Published : 10 Sep 2015 10:38 AM
Last Updated : 10 Sep 2015 10:38 AM

சுதந்திரப் போராட்ட வீரர் கோவிந்த் வல்லப் பந்த் 10

இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும் தலைசிறந்த அரசியல்வாதியுமான கோவிந்த் வல்லப் பந்த் (Govind Vallabh Pant) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 10). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# தற்போதைய உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள அல்மோராவில் கூண்ட் என்ற கிராமத்தில் 1887-வருடம் பிறந்தார். தந்தை அரசாங்க அதிகாரியாக பணிபுரிந்து வந்த காரணத்தால் அடிக்கடி வெவ்வேறு ஊர்களுக்குப் பணிமாற்றம் செய்யப்பட்டார். இதனால் இவர் தன் தாத்தாவின் பராமரிப்பில் வளர்ந்தார்.

# நேர்மையில் தன் தாத்தா வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கையை சிறுவன் தன் குணாம்சங்களில் ஒன்றாகப் பதிய வைத்துக்கொண்டான். இளைஞன் கோவிந்த் படித்து நல்ல முறையில் தேர்ச்சியடைந்தார்.

# மேல்படிப்புக்காக 1905-ல் அலகாபாத் சென்று முயிர் சென்ட்ரல் (Muir Central) கல்லூரியில் சேர்ந்தார். கணிதம், இலக்கியம், அரசியல் துறைப் பாடங்களில் சிறந்து விளங்கினார். உடல்நிலை தொல்லை கொடுத்தாலும், தன் இலக்கில் உறுதியாக இருந்தார்.

# கோபாலகிருஷ்ண கோகலே, மதன் மோகன் மாளவியாவின் கருத்துக்களால் இவர் ஈர்க்கப்பட்டார். காங்கிரஸ் மாநாடுகளில் தன்னார்வத் தொண்டராகப் பணிபுரிந்தார். ஒரு கூட்டத்தில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக அபாரமாக உரை நிகழ்த்தினார். இதனால் கோபமடைந்த கல்லூரி முதல்வர், இவர் தேர்வு எழுதுவதைத் தடைசெய்தார்.

# சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகச் சொன்ன மதன் மோகன் மாளவியாவின் மிரட்டலுக்குப் பணிந்த கல்லூரி முதல்வர், கோவிந்தைத் தேர்வு எழுத அனுமதித்தார். 1909-ல் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை முடித்தார். அல்மோராவில் தனது வக்கீல் தொழிலைத் தொடங்கினார்.

# பின்னர் காசிபூர் சென்று குடியேறினார். பல சமூக சேவைகளையும் செய்துவந்தார். சுற்றுலா வரும் ஆங்கிலேயர்களுக்கு உள்ளூர்வாசிகள் கட்டணம் ஏதுமின்றி பளு தூக்க வேண்டும் என்ற சட்டம் அப்போது நிலவியது. 1914-ம் ஆண்டு இச்சட்டத்துக்கு எதிராக வழக்காடி அந்தச் சட்டத்தை நீக்கச் செய்து கிராம சபைக்கு உதவினார்.

# 1921-ல் காந்திஜியின் அகிம்சை வழியால் ஈர்க்கப்பட்டார். காங்கிரசில் இணைந்த இவர், ஐக்கிய மாகாணத்தில் நடந்த பொதுத் தேர்தல்களில் நைனிதால் தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். விடுதலைப் போராட்ட இயக்கங்களில் கலந்துகொண்டு பலமுறை சிறை சென்றார். 1937-ல் ஐக்கிய மாகாணத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றார்.

# 1946-ம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதலாவது முதலமைச்சராக பொறுப்பேற்றார். ஜமீன்தார் முறையை ஒழித்தது இவரது முக்கிய சாதனைகளில் ஒன்று. 1955-ம் ஆண்டு உள்துறை அமைச்சராகப் பணியாற்றினார். சிறந்த இலக்கியவாதியாகவும் திகழ்ந்தார்.

# தேசிய உணர்வை மக்களிடையே வளர்க்கவும், ஒருமைப்பாட்டை உருவாக்கவும் தன் எழுத்தாற்றலைப் பயன்படுத்தினார். சிறந்த மேடைப் பேச்சாளரான இவர் மனித நேயத்தை வலியுறுத்திப் பேசிவந்தார். ஏழைகளின் பொருளாதார பிரச்சினைகளைப் போக்க கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார். 1957-ல் இவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

# நாடு முழுவதும் இவரது பெயரில் ஏராளமான மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் இயங்கி வருகின்றன. சிந்தனையாளர், தொலைநோக்காளர், திறன் வாய்ந்த நிர்வாகி, சமூக சீர்திருத்தவாதி எனப் போற்றப்பட்ட கோவிந்த் வல்லப பந்த் 1961-ம் ஆண்டு 74-ம் வயதில் மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x