‘போராட்டத்தில் எங்கள் இந்திய உணவு விடுதி எரிந்து சாம்பல்: எரியட்டும் நிறவெறி ஒழியும் வரை எரியட்டும்- அமெரிக்க இந்தியர் வேதனை

‘போராட்டத்தில் எங்கள் இந்திய உணவு விடுதி எரிந்து சாம்பல்: எரியட்டும் நிறவெறி ஒழியும் வரை எரியட்டும்- அமெரிக்க இந்தியர் வேதனை
Updated on
2 min read

அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பர் போலீஸ் காவலில் கொல்லப்பட்டதையடுத்து நிறவெறிக்கு எதிரான உணர்வு அங்கு பெரிய அளவில் வெடித்து பரவலான போராட்டங்களுக்கு வித்திட்டது..

இதில் பலரது சொத்துக்கள் அடித்து நொறுக்கப்பட்டன, தீக்கிரையாக்கப்பட்டன, இதில் இந்தியர்கள் சிலரும் தங்கள் சொத்துக்கள் வாகனங்களை இழந்துள்ளனர்.

மினியாபோலிசில் ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்ட அதே மாகாணத்தில் ‘காந்தி மஹால்’ என்று உணவு விடுதி நடத்தி வந்த ஹஃப்ஸா இஸ்லாம் என்பவர் தன் உணவு விடுதி கலவரத்தில் தீக்கிரையானதையும் அமெரிக்க வெள்ளை மேட்டிமை நிறவெறி ஒழிக்கப்பட வேண்டும் என்றும் பத்தி ஒன்றில் எழுதியுள்ளார்.

தி வாஷிங்டன்போஸ்ட் ஊடகத்தில் ஹஃப்ஸா இஸ்லாம் என்ற இந்திய-அமெரிக்கர் எழுதிய பத்திலிருந்து, “எங்கள் குடும்பத்தின் காந்தி மஹால் என்ற உணவு விடுதியை நோக்கி நான் பணியாற்றுவதற்காக திங்கள் இரவு காரில் சென்று கொண்டிருந்தேன். அப்போது தெற்கு மினியபொலிஸ் கப் ஃபுட்ஸ் அருகே ஒரு மனிதனை போலீஸார் கைது செய்து கொண்டிருந்தனர்.

நான் காரை மெதுவாக ஓட்டியபடியே என்ன நடக்கிறது என்று பார்த்தேன். கைகளில் விலங்குடன் அந்த மனிதனை இழுத்துச் சென்றனர், அந்த மனிதனின் முகம் எனக்கு நன்றாக நினைவில் உள்ளது, அவன் கதறினான், அவன் வலியில் இருந்தான்.

சில நிமிடங்களுக்குப் பிறகு ஜார்ஜ் பிளாய்ட் என்ற அந்த கருப்பரின மனிதன் உயிருடன் இல்லை. போலீஸ் கையில் அவன் மரணம் எழுதப்பட்டது. நியாயப்படுத்த முடியாத இந்த ஜார்ஜ் பிளாய்ட் மரணத்தை எதிர்த்து போராட்டங்கள் வெடித்ததையும் பார்த்தேன். மக்கள் வெள்ளம் போல் தெருக்களில் குவிந்து ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காந்தி மஹால் உணவு விடுதி போராட்டக்களத்துக்கு அருகில் தான் இருந்தது, என்னுடைய தந்தை இந்த உணவு விடுதியைத் திறந்த போது பெரிய பொருளாதார பின்னடைவுக் காலம். வன்முறை வெடித்துப் பரவ எங்கள் கட்டிடம் பாதுகாப்பு புகலிடமாக மாறியது. காயமடைந்த போராட்டக்காரர்களுக்கு உதவும் மையமாக எங்கள் உணவு விடுதி மாறியது. ரப்பர் புல்லட் தாக்கத்தில் காயமடைந்தவர்கள், கண்ணீர்ப்புகையினால் பாதிக்கப்பட்டவர்கள் இங்குதான் அடைக்கலமாயினர்.

வங்கதேசத்தின் எதேச்சதிகாரச் சூழலில் என் தந்தை வளர்ந்தவர். அவரின் பல நண்பர்களை போலீஸ் கொலை செய்திருப்பதை அவர் கண்டிருக்கிறார். அதனால் அவருக்கு போராட்டக்காரர்கள் மீது அதிக கருணை இருந்தது.

போராட்டங்கள் வலுத்தன. வியாழனன்று போராட்டங்களை லைவ் ஸ்ட்ரீமிங்கில் பார்த்துக் கொண்டிருந்தேன். எங்கள் உணவு விடுதிக்கு அருகில் உள்ள கட்டிடம் ஒன்று தீப்பற்றி எரிந்தது. அங்கிருந்து மெதுவாக தீ எங்கள் உணவு விடுதிக்கு என் தந்தை எதற்காகப் பாடுபட்டாரோ அந்த கட்டிடத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக பற்றியது. என்னால் மேலும் பார்க்க முடியவில்லை, கோபத்திலும் தோல்வி மனப்பான்மையிலும் நான் படுக்கச் சென்றேன்.

வெள்ளிக்கிழமை காலை எங்கள் உணவு விடுதியின் முன்னாள் ஊழியர் ஒருவர் எனக்கு போன் செய்த போது முழு உணவு விடுதியும் எரிந்து சாம்பல் என்று பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார்.

முதலில் கோபம். எதற்காக என் தந்தை பாடுபட்டாரோ அது தவிடுபொடியானது. எரிந்து சாம்பலானது. புகையாகிப் போனது. அவரை பார்த்த போது அவர் முகத்தில் வேதனை படிந்திருந்தது. உள்ளூர் கலை சேகரிப்பு, பேஸ்மென்ட்டில் இருந்த நுண் பண்ணை ஆகியவை எரிந்து சாம்பல். அவர் உறவினர்களிடமும் நண்பர்களிடமும் போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் பேசுவதை நான் கேட்டேன், ‘என் கட்டிடம் எரியட்ட்டும், நீதி கிடைக்க வேண்டும். கருப்பரைக் கொன்ற அந்த அதிகாரிகளை சிறையில் தள்ளுங்கள்’ என்று கத்தினார்.

அப்போதுதான் நான் சுய உணர்வு பெற்றேன், இது காந்தி மஹால் என்ற உணவு விடுதியைப் பற்றியதல்ல. மீண்டும் காந்திமஹாலை எழுப்பி விடலாம் ஆனால் இழந்த கருப்பரின நபர் ஜார்ஜ் பிளாய்ட் உயிர் திரும்ப வருமா? ஆண்டாண்டு காலமாக போராட்டக்காரர்கள் அமைதியை நாடினர். அது பலனளிக்கவில்லை. இதுதான் நீதிக்கு வழி என்றால் அதற்கு கொடுக்கும் விலை சரியானதுதான் என்று உணர்ந்தேன்...” என்று அந்தப் பத்தியில் எழுதியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in