

கேரளாவில் அன்னாசிப் பழத்தில் வெடிவைத்துக் கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட சம்பவம் தேசத்தையே உலுக்கியுள்ளது. இது தொடர்பாகக் கேரள அரசு தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், கேரளத்தில் வெடிவைத்து விலங்குகளை வேட்டையாடுவது புதிதல்ல எனவும், இது தொடர் சம்பவங்களாக நடந்துவருவதாகவும் ஆதங்கப்படுகிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் பசுமை சாகுல்.
இதுகுறித்து அவர் 'இந்து தமிழ்' இணையத்திடம் கூறுகையில், ’’கேரள, குமரி மாவட்ட மலையோரப் பகுதிகளில் வசிக்கும் சில சமூக விரோதிகளின் ரகசிய வார்த்தைகள் 'தோட்ட', 'படக்கு', 'பன்னிவெடி'. இவர்கள் காட்டுப் பன்றிகளை வேட்டையாட வெடிமருந்து நிரப்பிய உருண்டையை பழங்களுக்கு உள்ளேயோ, சோற்று உருண்டைகளுக்கு உள்ளேயோ அடைத்து நீர் நிலைகளின் அருகில் வைத்து விடுவார்கள்.
நீர் அருந்த வரும் காட்டுப் பன்றிகள் அல்லது மிளா எனப்படும் கடமான்கள் உணவாக நினைத்து இதனைக் கடித்த உடன் தாடைப் பகுதி வெடித்துச் சிதறிவிடும். வலி தாங்காமல் அவை நேராக நீர் நிலைகளில் தனது தாடைகளைத் தாழ்த்திக்கொண்டு நிற்கும். அப்போது வேட்டைக்காரர்கள் அவற்றை லாவகமாகப் பிடித்து விடுவார்கள். இந்தக் கொடுஞ்செயல் முன்பெல்லாம், குமரி மலையோரப் பகுதியிலும் நடந்தே வந்தது. வனத் துறையின் தீவிரக் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கையால் தற்போது இந்தக் குற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டு விட்டன. ஆனால், கேரளத்தில் இந்தக் கொடூரம் இன்னும்கூடத் தொடர்கிறது.
சில வருடங்களுக்கு முன்பு கேரளாவின் இடமலையார் அணைக்கட்டு அருகில், காலில் வெடி வெடித்த காயங்களோடு சுற்றி வந்த யானை மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. விசாரணை முடிவில், பன்றி வெடி மூலமாகக் காயம் ஏற்பட்டது உறுதியானது. கடந்த மாதம் கொல்லம் மாவட்டம் பத்தனாபுரம் வனப்பகுதியிலுள்ள நீரோடையில் இரண்டு நாட்களாக வாயில் பெரும் காயத்தோடு யானை ஒன்று நிற்பதைப் பார்த்த கிராம வாசிகள் வனத் துறைக்குத் தகவல் கொடுத்தனர். அந்த யானையும் பன்றிகளுக்கு வைத்த வெடி உணவைச் சாப்பிட்டதால் வாயில் காயம் ஏற்பட்டது விசாரணையில் தெரிந்தது.
இப்போது கர்ப்பிணி யானை உயிரிழந்த சம்பவம் வன அதிகாரி மோகன கிருஷ்ணனின் வலைதளப் பதிவு மூலம் வெளி உலகத்துக்குத் தெரிந்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் இதுகுறித்து எழுதவில்லை எனில் முந்தைய சம்பவங்கள் போல இதுவும் மக்கள் கவனத்திற்கு வராமலேயே போயிருக்கும். யானையின் மரணத்திற்குக் காரணமான குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தண்டனை தந்தே தீருவோம் என்று கேரள முதல்வர் அறிவித்திருப்பது மட்டும் போதாது. இதுபோன்று இன்றும் தொடந்து கொண்டிருக்கும் பன்றிவெடி வேட்டைகளைத் தடுத்து நிறுத்தக் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.