Last Updated : 02 Jun, 2020 03:19 PM

 

Published : 02 Jun 2020 03:19 PM
Last Updated : 02 Jun 2020 03:19 PM

’அவள் அப்படித்தான்’, ‘கிழக்கே போகும் ரயில்’, ‘இளமை ஊஞ்சலாடுகிறது’, ‘முள்ளும் மலரும்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘ப்ரியா’, ‘பைரவி’;  78ம் வருடத்தில் இளையராஜாவின் ஆல்டைம் பாடல்கள்

76-ம் ஆண்டு ‘அன்னக்கிளி’யின் மூலம் இசைப்பயணத்தைத் தொடங்கிய இளையராஜா, அடுத்த இரண்டே ஆண்டுகளில், அளவற்ற வெற்றிகளைச் சுவைக்கத் தொடங்கினார்.


‘எமக்குத் தொழில் கவிதை’ என்று பாரதி சொன்னது போல், இளையராஜா ‘எமக்குத் தொழில் இசை’ என்பதாகவே வாழ்ந்தார். இசை... இசை... இசை... என இசைபட வாழ்ந்தார்; வாழ்ந்து வருகிறார்.


76-ம் ஆண்டின் மத்தியில்தான் தொடங்கினார். அதன் பின்னர், தமிழ் சினிமாவின் நடுநாயகமாக, மையமாக இருந்துகொண்டு ராஜாங்கம் செய்தார் இளையராஜா.
இவரின் இசையை, மனதுக்கு நெருக்கமாக உணர்ந்தார்கள் ரசிகர்கள். ‘இதுதான் எங்கள் இசை’ எனக் கொண்டாடினார்கள். ‘கிராமத்துக் கதைக்கும் இசையமைக்கத் தெரியும்; நகரத்துக் கதைக்கும் இசையமைக்கமுடியும்; வெளிநாட்டுக் கதையிலும் வித்தியாசங்கள் காட்டமுடியும் என்பதை அடுத்தடுத்த இசையின் மூலமாக வெளிக்காட்டினார்; விஸ்வரூபமெடுத்து நின்றார்.


பாரதிராஜாவின் ‘16 வயதினிலே’வுக்குப் பிறகு அடுத்து அவரின் ‘கிழக்கே போகும் ரயில்’ திரைப்படமும் ஒருவருடம் கடந்து ஓடியது. மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. எல்லாப் பாடல்களையும் ஹிட்டாக்கிக் கொடுத்தார் இளையராஜா. ‘கோவில்மணி ஓசைதன்னை’, ‘மாஞ்சோலைக் கிளிதானோ’, ‘ஏதோ பாட்டு ஏதோ ராகம்’, ‘மலர்களே நாதஸ்வரங்கள்’ என எல்லாப் பாடல்களும் வெற்றி பெற்றன. குறிப்பாக, ‘பூவரசம்பூ பூத்தாச்சு பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு’ பாடல் அடைந்த வெற்றி, அந்த வருடத்தின் ஹிட்டு மட்டுமல்ல. இன்றைக்கு வரைக்கும் எல்லோருக்கும் பிடித்தமான பாடல். ‘தூது போ ரயிலே ரயிலே துடிக்குதொரு குயிலே குயிலே என்னென்னவோ என் நெஞ்சிலே...’ என்ற வரிகளை தங்கள் காதலைப் பொருத்திப் பார்த்தார்கள் ரசிகர்கள். பாடலின் நடுவே, ஜிகுஜிகுஜிகுஜிகு என்று வரும்போது அதை உச்சரிக்காதவர்களே இல்லை. ‘கரகரவண்டி காமாட்சி வண்டி, கிழக்கே போகுது பொள்ளாச்சி வண்டி’ என்ற வரிகள் பாடலை இன்னும் நெருக்கமாக்கிற்று. கங்கை அமரனின் பாடல். இளையராஜாவின் இசை.


இதே 78-ம் ஆண்டில், ருத்ரய்யாவின் ‘அவள் அப்படித்தான்’ வெளியானது. கமல், ரஜினி, ஸ்ரீப்ரியா, சிவசந்திரன் நடித்த இந்தப் படம் இன்று வரை பேசப்படுகிறது. படத்தில் சிவசந்திரன் பாடும் ’உறவுகள் தொடர்கதை ’ பாடல் மனதை மயிலிறகால் வருடும். பாடலின் தொடக்கத்தில் கிடாரும் பியானோவும் இழையும் போதே மனசு லேசாகிவிடும். இளையராஜா இசையமைத்த இன்றைக்கும் ‘ஆல்டைம்’ ஹிட் பாடல். கமல் பாடிய ‘பன்னீர் புஷ்பங்களே’ பாடலும் அப்படித்தான்!

கே.பாலாஜி தயாரிப்பில், சிவாஜி, லட்சுமி நடித்த ‘தியாகம்’ படத்தின் எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. ‘உலகம் வெறும் இருட்டு’, ‘வசந்த கால கோலங்கள்’, ‘தேன்மல்லிப் பூவே’, ’நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு’ என அத்தனைப் பாடல்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் இளையராஜா.
ஸ்ரீதருடன் முதன்முதலாக இளையராஜா இணைந்த ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ மறக்கவே முடியாது. ‘நீ கேட்டால்’, ‘ஒரே நாள் உனை நான்’, ‘கிண்ணத்தில் தேன் வடித்து’, ‘தண்ணி கருத்திருச்சு’, ‘வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா’ என ஒவ்வொரு பாடலையும் ஒவ்வொரு விதமாக்கி வித்தை காட்டுவதில் ராஜா தேர்ந்தவர் என மொத்தத் திரையுலகமும் வியந்தது.


மகேந்திரனின் ‘முள்ளும் மலரும்’, கலைஞானம் தயாரிக்க எம்.பாஸ்கர் இயக்கத்தில் வெளியான ‘பைரவி’, பஞ்சு அருணாசலம் தயாரிப்பில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் சுஜாதாவின் கதையில் உருவான ‘ப்ரியா’, பாரதிராஜாவின் இயக்கத்தில் கமலின் நடிப்பில் பாக்யராஜின் வசனத்தில் உருவான ‘சிகப்பு ரோஜாக்கள்’ என இசையாலும் பாடல்களாலும் பின்னணி இசையாலும் நம்மை முணுமுணுக்கச் செய்துகொண்டே இருந்தார். ‘செந்தாழம்பூவில்’, ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’, ‘நித்தம் நித்தம் நெல்லுச்சோறு’, ‘அடிப்பெண்ணே...’ என ‘முள்ளும் மலரும்’ பாடல்கள் எல்லாமே மலர்கள்தான்! இன்றைக்கும் மணக்கும் வாடாமலர்கள்தான்!


’பைரவி’யின் ‘கட்டப்புள்ள குட்டப்புள்ள’வும் ‘நண்டூருது நரியூருது’வும், ‘ப்ரியா’ படத்தின் எல்லாப் பாடல்களும் இனிமை ரகம். அதிலும் ‘டார்லிங் டார்லிங் டார்லிங் ஐலவ் யூ’ எனும் பாடலின் ஆரம்பத்தைக் கேட்டால், மிரண்டு போவோம். எல்லாப் பாடல்களுமே ஏதோ அடுத்த வார ரிலீஸ் படப் பாடல் என்று தோன்றும். சிக்ஸ் ஸ்டீரியோ டைப்பில் ரிக்கார்டு செய்யப்பட்ட படம் என்று சொல்லுவார்கள்.


‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தில் ரெண்டே ரெண்டு பாடல்கள். ரெண்டுமே சூப்பர் ஹிட். மலேசியா வாசுதேவன் பாடிய ‘இந்த மின்மினிக்கு’ பாடலும் கமல் பாடிய ‘நினைவோ ஒரு பறவை’யும் பலரின் செல்போன் காலர் டியூன், ரிங்டோன். மேலும் இந்தப் படத்தின் பின்னணி இசைக்கு வெறும் பத்தாயிரம் ரூபாய் செலவானதாகவும் ஒன்றரைநாளில் மொத்தப் படத்துக்கான பின்னணி இசையை அமைத்துக் கொடுத்தார் என்றும் சொல்லுவார்கள்.


‘உன்னை நம்பி நெத்தியிலே’, ‘என் கண்மணி உன் காதலி’, ‘அடடா மா மரக்குயிலே உன்னை இன்னும் நான் மறக்கயிலே’ என்று எல்லாப் பாடல்களையும் ரகளை இசையைக் கொடுத்து மெருகேற்றியிருப்பார் ‘சிட்டுக்குருவி’ படத்தில். இந்தப் படமும் 78ம் ஆண்டில்தான் வெளியானது.


’காற்றினிலே வரும் கீதம்’ படத்தில் ஜெயசந்திரன் பாடிய ‘சித்திரைச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன்’ பாடல் குதூகலக் குல்கந்து. எப்போது கேட்டாலும் உற்சாகம் தொற்றிக் கொள்ளும். ‘வட்டத்துக்குள் சதுரம்’ படத்தின் ‘இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்’ என்ற பாடல், பால்யச் சுகத்தையும் பின்னர் நிகழும் சோகத்தையும் நம் மனதில் தைத்துவிடுகிற பாடல்.


‘அச்சாணி’ என்றொரு படம். முத்துராமனும் லட்சுமியும் நடித்திருந்தார்கள். இந்தப் படத்தின் இரண்டு பாடல்கள், பசுமரத்தாணி. ‘இந்தப் படத்தில்தான் இந்தப் பாட்டா?’ என்று கேட்கிற பட்டியலில் உள்ள பாட்டு இவை. ஒன்று நம்மைத் தாலாட்டி அமைதிப்படுத்தும். அது... ‘தாலாட்டு... பிள்ளை உண்டு தாலாட்டு’. பாடலின் தொடக்கத்தில் வரும் வீணை ஓசை, எந்த வயதுக்காரரையும் காதலில் தள்ளும். மனமோ குழந்தையெனத் துள்ளும்!


இன்னொரு பாட்டு...


யாராக இருந்தாலும் சரி... நெஞ்சு கனத்துவிடும். கண்ணில் இருந்து கரகரவென கண்ணீர் வழிந்தோடும். இளையராஜாவின் இசையில், 78ம் ஆண்டு, ‘அச்சாணி’ படத்தில் வெளியான அந்தப் பாட்டு... ‘மாதா உன் கோயிலில் மணி தீபம் ஏற்றினேன்’.


இன்னும் நூறு வருடம் கழித்தும், ராஜாவின் ராஜாங்க இசையைச் சொல்லிச் சிலாகித்துக் கொண்டே இருப்பார்கள் ரசிகர்கள்.


இன்று இளையராஜா பிறந்தநாள் (ஜூன் 2ம் தேதி).


வாழ்த்துகள் ராஜா சார்!


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x