

ஊரடங்கால் நாம் முடங்கிக் கிடக்கும் இந்நேரம் வனத்திற்குள் விலங்குகளுக்குத் திருவிழா காலமாகத்தான் இருக்கும்.
வனம், கானகம், அடவி, புறவு, பொதும்பு என பல சொற்களால் காடுகள் குறிக்கப்படுகின்றன.
புவியின் மொத்த நிலப்பரப்பில் 30 சதவிகிதம் காடுகள் உள்ளன. சதுப்புநிலக் காடுகள், பசுமை மாறாக் காடுகள், இலையுதிர் காடுகள், ஊசியிலைக் காடுகள் என பல காடுகளில் பல வகை உண்டு. இவற்றில் வெப்ப மண்டல காடுகள் உலகில் வாழும் 50 சதவீத உயிரினங்களுக்கு உறைவிடமாகத் திகழ்கின்றன.
இக்காடுகளில் பல்வேறு வகையான விலங்குகள் வசித்து வருகின்றன. வன விலங்குகளை வேட்டையாடுவது தற்போது சட்ட ரீதியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், சட்ட விரோதமாக வன விலங்குகள் ஆங்காங்கே வேட்டையாடுவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
மனிதரின் அசாதாரண நாகரிக வளர்ச்சியால் வனமும் அவை சார்ந்த உயிரினங்களும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. சுதந்திரமாகச் சுற்றித்திரிந்த வன விலங்குகள் மனிதர்களைப் பார்த்து அடர்ந்த காடுகளுக்குள் அஞ்சி வாழ்கின்றன.
ஆனால், மனித ஆரோக்கியத்தை புரட்டிப்போட்டுள்ள கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் உலக நாடுகள் ஊரடங்கால் முடங்கிப்போய் உள்ள நிலையில், தங்களுக்கு முழு சுதந்திரம் கிடைத்ததுபோல் வனப்பகுதியிலும் வனத்தை ஒட்டியுள்ள குடியிருப்புப் பகுதிகளிலும் வலம் வரத் தொடங்கியுள்ளன வன விலங்குகள்.
பல்வேறு நாடுகளில் ஊரடங்கால் மனித இனம் முடங்கிக் கிடக்கும் இச்சூழ்நிலையில் காட்டுக்குள்ளே திருவிழா நடக்கிறது. சுற்றுலா பயணிகள் வருகை இல்லை, வனவிலங்குகள் புகைப்படக்காரர்கள் தொந்தரவு இல்லை, வனப்பகுதியைக் கிழித்துச்செல்லும் சாலைகளில் வாகனப் போக்குவரத்து இல்லை, வாகனங்களால் எழும் சப்தம் இல்லை, தங்களை தொந்தரவு செய்ய எவரும் இல்லை என்பவதால் வன விலங்குகள் சுதந்திரமாக உலா வருகின்றன.
இதுகுறித்து விருதுநகரைச் சேர்ந்த வனவிலங்குகள் புகைப்படக் கலைஞர் மோகன்குமார் கூறியபோது, "ஆம், காட்டுக்குள்ளே திருவிழா கோலமாகதான் இருக்கும். காரணம் நாம் அனைவரும் வீட்டுக்குள் தானே கடந்த 2 மாதங்களாக இருக்கிறோம்.
கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவிலும் பல்வேறு வெளிநாடுகளிலும் உள்ள காடுகலுக்கு சென்று 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வனவிலங்குகள் மற்றும் பறவைகளை புகைப்படம் எடுத்த அனுபவத்தில் என்னால் ஊகிக்க முடிகிறது.
தற்போதுள்ள சூழலில் நிச்சயமாக காட்டுக்குள் வனவிலங்குகள்,பறவைகளுக்கு திருவிழாவாக தான் இருக்கும். சுற்றுலா பயணிகள் வருகை இல்லை, அவர்களை அழைத்து வருகின்ற வண்டிகளின் சத்தமில்லை, பயணிகளின் தொல்லை தரும் குரல்கள் இல்லை.
அமைதியான இயற்கை சூழலை அனுபவித்து சுதந்திரமாக சுற்றித்திரியும் பறவைகளையும், வனவில்குகளுக்கும் திருவிழா காலம் தானே இந்த முழு அடைப்பு காலம்.
பொதுவாக வனவிலங்கு புகைப்படக் கலைஞர்கள் பெரும்பாலோர் சுற்றுச்சூழலை பாதுகாப்பதிலும், காட்டில் வாழும் உயிரினங்கலுக்கு தொல்லை ஏற்படமளிருப்பதிலும் கவனமயிருப்பர். சில நேரங்களில் சிலர் விதிகளை மீறுவதையும் பார்க்கிறோம். எப்படியிருந்தாலும் காட்டுக்குள் விலங்குள் சுந்திரமாக இருக்கும் நிகழ்வுகளை நேரில் பார்க்கும் பாக்கியம் இல்லையே என்ற ஏக்கம் தான் எனக்கு உள்ளது.
இந்த முழு அடைப்பு நீங்கிய பிறகும் காட்டில் வாழும் உயிரினங்கள் தனக்கு சொந்தமான இடத்தில் சுதந்திரமாக வாழ இடையூறாக நாம் இருக்க மாட்டோம் என்று சபதம் ஏற்போம். காடுகளையும், வனவிலங்குகலயும் பாதுகாப்போம்" என்றார்.