Last Updated : 31 May, 2020 11:36 AM

 

Published : 31 May 2020 11:36 AM
Last Updated : 31 May 2020 11:36 AM

மே 31: புகையிலை எதிர்ப்பு நாள்...புகைபிடித்தால் புற்றுநோய் இலவசம்!

புகை பிடிப்பவர்களுக்கும் புகையிலை சார்ந்த பழக்கம் கொண்டவர்களுக்கும் மற்றவர்களைவிட புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம் என்பதெல்லாம் புதிய தகவல் இல்லை. ஆனால், ஒரு பக்கம் புற்றுநோய் மரணங்கள் அதிகரித்துவருவதும், இன்னொரு புறம் புகையிலைப் பொருட்கள் விற்பனை அதிகரித்துவருவதையும் ஒருசேரப் பார்க்கும் நிலைமை கொஞ்சம் மோசமானதுதான்.

அதிகரிக்கும் இறப்புகள்

உலக சுகாதார நிறுவனப் புள்ளிவிவரத்தின்படி புகை பிடிப்பதால் ஒவ்வோர் ஆண்டும் 80 லட்சம் பேர் உலக அளவில் உயிரிழக்கிறார்கள். இந்த எண்ணிக்கை 5 ஆண்டுகளுக்கு முன்புவரை 60 லட்சமாக இருந்தது. இந்த 5 ஆண்டுகளில் 20 லட்சம் அதிகரித்துள்ளது. உலக அளவில் இந்த 80 லட்சம் பேரில் 10 லட்சம் பேர் இந்தியர்கள். இந்தியாவில் ஏற்படும் மரணங்களில் தொற்றில்லா நோய்களான மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களில் காரணமாக இறப்போர் 53 சதவீதமாக உள்ளது. அதேபோல ஒவ்வோர் ஆண்டும் புதிதாக 25 லட்சம் பேர் புற்றுநோய்க்கு ஆளாவதாக ஆய்வறிக்கைகள் சுட்டிகாட்டுகின்றன. வரும் 2035-ல் இந்தியாவில் புற்றுநோய் இறப்பு 12 லட்சமாக அதிகரித்துவிடும் என்று அந்த ஆய்வறிக்கை எச்சரிக்கிறது. இவையெல்லாம் புகையிலை பயன்பாடுகளால் ஏற்படும் மரணங்கள். ஆனால், இதைப் பற்றி நம்மில் பலரும் அச்சப்படுவதோ, கவலைகொள்வதோ இல்லை.

உலகில்...

மாறாக புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை உலகில் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருப்பதே இதை நிரூபிக்கிறது. இன்றைக்கு உலக அளவில் 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் 57 சதவீதம் பேரும், பெண்களில் 10.8 சதவீதம் பேரும் புகையிலையை ஏதோ ஒரு வடிவத்தில் பயன்படுத்துகின்றனர். உலக அளவில் ஆண்கள் 47 சதவீதமும், பெண்கள் 12 சதவீதமும் புகை பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர். வளர்ந்த நாடுகளில் 42 சதவீத ஆண்களும் 24 சதவீத பெண்களும், வளரும் நாடுகளில் 48 சதவீத ஆண்களும் 7 சதவீத பெண்களும் புகை பிடிக்கிறனர்.

இந்தியாவில்...

இந்தியாவில் என்ன நிலைமை? இந்தியாவில் வயதுவந்தோரில் (Adult) 34.6 சதவீதம் பேர் புகை பழக்கம் உள்ளவர்கள் என்கிறது புள்ளிவிவரம். மொத்த எண்ணிக்கையில் 47.3 சதவீதம் பேர் ஆண்கள்; 20.7 சதவீதம் பேர் பெண்கள். 1998-ம் ஆண்டில் இந்தியாவில் புகை பழக்கம் உள்ளவர்களின் எண்ணிக்கை 7.9 கோடிப் பேர். 2016-ம் ஆண்டில் இது 10.8 கோடியாக அதிகரித்தது. புகையிலையால் ஏற்படும் வாய் புற்றுநோய், இந்தியாவில் லட்சத்தில் 10 பேருக்கு ஏற்படுகிறது. புகையிலையால் வரும் புற்றுநோய்களில் இதுவே அதிகம். 2020-ம் ஆண்டில் இந்தியாவில் 13 சதவீதம் இறப்புகளுக்குப் புகையிலை பழக்கமே காரணமாக இருக்கும் என்று ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கணிக்கப்பட்டது. இப்போது அந்த எண்ணிக்கைக்கு அருகே இந்தியா வந்துவிட்டது.

என்னென்ன பாதிப்பு?

புகை பிடித்தால் எப்படிப் புற்றுநோய் வருகிறது? புகையிலையில் நோயை உண்டாக்கக்கூடிய கார்பன் மோனாக்சைடு நச்சு அதிகம் உள்ளது. இதனால்தான், தொடர்ந்து புகை பிடிப்பவர்களுக்கு நுரையீரல், வாய், சிறுநீர்ப் பை, மார்பகம் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படுகிறது. இது மட்டுமல்லாமல் மாரடைப்பு, பக்கவாதம், ஆஸ்துமா, காசநோய், மலட்டுத் தன்மை என மற்றப் பாதிப்புகளும் ஏற்படுகின்றன என்கின்றனர் மருத்துவர்கள்.

யாருக்கெல்லாம் பாதிப்பு?

“ஒரு பாக்கெட், இரண்டு பாக்கெட் என ஒரே நாளில் அதிகம் புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இதே எண்ணிக்கையில் ஒருவர் தொடர்ந்து 10 ஆண்டு புகை பிடித்தால் போதும், புற்றுநோய் நிச்சயமாக வந்துவிடும். வீட்டிலும், பொது இடத்திலும் புகை பிடிப்பதால் நமக்கு மட்டுமில்லாமல் நம் அருகில் இருக்கும் ரத்த உறவுகள், நண்பர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

புகை பிடிக்கும் பெண்களின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்திருப்பதால், முன்பைவிட அவர்களும் அதிகப் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். கிராமப்புறப் பெண்கள் வாயில் புகையிலையை அடைத்துக் கொண்டிருப்பதைச் சர்வ சாதாரணமாகப் பார்க்கலாம். வாயில் புகையிலையை அடைத்துக் கொண்டிருப்பதால் புண் ஏற்படுகிறது. இது நாளடைவில் புற்றுநோய் புண்ணாக மாறிவிடுகிறது.

புற்றுநோய் வராமல் தடுக்க வேண்டும் என்றால் புகை பிடிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். புகையிலை பொருட்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். புகையிலையால் ஏற்படும் பாதிப்புகளைப் பள்ளிகளிலேயே மாணவர்களுக்குச் சொல்லித் தர வேண்டும்" என்கிறார் சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் சிறப்பு மருத்துவர் அசார் உசேன்.

இந்தப் பிரச்சினைகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க என்ன செய்ய வேண்டும்? புகை பிடித்தல், பான், குட்கா, புகையிலை பயன்படுத்துதல் போன்ற பழக்கங்களை நிறுத்துவதுதான் ஒரே வழி. புகை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து விடுபட முதலில் எளிய வழிகளான யோகா, ஆசனங்களைச் செய்யலாம். தொடர்ந்து தியானத்துக்கு நகரலாம். புகையிலை அடிமைத்தனத்தில் இருந்து மனதை மாற்ற, வேறு விஷயங்களில் ஈடுபடலாம். அது சாக்லேட் தொடங்கி நூலகம் வரை எதுவாகவும் இருக்கலாம். கொஞ்சம் கொஞ்சமாக இப்படியே மாற்றி, புகை பிடிப்பதிலிருந்து ஒட்டுமொத்தமாக விடுபட முடியும். அது ஒவ்வொருவரின் மனஉறுதியின் வீரியத்தைப் பொறுத்து வேகமாக நிகழும்.

புகையிலை எதிர்ப்பு நாள்

புற்றுநோய் இல்லாத உலகத்தை உருவாக்க வேண்டும் என்பதே இன்றைய உலக விருப்பம். இதை 33 ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்து புற்றுநோய் இறப்புகளைக் குறைக்கவும், புகையிலை பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும் புகையிலை எதிர்ப்பு தினத்தை 1987-ல் உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. இதற்காக ஒவ்வோர் ஆண்டும் புதிய வாசகம் ஒன்றை உருவாக்கி உலக சுகாதார அமைப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. 2020-ம் ஆண்டுக்கான வாசகம், ‘புகை பழக்கத்திலிருந்து இளைஞர்களைப் பாதுகாப்போம்; புகையிலை மற்றும் நிகோடின் பயன்பாட்டிலிருந்து தடுப்போம்’ என்பதுதான்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x