

மதுரையில் ஊரடங்கால் உணவுக்குக்கூட வழியின்றித் தவித்த, கைவிடப்பட்ட முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு உணவு வழங்குவதற்காக மதுரை எம்.பி.யும் எழுத்தாளருமான சு.வெங்கடேசன் ‘அன்னவாசல்’ என்ற திட்டத்தைத் தொடங்கினார். நேரடியாக அவர்களது இருப்பிடங்களுக்கே தேடிச் சென்று உணவு வழங்கும் திட்டம் இது.
கட்சி எல்லையைக் கடந்து பொதுமக்களின் பங்களிப்புடன் வெங்கடேசன் தொடங்கிய இந்தத் திட்டத்திற்குக் கிடைத்த வரவேற்பு காரணமாக, சமையல் கூடங்களின் எண்ணிக்கையும் தினசரி மதிய உணவு பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்தது. சுகுணா சிக்கன் நிறுவனம் அந்த உணவுடன் முட்டை வழங்கவும் முன்வந்தது.
மே 1-ம் தேதி தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் இன்று 33-வது நாளாகத் தொடர்கிறது. இதைத் தொடர்ந்து இதுவரையில் வழங்கப்பட்ட உணவுப் பொட்டலங்களின் எண்ணிக்கை 1.5 லட்சமாக உயர்ந்துள்ளது. அன்னவாசல் திட்டத்துக்கு உதவும் வகையில் நடிகர் சூர்யா ரூ.5 லட்சம் வழங்கிய நிலையில், தற்போது அரவிந்த் கண் மருத்துவமனையின் முதுநிலை மாணவர்கள் ரூ.1 லட்சம் வழங்கியுள்ளனர். ஏற்கெனவே உணவு பெறும் முதியவர்களில் சிலரே, தங்கள் சேமிப்புப் பணத்தையும் தங்கள் வீட்டில் செய்த ஊறுகாய், வத்தல் போன்றவற்றையும் இந்தத் திட்டத்துக்காக மனமுவந்து அளித்தனர்.
இந்நிலையில் சு.வெங்கடேசனின் இந்த முயற்சிக்கு கவிஞர் வைரமுத்து, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆகியோர் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளனர். "அன்னவாசல் என்ற திட்டத்தின் மூலம் ஆயிரமாயிரம் பசித்த வயிறுகளை அன்னத்தால் நிரப்பும் அரும்பணி மதுரையில் தொடர்ந்து நடைபெறுவது போற்றத்தக்க பொதுத் தொண்டாகும். அதனை முன்னெடுத்துத் திறம்பட நிகழ்த்தும் செயல்வீரர், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நம் பாராட்டுக்கு உரியவர்" என்று வைரமுத்து பாராட்டியிருக்கிறார்.
"கரோனா எனும் கொடுந்தொற்று உலகை ஆட்டிப் படைக்கும் பேரிடர்க் காலத்தில் ஆதரவற்றோர், முதியோர், மாற்றுத் திறனாளிகள், இரந்துண்போர், மனநலம் குன்றியோர் அனைவருக்கும் உணவளிக்கும் பணி சு.வெங்கடேசன் எம்பி ஒருங்கிணைப்பில் மதுரை அன்னவாசல் திட்டம் சிறப்பான தொண்டாக அமைந்துள்ளது. இத்தொண்டில் ஈடுபட்டுள்ள அனைவரையும் வாழ்த்தி நன்றி கூற, வார்த்தைகள் இல்லை. மனிதநேயப் பணிகள் தொடரட்டும்" என்று தவத்திரு பொன்னம்பல அடிகளார் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.