Last Updated : 04 Jun, 2020 11:58 AM

 

Published : 04 Jun 2020 11:58 AM
Last Updated : 04 Jun 2020 11:58 AM

ஐஸ்க்ரீம் குரல்... அற்புதக் குரல்... குரலிசை நாயகன் எஸ்.பி.பி! 


பாடும் நிலா என்கிறார்கள். பாலு என்கிறார்கள். ஆனாலும் எஸ்.பி.பி. என்று ஆரம்பகால ரசிகர்கள் இன்றைக்கும் உற்சாக உத்வேகத்துடன் சொல்லி வருகிறார்கள்.
எல்லோருக்கும் வயசாகும். தொப்பை விழும். ஒல்லியாக இருப்பவர்கள் குண்டாவார்கள். குண்டாக இருப்பவர்கள், ஸ்லிம்மாகிவிடுவார்கள். ‘முன்ன மாதிரி இல்லப்பா இவரு. வயசாயிருச்சுல்ல’ என்று சொல்லுவோம். நம்மையும் யாரேனும் சொல்லுவார்கள். ஆனால், உடலில், மனதில் எத்தனை வித்தியாசங்கள் தோன்றினாலும் குரல் மட்டும் அப்படியே இருந்தால்... அது அதிசயம்தான். எட்டாவது அதிசயம். எட்டாத அற்புதக் குரலோன்... எஸ்.பி.பாலசுப்ரமணியம்.


தமிழில் கொடிகட்டிப் பறக்கும் பாடகர் எஸ்.பி.பி, ஆந்திராவைச் சேர்ந்தவர். தெலுங்குதான் தாய்மொழி. எஞ்சினியரிங் படித்தவர். ஆனால் அப்பா சாம்பமூர்த்தி ஹரிகதா சொல்வதில் விற்பன்னர். அதையெல்லாம் கேட்டுக் கேட்டு வளர்ந்த எஸ்.பி.பி.க்கு இசையில் ஈர்ப்பு ஏற்பட்டது.

படித்துக் கொண்டிருந்தாலும் மொத்த சிந்தனையும் இசை மீதே இருந்தது. 1966ம் ஆண்டு, தெலுங்குப் படமொன்றில் முதன்முதலாகப் பாடினார். இதில் அறிமுகப்படுத்தியவர் இசையமைப்பாளர் கோதண்டபாணி. அவரை தன் குருவாக, வாழ்க்கையாக, வழிகாட்டியாக இன்றைக்கும் மதித்துப் போற்றிவருகிறார். வளர்ந்ததும், தான் தொடங்கிய ரிக்கார்டிங் ஸ்டூடியோவுக்கு குருவின் பெயரைத்தான் வைத்தார்.

அடுத்து கன்னடத்தில் பாடுகிற வாய்ப்பு கிடைத்தது. 69ம் ஆண்டு, தமிழுக்கு வந்தார். ஆனால், அவர் பாடிய முதல் பாடலும் படமும் வெளிவரவே இல்லை. எம்.எஸ்.வி. இசையில் ‘ஹோட்டல் ரம்பா’ எனும் படத்தில் பாடியிருந்தார். அதன் பிறகு 69ம் ஆண்டு, ஜெமினிகணேசன், காஞ்சனா நடித்த ‘சாந்தி நிலையம்’ படத்தில், கவியரசு கண்ணதாசன் எழுதி, எம்.எஸ்.வி. இசையமத்த பாடலைப் பாடினார். அதுதான் அவருக்கு முதல் படம். அந்தப் பாடல்... ‘இயற்கை எனும் இளையகன்னி’. பின்னர் எம்ஜிஆர் தயாரித்து நடித்த ‘அடிமைப்பெண்’ படத்தில் ‘ஆயிரம் நிலவே வா’ பாடலைப் பாடினார். இந்த இரண்டுப் பாடல்களுமே மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தந்தது அவருக்கு.

பிறகென்ன... எழுபதுகளில் இருந்து தொடங்கியது எஸ்.பி.பி. ராஜ்ஜியம். சிவாஜி, முத்துராமன், ஜெய்சங்கர், சிவக்குமார் என வரிசையாக எல்லோருக்கும் பாடினார். சிவாஜிக்கு ‘பொட்டு வைத்த முகமோ’ பாட்டு அப்படியொரு ஸ்டைலீஷாக இருந்தது.

அந்த சமயத்தில்தான் கமலுக்குப் பாடத் தொடங்கினார். ’அவள் ஒரு தொடர்கதை’, ’அவர்கள்’, ’சொல்லத்தான் நினைக்கிறேன்’ என தொடர்ந்து பாடினார். அதேபோல், ரஜினிக்கும் பாடினார். ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தில் கமலுக்குப் பாடிய ‘எங்கேயும் எப்போதும்’ முதலான பாடல்களும் ரஜினிக்குப் பாடிய ‘நம்ம ஊரு சிங்காரி சிங்கப்பூரு வந்தாளாம்’ பாடலும் செம ஹிட்டு.
‘கம்பன் ஏமாந்தான்’ பாடல் ஆல்டைம் ஹிட்டு. எஸ்.பி.பி.யின் குரலிலும் குழைவிலும் கிறங்கிப் போனார்கள் ரசிகர்கள். எழுபதுகளின் நிறைவிலும் எண்பதுகளின் தொடக்கத்திலும் பாடல்களில் வெரைட்டி அலப்பறையைக் கூட்டினார். பாட்டுக்கு நடுவே குரலை மாற்றிப் பாடினார். இடையே களுக்கென்று சிரித்தார். ‘சம்சாரம் என்பது வீணை’, ‘நான் கட்டில் மேலே கண்டேன்’, ‘ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்’, ‘இதுவொரு பொன்மாலைப் பொழுது’, ‘ராகங்கள் பதினாறு’, ‘ராஜா என்பார் மந்திரி என்பார்’, ‘இளமை இதோ இதோ...’ என்றெல்லாம் பியூட்டி கூட்டிக் கொண்டே போனார் பாடல்களில்... தன் குரல் வழியே!
எம்ஜிஆருக்கும் சிவாஜிக்கும் பொருந்திப் போன குரல், அப்போதைய நடிகர்களுக்கு அப்படியாகப் பொருந்தவில்லை. ஜெய்சங்கர் விதிவிலக்கு. ஆனால் எண்பதுகளில்... கமல், ரஜினிக்கு அடுத்து சத்யராஜ், பிரபு, விஜயகாந்த், கார்த்திக், மோகன், முரளி என பலரும் வந்தார்கள். அத்தனை பேருக்கும் ஹிட் பாடல்களைக் கொடுக்க ஹிட் லிஸ்ட்டில் இருந்தார் எஸ்.பி.பி. ‘இளைய நிலா பொழிகிறதே’ எனப் பாடிய ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தில் எல்லாப் பாடல்களும் எஸ்.பி.பிதான். ‘குங்குமச் சிமிழ்’ படத்தில் பாடிய ‘நிலவு தூங்கும் நேரம்’, ‘மெளன ராகம்’ படத்தில் ‘மன்றம் வந்த தென்றலுக்கு’, ‘நிலாவே வா’ என வார்த்தைகளை உச்சரிக்கும் விதம் மட்டுமின்றி, அந்த வார்த்தைகளின் ஜீவனையும் மிக அழகாக நமக்குள் கடத்தியிருந்தார்.

இந்தப் பக்கம் இளையராஜாதான் ஃபேவரிட். ஆனாலும் சங்கர் கணேஷ், வி.குமார், விஜயபாஸ்கர், சந்திரபோஸ், லக்ஷ்மிகாந்த் பியாரிலால், மனோஜ் கியான் என எல்லா இசையமைப்பாளர்களுக்கும் பாடினார். வித்யாசாகரின் இசையில் இவர் பாடிய ‘மலரே மெளனமா’ கேட்பவர்களை உருக்கிவிடும். ஏற்கெனவே எம்.எஸ்.வி. இசையில் ‘வான் நிலா நிலா அல்ல’ பாடலும் அந்த ரகம்தான்!

‘நானாக நானில்லை தாயே’, ‘நான் பொல்லாதவன்’, ‘உனக்கென்ன மேலே நின்றாய் ஓ.. நந்தலாலா’, ‘காதலின் தீபம் ஒன்று’, ‘முத்துமணி மாலை’, ‘மாங்குயிலே பூங்குயிலே’, ‘நான் பூவெடுத்து வைக்கணும் பின்னாலே’... என்றெல்லாம் ரகளை பண்ணினார். அஜித்துக்கு இவர் பாடிய ‘சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’ பாடல் தனி தினுசு. அவரே அவருக்காகப் பாடிய ‘மண்ணில் இந்தக் காதலன்றி...’ வேற லெவல்.

‘சங்கராபரணம்’ பாடலும் பாடுவார். ‘சிங்காரி சரக்கு நல்ல சரக்கு’ என்றும் பாடுவார். அதனால்தான் விருதுகள் இவரைத் தேடி வந்துகொண்டிருந்தன. டப் செய்யப்பட்ட ‘சிப்பிக்குள் முத்து’ படத்தில் கமலுக்கு டப்பிங் கொடுத்தார். தமிழில் கமலின் ‘சத்யா’ படத்தின் வில்லன் கிட்டிக்கு, சாதுவெனக் குரல் கொடுத்தார். கே.பாலசந்தர் மூலம் நடிக்கத் தொடங்கினார். வஸந்த், இவரை நாயகனாக்கினார். பிறகு சில படங்களுக்கு இசையமைத்தார். பக்திப் பாடல்களும் நிறையவே பாடினார். ‘ஆயர் பாடி மாளிகையில்’ பாட்டைக் கேட்டால், அந்தக் கண்ண பரமாத்மாவே இவரைப் பார்க்க வந்துவிடுவான், ஆடிக்கொண்டே!

இளையராஜாவின் இசையில் ஸ்ரீதரின் இயக்கத்தில், ‘பனி விழும் மலர் வனம்’, ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்’ பாடல்களும் ‘நீலவான ஓடையில்’, ‘பூமாலை ஒரு பாவையானது’, ‘என்ன சத்தம் இந்த நேரம்’ என்றெல்லாம் கதையின் கனத்தை, இவர் குரல் வெகு லாவகமாக நமக்குச் சொல்லிவிடும். அப்படியொரு குரல் அவருடையது.
அவர் இசையமைப்பாளரும் கூட. இசையிலும் தனித்துவம்... தனி வண்ணம். உதாரணமாக, ‘வண்ணம் கொண்ட வெண்ணிலவே’ ஒன்று போதும்!

இறை பக்தி, குரு பக்தி இரண்டும் கொண்டு, கனிவுடனும் அன்புடனும் பாடுகிற, பாடிக்கொண்டிருக்கிற எஸ்.பி.பி. என்கிற எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு இன்று (ஜூன் 4ம் தேதி) பிறந்தநாள். 74வது பிறந்தநாள்.

எஸ்.பி.பி. இன்னும் இன்னும் வாழ வாழ்த்துவோம். அதே ஐஸ்க்ரீம் குரலுடன் ஆனந்தமாய் வாழுங்கள், அற்புதமாகப் பாடுங்கள் பாலு சார்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x