Published : 02 Jun 2020 10:16 AM
Last Updated : 02 Jun 2020 10:16 AM

ஊரடங்கு நிஜக் கதைகள் 2: பூட்டுகள் தானாகப் பூட்டிக்கொண்டால்...கழிப்பறையில் சிக்கித் தவித்த பெண்

நேயா

நகர்ப்பகுதிகளில் அடுத்த வீடு, அடுக்கக வீடுகளில் வசிப்பவர்கள்கூட பக்கத்து வீட்டிலிருப்பவரைப் பற்றி எதுவும் தெரிந்துகொள்ளாமல் இருக்கும் நபர்களே நம்மிடையே அதிகம். ஆனால், ஊரடங்குக் காலத்தில்கூட பக்கத்து வீட்டு நபர்களைத் தெரிந்துகொள்ளாமல் இருப்பது, எவ்வளவு ஆபத்தில் சென்று முடியும் என்பதை விளக்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

நவி மும்பையைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி, கோவிட்-19 தொற்று குறித்த சந்தேகம் காரணமாக சுயமாகத் தனிமைப்படுத்திக்கொண்டிருந்தார். அவருடைய வீட்டில் அவர் மட்டுமே வசிக்கிறார். எதிர்பாராதவிதமாக தன்னுடைய வீட்டுக் கழிப்பறையில் ஒரு நாள் காலையில் அந்த மாணவி சிக்கிக்கொண்டார். கதவு தானாகவே பூட்டிக்கொண்டுவிட்டது.

"ஒரு நாள் காலையில் நான் தியானத்தில் ஈடுபட்டிருந்தபோது, எனது அடுக்ககத்துக்கு சில தளங்கள் கீழே இருந்த அடுக்ககத்தில் இருந்து ஒரு பெண்ணின் அபயக் குரல் கேட்டது. அடுக்கக நிர்வாகிகளிடம் இருந்து சம்பந்தப்பட்ட பெண்ணின் கைபேசி எண்ணைப் பெற்றேன். அந்த எண்ணுக்கு அழைத்தபோது, அதிர்ஷ்டவசமாக அந்தப் பெண்ணின் கையில் கைபேசி இருந்தது. திறக்காத பூட்டின் படத்தை வாட்ஸ்அப்பில் எனக்கு அனுப்பச் சொன்னேன்" என்கிறார் பிரபல ஊடகம் ஒன்றில் பணிபுரியும் பிரக்யா.

படம் வந்த பிறகு கட்டிங் பிளையர், ஸ்குரூ டிரைவர் போன்றவற்றை அந்தப் பெண் அடைபட்ட கழிப்பறையின் காற்றுப்போக்கி வழியாகக் கொடுத்து, பூட்டை உடைப்பதற்கான வழியையும் பிரக்யா கூறினார். அந்தப் பெண் கழிப்பறையில் இருந்து வெற்றிகரமாக வெளியே வந்துவிட்டார். அதேநேரம் அந்த அடுக்ககத்தில் ஒரு பெண் தனியாக வசிக்கிறார் என்பது, அந்த தளத்தில் வாழ்ந்த யாருக்குமே தெரியவில்லை.

"நாம் மிகுந்த தனிமைவாதிகளாகிவிட்டோம். இனிமேலாவது அக்கம்பக்கத்தினரின் கைபேசி எண்களை வாங்கிப் பதிந்து வைக்குமாறு, அந்தப் பெண்ணிடம் அறிவுறுத்தினேன்" என்கிறார் பிரக்யா. இப்போது இருவருமே பல விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளும் தோழிகளாகிவிட்டார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x