Published : 01 Jun 2020 04:25 PM
Last Updated : 01 Jun 2020 04:25 PM

கொண்டாட்டமும் சேவையும் எங்களின் அடையாளம்: திரும்பிப் பார்க்க வைக்கும் திருப்பதிசாரம் இளைஞர்கள்

நாகர்கோவிலை அடுத்த திருப்பதிசாரம் கிராமத்து இளைஞர்கள் ரொம்பவே வித்தியாசமானவர்கள். அதிலும் தங்கள் நண்பர்களுக்குப் பிறந்தநாள் என வந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். திருப்பதிசாரம் விவேகா அபிவிருத்தி நூலகத்தின் முன்பு இவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்தைப் பார்க்கவே கூடிவிடும் ஜனத்திரள். அதேநேரம் பொதுச் சேவையிலும் இந்த இளைஞர்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்ல!

இப்பகுதி இளைஞர்கள் சேர்ந்து ‘நண்பர்கள் அறக்கட்டளை’ என்னும் பெயரில் பல்வேறு ஆக்கபூர்வமான பணிகளையும் செய்துவருகின்றனர். அவைகளுக்கு மத்தியில் சின்ன இளைப்பாறுதல்தான் இந்த பிறந்தநாள் கொண்டாட்டங்கள். தங்கள் நண்பர்களின் பிறந்தநாளுக்கு முந்தைய நாள் ஏதாவது திரைப்படக் கதாபாத்திரம் அல்லது பிரபலங்களைப் போல் மாறுவேடம் போட்டுவிட்டு, அவரோடு சேர்ந்து நகர்வலம் வருகின்றனர்.

போக்கிரி திரைப்பட சங்கிமங்கி வடிவேலு, சுந்தரா டிராவல்ஸ் திரைப்படத்தில் மணமகனாகத் தயாராகும் போண்டா மணி, தம்பி ராமையா, முத்துக்காளை, அய்யன் திருவள்ளுவர் ஆகியவை சமீபத்தில் இவர்கள் போட்ட கெட்டப்புகள். இவர்களின் பிறந்தநாளுக்கு என்ன வேஷம் போடுவார்களோ என ஒருகட்டத்தில் அப்பகுதி மக்களையே எதிர்பார்ப்போடு காத்திருக்க வைத்துவிடுகிறார்கள். இப்படி யூத்ஃபுல் கொண்டாட்டமாக இவர்களின் பொழுதுகள் நகர்வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மட்டும்தான். மற்ற நாட்களில் சேவை ரத்தினமாகவும் ஜொலிக்கின்றனர்.

இதுகுறித்து நண்பர்கள் அறக்கட்டளையின் இளைஞர்கள் இந்து தமிழ் திசை இணையத்திடம் கூறுகையில், “எங்கள் அறக்கட்டளையில் நூறு பேருக்கு மேல் இருக்கிறோம். அனைவரும் ரத்ததானம் செய்பவர்கள். எங்கு ரத்தம் தேவைப்பட்டாலும் போய்க் கொடுத்து வருகிறோம். இதேபோல் எங்கள் கிராமத்தில் கோயில் தெப்பக் குளத்தையும், வேறு சில குளங்களையும் நாங்களே அவ்வப்போது சுத்தம் செய்துவருகிறோம்.

கரோனா பொதுமுடக்கக் காலத்தில் உள்ளூர், வெளியூர்களில் இருக்கும் சமூக ஆர்வலர்களின் பங்களிப்போடு, எங்கள் கிராமத்தில் ஏழ்மை நிலையில் இருப்போருக்கு அரிசி, மளிகைப் பொருள்களும் விநியோகித்தோம். அப்படி எங்கள் கிராமத்தில் மட்டும் 200 பேருக்கும் மேல் உதவினோம். இதேபோல் முகக்கவசம் வழங்குவது தொடங்கி, கபசுரக் குடிநீர் விநியோகித்தது வரை கரோனா பொதுமுடக்க காலத்தில் எங்களால் இயன்ற சேவையை செய்தோம். மழை நேரங்களில் ஊரில் சாக்கடைகள் நிரம்பிவிடும். அப்போது அதை சுத்தம் செய்வது தொடங்கி எங்களால் முடிந்த பல்வேறு சமூகப் பணிகளையும் செய்கிறோம்.

அதேநேரத்தில் எங்களின் வயதுக்கே உரிய குணாதிசயங்களும் துரத்தும் அல்லவா? அப்படித்தான் பிறந்தநாளுக்கு மேக்கப் போட்டு ஊரைச் சுற்றும் வழக்கம் உருவானது. ஒருகட்டத்தில் அதுவே எங்களோட அடையாளமாகிடுச்சு. ஒவ்வொரு மனுசனோட வாழ்க்கையிலும், அதிலும் குறிப்பாக இளமைக் காலத்தில் வரும் பிறந்தநாள் ரொம்பவே முக்கியமானது. அன்னிக்கு நம்மள நாமே‘காமெடி பீஸா’ உருமாத்திக்கிட்டா வாழ்க்கையில் எந்தச் சூழலையும் எதிர்கொள்ளும் பக்குவமும் கிடைக்கும்.

அதேநேரத்துல இது வாழ்க்கையிலேயே மறக்க முடியாத பிறந்தநாளாவும் இருக்கும். அடுத்த வாரத்துல எங்க டீம்ல ஒருத்தரோட பிறந்தநாளு வருது. அன்னிக்கு எங்களோட வேஷத்தின் ஓர் அங்கமா கரோனா ஸ்பெஷல் மாஸ்க்கும் இருக்கும்” என்றனர்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x