

கடந்த ஆண்டு இதே வைகாசி மாதத்தில் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை விற்ற ஒரு கட்டு வாழை இலை, தற்போது ‘கரோனா’ ஊரடங்கால் ஹோட்டல்கள், விஷேசங்கள் எதுவும் நடக்காததால் ரூ.100 முதல் ரூ.150 வரை மட்டுமே விற்கிறது.
வாழை மரத்தில் கிடைக்கக்கூடிய வாழைப்பூ, வாழைக்காய், வாழைப்பழம், வாழைத்தண்டு, வாழை இலை உள்ளிட்ட அதன் ஒவ்வொரு பாகங்களும் விவசாயிகளுக்கு நிரந்தர வருவாயையும், மக்களுக்கு ஆரோக்கியமான வாழ்வையும் தரக்கூடியவை. இதில், வாழை இலைகளுக்கு ஆண்டு முழுவதும் நிரந்தர வரவேற்பு உண்டு.
திருமண விழாக்கள், திருவிழாக்களில் மட்டுமில்லாது வீடுகளில் உறவினர்களுக்கு வழங்கும் விருந்துகளில் விருந்தினர்களுக்கு வாழை இலைகளில் சாப்பாடு வழங்குவது நமது பண்பாடு.
ஹோட்டல்களில் கூட பணம் வாங்கிக் கொண்டு சாப்பாடு வழங்கினாலும் வாடிக்கையாளர்களை விருந்தினர்களை போல் உபசரித்து வாழைஇலையில் சாப்பாடு வழங்குவதை கடைபிடிக்கின்றனர்.
அதனால், தமிழர்களுடைய பாரம்பரியத்தோடு வாழை இலைக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. அப்பேற்பட்ட வாழை இலை இந்த ‘கரோனா’ ஊரடங்கில் மவுசு இழந்து இதுவரை வாழவைத்த விவசாயிகளுக்கு வாழ்வில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த வைகாசி மாதம் இந்த நேரத்தில் தமிழகத்தில் ஒரு கட்டு வாழை (200 வாழை இலைகள்) இலை ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை விற்பனையாது. அதே வைகாசி மாதமான தற்போது வாங்க ஆளில்லாமல் ஆர்டரின் பேரில் மட்டுமே விவசாயிகள் அறுத்து வாழை இலைகளை வியாபாரிகளுக்கு விற்கின்றனர். அதுவும், ரூ.100 முதல் ரூ.150 வரை மட்டுமே விற்பனையாகிறது.
வாழை இலை வியாபாரி பிரவீன்குமார் கூறுகையில், ‘‘திருமணம், காது குத்து போன்ற எந்த விஷேசமும் இல்லை. அப்படியே நடந்தாலும் 10 பேரு, 20 பேரு மட்டுமே கலந்துக்கனும் என்று சொல்லிவிட்டார்கள்.
ஹோட்டல்களிலும் பார்சல் சாப்பாடுதான் கொடுப்பதால் வாழை இலை தேவை குறைந்துவிட்டது. ஒரு கட்டு ரூ.100 முதல் ரூ.150 வரை விற்கிறது. முகூர்த்த நாட்கள் அடுத்தடுத்து வர உள்ளது.
ஆனால், விலை உயர வாய்ப்பு இல்லை. எங்களாவது ஒரு கட்டுக்கு 10 ரூபாய், 20 ரூபாய்க்கு கிடைக்கிறது. அறுத்து எடுத்து வர்ற விவசாயிகளுக்கு அது கூட கிடைப்பதில்லை.
ஒரு கட்டு வாழை அறுப்பு கூலி 50 ரூபாய். அதை சுமந்து ஆட்டோவில் ஏற்றி சந்தைக்கு கொண்டு வர 50 ரூபாய் செலவாகிறது. ரூ.100, ரூ.150க்கு விற்றால் அவர்களுக்கு எப்படி கட்டுப்படியாகும்.
விவசாயிகளுக்கு வாழைப்பழம் இரண்டாவதுதான். அன்றாட வருமானத்திற்கு வாழை இலைதான் அவர்களுக்கு வாழ்வாதாரம். பறித்த இலைகளை விற்க முடியாமல் நிறைய விவசாயிகள் மரத்திலே அறுக்காமல் விட்டதால் இலைகள் கிழிந்து கிடக்கிறது, ’’ என்றார்.