Last Updated : 03 Jun, 2020 05:33 PM

 

Published : 03 Jun 2020 05:33 PM
Last Updated : 03 Jun 2020 05:33 PM

கரோனா காலத்திலும் துளியும் குறையாத கருணை: ஆதரவற்றோரை நல்லடக்கம் செய்யும் ஷாம்

பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட பின் கரோனா அச்சத்தால் இறப்புகளுக்குச் செல்லவே மற்றவர்கள் அஞ்சிய நிலையில், ஆதரவற்ற 40 உடல்களை எடுத்துச்சென்று நல்லடக்கம் செய்ய உந்துசக்தியாக இருந்திருக்கிறார் திருச்சியைச் சேர்ந்த இளைஞர் ஷாம். அவரை வெறுமனே ஷாம் என்றால் யாருக்கும் தெரியாது. ‘பிளட் ஷாம்’ என்றால்தான் அனைவருக்கும் தெரியும்.

இந்த அடைமொழி கல்லூரி காலத்தில் இவருக்கு கிடைத்தது. 2008-ல் கல்லூரி இறுதியாண்டு படிக்கும்போது 15 நண்பர்களை இணைத்து இவர் தொடங்கிய ரத்தக் கொடையாளர் கூட்டமைப்பு ரத்ததானம் மூலம் பலரின் உயிர்களை காத்திருக்கிறது. அதன் விளைவாகத்தான் சாதாரண ஷாம் ‘பிளட் ஷாம்’ஆனார். அந்தக் கூட்டமைப்பில் இப்போது 15 ஆயிரம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.

முதலில் ரத்த தானத்தில் சேவையைத் தொடங்கிய இவர், 2012-ம் ஆண்டில் இருந்து சாலையில் இறந்து கிடக்கும் கால்நடைகளை எடுத்து அடக்கம் செய்யும் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அதற்கு அடுத்து ஆதரவற்ற உடல்களை அடக்கம் செய்யும் பணிக்குத் திரும்பினார்.

அப்படி இதுவரை 786 உடல்களை அடக்கம் செய்துள்ளார் ஷாம். சாலையோரம் அடிபட்டு இறந்து கிடந்த சுமார் ஐநூற்றுக்கும் மேற்பட்ட கால் நடைகள் உள்ளிட்ட விலங்குகளையும் எடுத்து அடக்கம் செய்திருக்கிறார். இதற்காக மாவட்ட நிர்வாகம் தொடங்கி பல்வேறு சேவை அமைப்புக்கள் வரை ஷாமை பாராட்டிக் கொண்டே இருக்கின்றன. இவரின் பணி, இந்தப் பொதுமுடக்கத்தின்போதும் முடங்கி விடாமல் தொடர்கிறது.

பொதுமுடக்கம் தொடங்கிய நாளிலிருந்து இன்றுவரை இவரது ’புது வாழ்வு’ சமூக நல அறக்கட்டளை மூலமாகத் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மதுரை ஆகிய மாவட்டங்களில் புற்றுநோய் பாதித்து இறந்த 13 ஆதரவற்றோர், வயது முதிர்வு மற்றும் பிற நோய்கள் காரணமாக இறந்த 27 பேர் ஆகியோரின் உடல்கள் எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.

பொதுமுடக்க காலத்தில் மட்டும் இந்த அமைப்பினர் 560 யூனிட் ரத்த தானமும் செய்திருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் கை கால்களை இழந்த வாழ்வாதாரம் இல்லாத மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் உள்ளிட்ட 173 குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான அத்தியாவசிய மளிகை பொருட்களையும் வழங்கி இருக்கிறார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்த மூதாட்டி ஒருவரை அடக்கம் செய்துவிட்டுத் திரும்பிய ஷாமிடம் பேசினேன். " என்னுடைய குடும்பத்தில் ஆறு பேரைப் புற்றுநோய்க்கு பறி கொடுத்திருக்கிறேன் . அந்த வலி தெரியும் என்பதால் இப்போது மற்ற சேவைகளுடன் சேர்த்து கைவிடப்பட்ட புற்று நோயாளிகளைப் பராமரிப்பதையும் எங்கள் கடமையாகக் கொண்டுள்ளோம்.

பராமரிக்க முடியாமல் கைவிடப்பட்ட 60 புற்று நோயாளிகளை அவர்களது வீட்டிலேயே வைத்துப் பராமரித்து வருகிறோம். அவர்களுக்குத் தேவையான உணவு, மருந்து மாத்திரைகள் எல்லாவற்றையும் எங்கள் அமைப்பு மூலமாக கவனித்துக் கொள்கிறோம். அவர்களைத் தவிர 28 எய்ட்ஸ் நோயாளிகளும் எங்கள் பராமரிப்பில் இருக்கிறார்கள். எங்கள் அமைப்பில் உள்ள 60 தன்னார்வலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் இந்த சேவைக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறார்கள். அவர்கள் தயவு இருக்கும்வரை எங்களது சேவைகள் தொடரும்" என்றார்.

சாமானியரான ஷாமின் சமூக சேவைகள் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x