Published : 02 Jun 2020 10:50 PM
Last Updated : 02 Jun 2020 10:50 PM

இரண்டு உயிர்கள் பறிபோனது: வனத்துறை அதிகாரியின் வேதனைப் பகிர்வு- யானைக்கு பழத்திற்குள் வெடிவைத்துக் கொடுத்த கொடூர சம்பவத்தை விவரிக்கும் பதிவு

விலங்குகளை வதைப்பதில் மனிதன் எப்போது விலங்கினத்தைவிட கொடியவன். ஏன் இப்போது இருக்கும் கரோனாவை விட கொடியவனாகி விடுகிறான்.

அதற்கு மற்றுமொரு சாட்சி கேரள மாநிலம் மலப்புரத்தில் நடந்திருக்கிறது.

இந்தக் கொடூர சம்பவம் நடந்து சில நாட்களாகியிருந்தாலும், அது பற்றிய கேரள வனத்துறை அதிகாரியின சமூகவலைதளப் பகிர்வு தற்போது இணையத்தில் வைரலாகி மனிதம் உள்ளவர்களை மனசாட்சி உள்ளவர்களை உலுக்கிக் கொண்டிருக்கிறது.

மோகன் கிருஷ்ணன் என்ற அந்த வனத்துறை அதிகாரி மலையாளத்தில் தனது முகநூலில் இதனைப் பதிவு செய்துள்ளார்.

அவருடைய பேஸ்புக் பதிவிலிருந்து..

கேரள மாநில மலப்புரத்திலுள்ள ஒரு கிராமத்துக்குள் காட்டு யானை ஒன்று புகுந்துள்ளது. ஊருக்குள் யானை புகுந்ததைப் பார்த்த கிராமவாசிகள் யாரோ அதற்கு அன்னாசிப் பழத்தைக் கொடுத்துள்ளனர். அந்த யானை அதை நம்பிக்கையுடன் வாங்கிக் கொண்டது. ஆனால், அந்தப் பழத்தினுள் வெடியையும் சேர்த்து வைத்துள்ளனர் சில விஷமிகள்.

யானை அந்தப் பழத்தைக் கடித்தபோது வெடி வெடித்துள்ளது. இதில் யானையின் வாய், நாக்கு படுகாயமடைந்தது.

அந்தக் காயத்துடன் கடும் வேதனையுடன் அந்த யானை கிராமத்தில் சுற்றித் திரிந்துள்ளது. ஆனால் அப்போது கூட அது யாரையும் தாக்கவில்லை. அங்கிருந்த எந்த ஒரு வீட்டையும் சேதப்படுத்தவில்லை. அந்த யானை தெய்வத்தன்மையுடன் நடந்து கொண்டது.
பசி ஒரு புறம் வலி ஒரு புறம் எனச் சுற்றிய யானை வெள்ளியாற்றில் இறங்கியது. அங்கேயே நின்றது. தண்ணீர் தனது வேதனையைத் தணிக்கும் என நம்பியது. ஒருவேளை ஈக்கள், பூச்சிகள் புண்ணில் மொய்ப்பதைத் தவிர்க்கக் கூட இதை அந்த யானை செய்திருக்கலாம்.

இந்த விஷயம் எங்களுக்குத் தெரிந்ததும் இரண்டு கும்கி யானைகள் (சுரேந்திரன், நீலகண்டனை) கூட்டிக் கொண்டு அங்கே சென்றோம். ஆற்றிலிருந்து அதை மீட்க முயற்சித்தோம். ஆனால் அதற்கு அது அனுமதிக்கவில்லை. மே 27 மாலை 4 மணிக்கு அந்த யானை இறந்து போனது.
வெடி வெடித்தபோது அந்த யானை நிச்சயமாக அதன் வயிற்றில் இருந்த குட்டியை நினைத்து கலங்கியிருக்கும்.

அந்த யானைக்கு உரிய இறுதி மரியாதை செலுத்த வேண்டும் என நினைத்தோம். அதனால் உடலை மீட்டு ஒரு வாகனத்தில் ஏற்றி அதனை காட்டுக்குள் கொண்டு சென்றோம்.

எங்கே அது பிறந்து வளர்ந்ததோ, எங்கே அது விளையாடித் திரிந்ததோ அங்கேயே அந்த யானையை கட்டைகளை அடுக்கி அதன் மீது கிடத்தினோம். பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர் 'அவள் தனியாக இல்லை' என்றார். அப்போது அவர் முகத்தில் தெரிந்த வேதனை அந்த முகக்கவசத்தைத் தாண்டியும் என்னால் உணர முடிந்தது. அந்த யானையை அங்கேயே சிதை மூட்டினோம். பின்னர் அதன் முன்னால் தலை வணங்கி இறுதி மரியாதை செலுத்தினோம் எனப் பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவைப் படித்த பலரும் குறிப்பாக விலங்கின ஆர்வலர்கள் தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்துவருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x