

இத்தாலியின் போல்க்னெ பகுதியைச் சேர்ந்தவர் பாடலாசிரியர், இசையமைப்பாளர், பாடகர் சோஃபியா. மவுத்ஆர்கன் என்னும் வாத்தியத்தை வாசிப்பதிலும் ஆர்வம் உள்ளவர். அவருக்குப் பிடித்தமான மவுத்ஆர்கன் என்னும் ஹார்மோனிகா வாத்தியத்தை வாசிக்கும் கலைஞர் இந்தியாவில் கொல்கத்தாவைச் சேர்ந்த டாக்டர் பபிதா பாசு. இணையத்தின் வழியாக வெளியாகும் பபிதாவின் ஹார்மோனிகா வாத்திய இசையால் ஈர்க்கப்பட்ட சோஃபியா அவருடன் இணைந்து ஓர் இசைப் பாடலை வெளியிட வேண்டும் என்ற தன்னுடைய ஆர்வத்தை பபிதாவிடம் இணையத்தின் வழியாக பகிர்ந்திருக்கிறார். கலைஞர்களுக்கும் கலைக்கும் எல்லை ஏது? உடனே அதற்கான பாடலை முடிவு செய்யுங்கள் என்று கூறியிருக்கிறார் பபிதா.
இந்தியக் கலைஞர்களும் இத்தாலியக் கலைஞரும் இணையத்தின் வழியாகவே தங்களின் படைப்புகளை ஒன்றிணைத்த கதையை பபிதா நம்மிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து…
“இந்தியாவுக்கு முன்னதாக இத்தாலியில் கரோனா பாதிப்பால் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இசைக் கலைஞர்கள் பலரும் தங்களின் வாழ்வாதாரத்தை சில நாட்களிலேயே இழந்து தவிப்பதை என்னிடம் வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டார் சோஃபியா. அதிலிருந்து இசைக் கலைஞர்கள் மீள்வதற்கான விழிப்புணர்வை அளிக்கும் பாடலையே உங்களுடன் சேர்ந்து பாட விரும்புகிறேன் என்றார்.
இத்தாலியின் புகழ் பெற்ற தேசபக்திப் பாடலான `பெல்லா சியோ’ உலகம் முழுவதும் நெட்ஃபிளிக்ஸின் `Money Heist’ தொடரின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானது. இந்தப் பாடலை சோஃபியா அவரின் வீட்டு பால்கனியில் பாடும் வீடியோவை எனக்கு அனுப்பினார். அதை நான் கேட்டேன். அந்தப் பாடலோடு தர்பாரி கானடா ராகத்தின் மென்மையையும் இழையோட வைத்தால் எப்படி இருக்கும் என்று எனக்குத் தோன்றியது? எனக்கு தோன்றிய எண்ணத்தை அதற்கேற்ற இசை வடிவமைப்போடு எனக்கு அளித்தார் என்னுடைய குருவான ராணா தத்தா.
ஒற்றுமையின் மூலம் பிரச்சினைகளைக் களைவோம். மனதால் ஒன்றுபடுவோம் என்பதே இன்றைய மனித குலத்தின் தேவையாக இருக்கிறது. அதை இசையின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறோம்.
இந்தியாவிலும் இத்தாலியிலும் இருக்கும் இசைக் கலைஞர்களை ஊக்குவிப்பதற்கும் எளிய உதவிகள் அவர்களுக்குக் கிடைப்பதற்கும் எங்களால் முடிந்த இசைச் சேவையாகவே இதைக் கருதுகிறோம் என்கிறார் டாக்டர் பபிதா பாசு.
இந்திய - இத்தாலி இசை சங்கமிக்கும் பாடலைக் காண: