பொது முடக்கத்தால் எங்கள் வாழ்க்கை முடங்கிப்போய் உள்ளது: கலங்கிப் போய் நிற்கும் நாட்டுப்புறக் கலைஞர்கள்
கரகாட்டம், தெருக்கூத்து, பொய்க்கால் குதிரை ஆட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், குறவன் குறத்தி ஆட்டம், சிலம்பாட்டம் போன்ற கலைகளால் மக்களை மகிழ்விப்பவர்கள் நாட்டுப்புறக் கலைஞர்கள்.
தவில், உருமி, பம்பை, நாதஸ்வரம் போன்ற வாத்திய கருவிகளால் மீட்டும் இசையாலும் மக்களை நாட்டுப்புறக் கலைஞர்கள் கட்டிப்போடுவார்கள். தற்போது ‘கரோனா’ ஊரடங்கு அவர்கள் வாழ்க்கையை வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் முடக்கிப்போட்டுள்ளது.
வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் அவர்கள் அண்மையில், தங்களுடைய பாரம்பரிய ஆடைகளை அணிந்து கொண்டு வழிநெடுக தங்கள் கலைநிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டே மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் ஆட்சியரை சந்தித்து பொதுமுடக்க காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த தங்களுக்கு இழப்பீடு தொகை வழங்க வலியுறுத்தினர்.
நாட்டுப்புறக் கலைஞர்கள் சங்க மாநில இளைஞர் அணி செயலாளர் த.கோவிந்தராஜ் கூறுகையில், ‘‘கரோனா பொதுமுடக்கத்தால் எங்களுக்கு வேலைவாய்ப்பே இல்லை. இதுதான் எங்களுக்கு சீசன் காலம். மாசியில் தொடங்கும் சீசன், பங்குனி, சித்திரை, வைகாசி வரை இருக்கும். இந்த 4 மாதங்களில் சம்பாதிக்கும் பணத்தைதான், அந்த வருஷம் முழுவதும் வைத்து வாழ்க்கையை ஓட்டுவோம்.
ஆனால், இந்த 4 மாதமும் பொதுமுடக்கம் என்பதால் எங்கள் வாழ்க்கை சிரமமாகிவிட்டது. தற்போது மற்ற தொழிலாளர்கள் வேலையை ஆரம்பித்துவிட்டார்கள். எங்க தொழில், கூட்டம் கூடுகிற வேலை என்பதால் அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள். ஒரு இறப்பிற்கு கூட தப்பாட்ட கலைஞர்கள் பறை இசை நிகழ்ச்சி நடத்த முடியவில்லை.
நலவாரியத்தில் பணம் கொடுத்தார்கள். தமிழகத்தில் மொத்தம் 3 லட்சம் நாட்டுப்புற கலைஞர்கள் உள்ளோம். கலை பண்பாட்டு துறை கொடுத்த அரசு அடையாளட அட்டைகளை மட்டும் 90 ஆயிரம் கலைஞர்கள் வைத்துள்ளோம்.
ஆனால், பதிவு செய்த வெறும் 25 ஆயிரம் கலைஞர்களுக்கு கண் துடைப்பாக கொடுத்தார்கள். நலவாரியத்தில் 35 ஆயிரம் கலைஞர்கள் பதிவு செய்துள்ளார்கள். அதில், 60 வயதிற்கு மேலானவர்களுக்கு கிடையாது என்று சொல்லிவிட்டார்கள். அதனால், 10 ஆயிரம் பேருக்கு இந்த உதவித்தொகை கிடைக்கவில்லை.
நலவாரியம் திமுக ஆட்சியில் தொடங்கிய என்பதால் அதை இந்த ஆட்சியில் முடக்கி வைத்தனர். அதனால், நாட்டுப்புறக் கலைஞர்கள் அதில் உறுப்பினராக சேர ஆர்வம்காட்டவில்லை.
இப்பாது நலவாரியத்தில் உறுப்பினராக இருக்கிறவர்களுக்கு உதவித்தொகை கொடுக்கிறார்கள்.
எப்படி மீன்பிடி தடைகாலத்தில் மீனவர்களுக்கு இழப்பீடு கொடுக்கிறார்களோ, மண்பாண்ட கலைஞர்களுக்கு அந்த தொழில் இல்லாத காலத்தில் இழப்பீடு கொடுக்கிறார்களோ அதுபோல் பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட எங்களுக்கு மாதத்திற்கு ரூ.10 ஆயிரம் வீதம் இந்த 4 மாதத்திற்கு 40 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
பொதுமுடக்கத்தால் வாழ்க்கையை முடங்கிப்போய் உள்ளோம். இழப்பீடு தொகை வழங்கினால் முடக்கிய எங்கள் வாழ்க்கையை ஒரளவு மீட்க முடியும். சீசன் கால நிகழ்ச்சிகளுக்காக ஆஃப் சீசன் காலத்தில் மேக்கப் சாமான்கள், ஆடை ஆபரணங்கள் மட்டுமில்லாது இசைக் கருவிகளை வாங்கி வைத்திருந்தோம்.
தற்போது அதை பயன்படுத்த முடியாமல் அதற்காக வாங்கிய கடனையும், வட்டியும் கொடுக்க முடியாமல் சிரமப்படுகிறோம். அன்றாட வீட்டு செலவு, குழந்தைகளுக்கு பால், பள்ளி கட்டணம் எப்படி சமாளிக்க போகிறோம் என்று தடுமாறி போய் நிற்கிறோம்.
நாட்டுப்புறக் கலைகளில் கணவனால் கைவிடப்பட்ட, கணவனை இழந்த பெண் கலைஞர்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்கள் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. அரசு இழப்பீட்டு தொகை உடனடியாக வழங்க வேண்டும், ’’ என்றார்.
