திமுக எம்எல்ஏவும் காங்கிரஸ் எம்.பி.யும் அரசு விழாவில் திட்டமிட்டுப் புறக்கணிப்பா?- ஊரடங்கிலும் தொடரும் அரசியல்  யுத்தம்

ஆஸ்டின்
ஆஸ்டின்
Updated on
1 min read

சில மாதங்களுக்கு முன்பு சட்டப்பேரவையில் தான் பேசிக்கொண்டிருந்தபோது அடிக்கடி குறுக்கிட்ட திமுக உறுப்பினர் ஆஸ்டினைக் கண்டித்த முதல்வர், "என்னங்க அர்த்தம்... எப்ப பார்த்தாலும் குறுக்க பேசிக்கிட்டே இருக்கீங்க” எனத் தொடங்கி கடுமையாக விமர்சித்தார். அது சமூக வலைதளங்களில் வைரலானது. இப்போது மீண்டும் ஒரு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார் ஆஸ்டின்.

குமரி மாவட்டம், அஞ்சுகிராமத்தில் புதிய பறக்கின்கால் காலனியில் வீட்டு வசதிவாரியம் சார்பில் 480 புதிய வீடுகள் கட்டப்பட்டன. அதற்கான திறப்பு விழா இன்று காலையில் நடந்தது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்தவாறே காணொலி மூலம் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதற்கென இந்தத் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் ஆஸ்டின், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் ஆகியோரும் வந்திருந்தனர். ஆனால், இவர்களுக்கு மேடையில் இருக்கை வசதி அமைக்காமல் பார்வையாளர்கள் வரிசையில் அமரச் சொன்னதால் இருவரும் நிகழ்ச்சியைப் புறக்கணித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆஸ்டின், ”இந்த விழாவுக்கு அதிகாரிகள் முறையாக போனில் அழைத்துத்தான் வந்தோம். ஆனால், நிகழ்ச்சிக்கு வந்த எங்களை மேடை ஏற்றாமல் பார்வையாளர்கள் வரிசையில் அமரச் சொன்னார்கள். தொகுதி எம்எல்ஏ, எம்.பி.யையே மேடை ஏற்றாமல் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரத்தை மேடை ஏற்றுகிறார்கள். மேடையில் ஆட்சியர், தளவாய் சுந்தரம், இரண்டு பயனாளிகள் என நான்கு பேர் இருக்கிறார்கள். கூடுதலாக இரண்டு அடி மேடையை நீட்டி சம்பந்தப்பட்ட தொகுதியின் மக்கள் பிரதிநிதிகளை மேடை ஏற்றியிருக்கலாம்.

டெல்லி பிரதிநிதி, அரசுகளுக்குத்தான். மக்களோடு அவர்களுக்கு என்ன சம்பந்தம்? இது எங்களுக்கான புறக்கணிப்பு அல்ல. எங்களைத் தேர்ந்தெடுத்த மக்களைப் புறக்கணித்திருக்கிறார்கள். இதைப் பற்றிக் கேட்டால், 'முதல்வர், நான்குபேர்தான் மேடையில் இருக்கவேண்டும் என உத்தரவுபோட்டிருக்கிறார்' என்கிறார்கள்” என்றார்.

பொதுமுடக்கத்தில் பல்வேறு தொழில்களும் முற்றாக முடங்கிப் போய் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்த சூழலிலும் ஆளும் கட்சியும் ஆண்ட கட்சியும் தங்களுக்குள் அரசியல் யுத்தம் நடத்திக்கொண்டிருப்பது வேதனை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in