் எழுதத் தெரியும் என்றார். ஆனால் இவர் அளித்ததாகக் கூறப்பட்ட போலீஸ் புகாரில் இவரது கையெழுத்துக்குப் பதிலாக விரல் ரேகை பதியப்பட்டிருந்தது. இவருக்காக போலீஸ்காரர் ஒருவர் புகாரை எழுதியுள்ளார் என்றும் அவர் என்ன எழுதினார் என்பதை தன்னிடம் படித்துக் காட்டவில்லை என்றும் இப்போது கூறினார் மைத்துனர் வாசிர். மேலும் அர்வினா உடல் மன ரீதியாக நோயுற்றவர் அல்ல என்றும் இப்போது கூறினார்.
பின்பு ஏன் முன்னால் மாற்றிக் கூறினீர்கள் என்று கேட்டதற்கு தன் மனநிலை அப்போது சோர்வாகவும் குழப்பமாகவும் இருந்தது என்றார். “அர்வினா அப்போதுதான் இறந்திருந்தார், அவர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டனர். என் மனதுக்குத் தோன்றியதை அப்போது அவர்களிடம் கூறினேன்” என்றார்.
அர்வினாவின் உறவினர்களே அவர் முன்பே நோய்வாய்ப்பட்டிருந்தார் என்று கூறியதாக பிஐபி கூறியது, ஆனால் அர்வினாவின் சகோதரி, வாசிரின் மனைவி கோஹினூர் காத்தூன் ஆகியோரும் ரயிலில் அர்வினாவுடன் வந்தவர்கள், அவர்கள் இப்போது கூறிய போது அர்வினா எந்த வித நோயும் இல்லாமல்தான் இருந்தர், ரயில் ஏறும்போது அவருக்கு எதுவும் நோய் இல்லை என்றனர். ரயிலில் ‘தண்ணீருக்காக தாகத்தினால் ஏங்கினார்’ என்று இவர்கள் கூறினர்.
ரயிலில் ஏறுவதற்கு முன்பாக மருத்துவரிடம் காட்டுவதற்காகப் போன போது கூட அர்வினாவுக்கு உடல் உபாதை இல்லை என்றே மருத்துவர் கூறியதாக வாசிர் மனைவி கூறினார். இது முக்கியமானது ஏனெனில் காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் ஷ்ரமிக் ரயில்களில் பயணிக்க முடியாது, ஆகவே அர்வினாவுக்கு நோய் எதுவும் ரயில் ஏறும்போது இல்லை என்பது தெளிவாகியுள்ளது..
எனவே அவர் ஊடகங்கள் கூறியது போல் பட்டினி, தாகத்தினால் இறந்தார் என்றால் அதனை நிரூபிக்க பிரேதப்பரிசோதனை செய்ய வேண்டும் ஆனால் செய்யவில்லை, பின் எப்படி அரசு தரப்புகள் அவர் ஏற்கெனவே நோயில் இருந்தார், அதனால் இறந்தார் என்று எப்படி கூற முடியும்.
அப்படியே முன் கூட்டியே அவருக்கு நோயிருந்தால் அது என்ன நோய் என்பதற்கும் ஆதாரம் எதுவும் இல்லை, அப்படியே நோய் இருந்தாலும் ரயிலில் சாவதற்கான உடனடி காரணங்கள் என்னவாக இருக்க முடியும்?
எனவே முன் கூட்டியே நோய் இருந்ததால் அர்வினா இறந்தார் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லாத போது இது ஒரு முற்கோளாகவே தெரிவிக்கப்படுகிறது. அர்வினா மரணத்திற்கான உண்மையான காரணத்தை மறைக்கவே அவருக்கு முன் கூட்டியே நோய் இருந்தது என்று கூறப்பட்டு வருகிறது, அப்படி முன் கூட்டியே நோய் இருந்தால் அவர் ஷ்ரமிக் ரயிலில் எப்படி அனுமதிக்கப்பட்டார் என்பதற்கும் விடையில்லை அதே போல் நீண்ட கால நோய் அவருக்கு இருந்திருந்தால் அதன் மருத்துவ ரெக்கார்டுகள் எங்கே? இதற்கும் விடையில்லை.