

புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில் மேம்பாட்டிற்கு முக்கியப் பங்காற்றுகிறார்கள். ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு புலம் பெயர்வது என்பது இந்திய அரசியல் சாசனப் பிரிவு 19(1) d - இன் படி அவர்களின் அடிப்படை உரிமையாகும். அரசின் உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் கொள்கைகள் மூலம் பல்வேறு தொழில்கள் தொழிலாளர்களை ஈர்க்கத் தொடங்கியதால், புலம் பெயர்வது என்பது தவிர்க்க முடியாத ஒரு விஷயமாக உள்ளது.
இந்தியாவில் சுமார் 14 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் இருப்பதாக உத்தேச மதிப்பீடுகள் கூறுகின்றன. புலம்பெயர்தல் அனைத்து மாநிலங்களில் இருந்தாலும்கூட, பெரும்பாலும் பின்தங்கிய பிஹார், ஒடிசா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து, வளர்ச்சி அடைந்த கேரளா, தமிழகம், மகாராஷ்டிரா, டெல்லி போன்ற பகுதிகளுக்கு அதிக அளவில் புலம் பெயர்கிறார்கள்.
உள்ளூரில் போதிய வேலைவாய்ப்பின்மை, குறைவான கூலி, தரமான கல்வி கற்க போதிய வசதியின்மை, உயர் சாதிகளின் ஆதிக்கம், சுரண்டல் போன்ற காரணங்களால் வறுமைக்கு ஆட்பட்டு, வேலைக்காக புலம்பெயரும் சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள். அதிக வேலைவாய்ப்புகள் உள்ளூரை ஒப்பிடுகையில் அதிக கூலி, தங்குமிடம், உணவு வசதி போன்றவை அவர்களை ஈர்க்கின்றன.
தமிழகத்தைப் பொறுத்தவரை 2016 ஆய்வறிக்கையின் படி 10.67 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் 27% பேர் உற்பத்தி தொழில்களிலும், 14 சதவீதம் பேர் பஞ்சாலை மற்றும் ஆயத்த ஆடை தொழில்களிலும், 11.41 சதவீதம் பேர் கட்டுமானத் தொழில்களிலும் இருப்பதாகப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. மொத்த புலம்பெயர் தொழிலாளர்களில் 51% நபர்கள் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ளனர். தற்போதைய சூழலில் புலம்பெயர் தொழிலாளர்களின் பங்கு இல்லாத தொழில் என்று எதுவும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்துத் தொழில்களிலும் ஈடுபட்டுள்ளனர்.
சாதாரணமாகவே இவர்கள் பல்வேறு பிரச்சினைகளை தொடர்ச்சியாக சந்தித்து வந்துள்ளனர். நீண்ட நேர வேலை, கட்டாய வேலை, மோசமான பணிச்சூழல் மற்றும் வன்முறை, சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் இணைக்கப்படாதது என்று பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். பொதுவாக இவர்கள் பிரச்சினைகள் பொதுத்தளத்திற்கு வருவதில்லை. ஆனால் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு, மத்திய மாநில அரசுகளின் பாராமுகத்தால் இவர்கள் பிரச்சனை தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தற்போதைய பிரச்சினைகள்:
* பசி, பட்டினி, பணமின்மை, கடன் சுமை எனப் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆட்பட்டுள்ளனர்.
* அரசு அறிவித்துள்ள இணையதளத்திற்கு அனைத்து வெளிமாநில புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் அணுகுதல் இல்லை.
* பதிவு செய்யப்பட்டவர்களுக்கும் ரயில் பயண வசதி எப்பொழுது ஏற்பாடு செய்யப்படும் என்ற உத்தரவாதம் தரப்படவில்லை.
* ஊர் திரும்ப விரும்பும் தொழிலாளர்களின் ஆதார் அட்டையைப் பறித்து வைத்துக்கொண்டு அதிகாரிகள் உதவியுடன் மிரட்டும் போக்கு தொடர்கிறது.
* சில செங்கல் சூளைகளில் கொத்தடிமையாக வைக்கப்பட்டுள்ளவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் நடந்தேறியுள்ளது.
* ஊரடங்கு காலத்திற்கான ஊதியம் அவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை.
* அரசிடமிருந்து எந்த உதவிகளும் பெரும்பாலானோரைச் சென்றடையவில்லை.
* பல்வேறு மனநலப் பிரச்சினைகளுக்கு ஆட்பட்டுள்ளனர்.
* போதிய பயண ஏற்பாடுகள் முறையாகச் செய்யப்படவில்லை. உதாரணத்திற்கு மே மாதம் ஒன்பதாம் தேதி முதல் மே 27 ஆம் தேதி வரை சிறப்பு ரயிலில் பயணம் செய்த 80 பேர் இறந்துள்ளதாக ரயில்வே பாதுகாப்புப் படை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலும் இவர்கள் பசியாலும், அதிக உஷ்ணத்தாலும் பாதிக்கப்பட்டு இறந்திருக்கிறார்கள்.
* அரசிடம் எத்தனை வெளிமாநில புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளனர் என்ற புள்ளிவிவரம் இல்லை. மேலும் அவர்களுக்கு உதவி செய்ய மாவட்ட அளவிலான தொடர்பு அலுவலர்கள் நியமிக்கப்படவில்லை.
* இதுவரை அரசால் எடுக்கப்பட்ட முயற்சிகள் போதுமானதாக இல்லை.
தீர்வுகள்
களப்பணியில் பாதிக்கப்பட்ட வெளிமாநில புலம்பெயர் தொழிலாளர்களிடம் கலந்துரையாடல் மூலம் வெளிப்பட்ட கீழ்க்கண்ட தீர்வுகளை அரசு செய்ய முன்வர வேண்டும்.
உடனடித் தீர்வுகள்:
* சுமார் 14 கோடி புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு ரூபாய் 6,000 ரூபாய் உதவித்தொகையாக குறைந்தது மூன்று மாதங்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும். இது சுமார் 56 கோடி மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை வழங்கும். சராசரியாக ஒரு குடும்பத்திற்கு நான்கு பேர் என்று வைத்துக்கொண்டால் ஒரு வேளை உணவிற்கு ஒரு நபருக்கு ரூபாய் 16.66 மட்டுமே தேவை எனக் கோரிக்கை வைத்துள்ளனர். இதை உடைமையாகச் செயல்படுத்த வேண்டும்.
* தொழிலாளர்களுக்கு உடனடியாக இலவசமாக உணவு மற்றும் பாதுகாப்பு வசதியுடன் போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.
* ஒவ்வொரு மாவட்டத்திலும் இவர்களுக்கு உதவ ஒரு அலுவலரை நியமித்து அதன் விவரங்கள் தெரியும் வண்ணம் விளம்பரப்படுத்த வேண்டும்.
* சொந்த ஊர்களுக்குத் திரும்பி அனுப்பும் முன் சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்களுடன் பேசி, ஊதிய நிலுவை அல்லது வேறு நிலுவைத் தொகைகள் இருந்தால் உடனடியாக அவர்களுக்குப் பெற்றுத் தரவேண்டும்.
* இங்கேயே தங்கி பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பும் மனநல ஆலோசனை வசதிகளும் உறுதிப்படுத்தவேண்டும்.
நீண்ட காலத் தீர்வுகள்
* அனைத்து வெளிமாநிலத் தொழிலாளர்களும் சுய பதிவு செய்ய தேசிய அளவில் இணையத்தில் வசதி ஏற்படுத்த வேண்டும். அனைவரும் பதிவு செய்ய சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
* முறையான ஒப்பந்தம் (formalisation of employment) முதலாளி- தொழிலாளர்களிடம் ஏற்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
* உள்ளாட்சி நிர்வாகங்கள் ஊராட்சி/ நகராட்சி தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து வெளியூர்களுக்கு வேலைக்குச் செல்பவர்களையும், வெளியூர்/ வெளிமாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளர்களையும் பதிவு செய்து பதிவேட்டைப் பராமரிக்க வேண்டும்.
* சம்பந்தப்பட்ட அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்கள் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் - விபத்துக் காப்பீடு, இறப்புக் காப்பீடு, மருத்துவக் காப்பீடு, தொழிலாளர்களை இணைக்க வேண்டும்.
* ஒவ்வொரு மாவட்டத்திலும் உதவி மையங்கள் அமைக்கப்பட வேண்டும். உதவிக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் கொடுக்கப்பட வேண்டும்.
* தற்போது மாநிலங்களுக்கு இடையில் ஒருங்கிணைப்பு செய்வதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. ஆகவே தேசிய அளவிலான புலம்பெயர் தொழிலாளர்களைப் பாதுகாக்க ஒரு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இந்த அமைப்பு மாநிலங்களுக்கு இடையில் ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
* பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களைப் பாதுகாக்க தேசிய அளவில் செயல்பட்டு வழிமுறைகள் (Standard Operating Procedures) உருவாக்கிச் செயல்படுத்த வேண்டும்.
* தற்போது உள்ள சட்டங்களை, இந்தத் தீர்வுகளை முழுமையாகப் பிரதிபலிக்கும் வண்ணம் மாற்ற வேண்டும்.
மேற்கண்ட பணிகளைத் தொண்டு நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள், தொழில் நிறுவன அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டால் புலம்பெயர் தொழிலாளர்களின் இன்னல்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்பதை மனதில் கொண்டு மத்திய மாநில அரசுகள் செயல்பட வேண்டும்.
- முனைவர் ப.பாலமுருகன்,
சமூகச் செயற்பாட்டாளர்.