

கரோனா ஊரடங்கால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பாவைக்கூத்து கலைஞர்களின் பரிதாப நிலையை அறிந்து, அவர்களது பசிபோக்கும் முயற்சியாக வீதி வீதியாக முகக்கவசங்களை விற்பனை செய்யும் சேவையில் ஈடுபட்டுள்ளார் பாளையங்கோட்டையைச் சேர்ந்த புகைப்படச் கலைஞர் பா.பாப்புராஜ்.
இந்தியாவில் எந்தப் பகுதியில் இயற்கை பேரிடர் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டாலும் திருநெல்வேலியில் உள்ள அன்னை தெரசா நண்பர்கள் குழு நிதி திரட்டி அளித்து வருகிறது.
இதற்காக வித்தியாசமான முயற்சிகளை இந்தக் குழுவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் பா.பாப்புராஜ் கடந்த பல ஆண்டுகளாகவே மேற்கொண்டு வருகிறார்.
குஜராத் பூகம்பம், சுனாமி பேரழிவு, இலங்கைத் தமிழர் மறுவாழ்வுக்காக செருப்பு துடைத்து நிதி திரட்டி அளித்திருக்கிறார். தானே புயல் பாதிப்பின்போது திருநெல்வேலியில் கார்களை சுத்தம் செய்து நிதி திரட்டினார். ஒடிசா புயல் வெள்ள பாதிப்பின்போது வெள்ள நிவாரண நிதி திரட்ட டீ விற்றிருக்கிறார்.
கஜா புயல் பாதிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்க திருநெல்வேலியில் உள்ள ஒவ்வொரு கல்லூரி வாசலிலும் அமர்ந்து மாணவர்களின் காலணிகளை சுத்தம் செய்து நிதி திரட்டி அனுப்பியிருந்தார்.
இப்போது கரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சமூகத்தின் பல்வேறு தரப்பு மக்களுக்கும் உதவும் சேவையை தொடர்ந்து மேற்கொண்டிருக்கிறார்.
அந்தவகையில் தோல்பாவைக் கூத்து கலைஞர்களுக்கு உதவுவதற்காக பாளையங்கோட்டை மத்திய சிறையிலுள்ள கைதிகள் உற்பத்தி செய்யும் முகக்கவசங்களை வாங்கி திருநெல்வேலி மாநகரில் பேருந்து நிலையங்கள், பெட்ரோல் நிலையங்கள், சந்தை பகுதிகளில் விற்பனை செய்து கொண்டிருக்கிறார்.
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகளில் பயணிகளிடம் முகக்கவசங்களை இன்று விற்பனை செய்தார். முகக்கவசங்களை வாங்கி செல்வோர் தங்கள் நன்கொடைகளை இவர் வைத்திருக்கும் உண்டியலில் போட்டுச் செல்கிறார்கள்.
இது தொடர்பாக பாப்புராஜ் கூறியதாவது:
திருநெல்வேலி அருகே கொங்கந்தான்பாறை என்ற இடத்தில் பாவைக்கூத்து கலைஞர்களின் குடும்பங்கள் வசிக்கின்றன. ஏற்கெனவே நசிந்து வரும் பாவைக்கூத்து கலையை அழியாமல் காத்துவரும் இந்தக் கலைஞர்கள், வழக்கமாக கோயில் திருவிழாக்கள், விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சிகளில் பங்கேற்று தங்கள் கலையை நிகழ்த்தி அதில் கிடைத்த சொற்ப வருமானத்தில் பிழைப்பு நடத்தி வந்தனர்.
கரோனா ஊரடங்கு காரணமாக இந்த பாவைக்கூத்து கலைஞர்கள் பரிதாப கூத்து கலைஞர்களாகிவிட்டார்கள். இவர்களது பரிதாபம் குறித்து தெரியவந்ததை அடுத்து சில தன்னார்வலர்கள் உதவியுடன் ஏற்கெனவே உணவுப் பொருட்களை வழங்கியிருக்கிறோம்.
தொடர்ந்து அவர்களது உதவும் வகையில் முகக்கவசங்களை வீதிவீதியாக விற்கும் பணியை மேற்கொண்டிருக்கிறேன். இதில் கிடைக்கும் பணத்தை கலைஞர்களின் குடும்பங்களுக்கு வழங்கவுள்ளேன் என்று தெரிவித்தார்.
இவரது இச்சேவையை திருநெல்வேலி மாநகர காவல்துறை துணை ஆணையர் ச. சரவணன் பாராட்டியுள்ளார்.