Published : 28 May 2020 03:35 PM
Last Updated : 28 May 2020 03:35 PM

நாடு முழுவதும் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் எண்ணிக்கை 45 கோடி: அதிர்ச்சியூட்டும் ஆய்வு முடிவு

கரோனா பொதுமுடக்கக் காலத்தில், புலம்பெயர் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் எத்தனை கொடூரமானவை என்பதற்கு அன்றாடம் வெளியாகும் செய்திகளே ஆதாரம்.

பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் எவ்வளவு பேர் உள்ளனர் என்பது தொடர்பான புள்ளி விவரங்களை எந்த மாநில அரசாலும் முழுமையாகக் கொடுக்க முடியவில்லை. இந்நிலையில் கடந்த ஆண்டு வெளியான, ‘Migration and Women Casual Workers: A Study in Superexploitation’ எனும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் புள்ளிவிவரங்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி ஓரளவு தோராயமான தகவல்களை வழங்குகின்றன.

தமிழகத்தைப் பொறுத்தவரை வெளிமாநிலத் தொழிலாளர்களின் எண்ணிக்கை, மொத்தமே ஒன்றரை லட்சம் அல்லது இரண்டு லட்சம்தான் என்று போலீஸார் சொல்கிறார்கள். ஆனால், நேற்று வரை ரயிலேற்றி அனுப்பப்பட்டவர்கள் மட்டும் 40 ஆயிரம் பேர். இன்னும் பலர் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளிடம் விண்ணப்பங்களை அளித்து வருகிறார்கள். கேரளம், ஆந்திரம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, டெல்லி என அனைத்து மாநிலங்களின் நிலையும் இதுதான்.

இப்படியான தொழிலாளர்களின் தோராயமான எண்ணிக்கை மற்றும் பொருளாதார வாழ்நிலை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் கடந்த ஆண்டு ‘Migration and Women Casual Workers: A Study in Superexploitation’ புத்தகம் வெளியானது. இந்த நூலை ’உள்நாட்டு அகதிகள்’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்து வருகிறார் நீலகிரி கூடலூரைச் சேர்ந்த விவசாயிகள் - பழங்குடிகள் முன்னேற்ற சங்கச் செயலாளர் எம்.எஸ்.செல்வராஜ்.

அவரிடம் இதுகுறித்துப் பேசினேன்.
“எங்களைப் போன்று மாநிலந்தோறும் இயங்கிவரும் இயக்கங்கள் மூலம் கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக இந்தக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. அவற்றைத் தொகுத்து, 100 பக்கங்கள் கொண்ட நூலாகக் கடந்த ஆண்டு டெல்லியில் வெளியிட்டோம். அதைத் தமிழில் கொண்டுவர எல்லா வேலைகளும் முடிந்துவிட்டன. பொதுமுடக்கம் காரணமாக அதற்கான அச்சுப் பணி தொய்வடைந்துள்ளது” என்று பேச ஆரம்பித்தவர், புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

“இந்தியாவிலேயே புலம்பெயர் தொழிலாளர்கள் மிகுதியாக இருக்கும் மாநிலம் மகாராஷ்டிராதான். 2001-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 79 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் அம்மாநிலத்தில் இருப்பது தெரியவந்தது. தற்போது அங்கே 2 கோடிக்கும் அதிகமான புலம்பெயர் தொழிலாளர்கள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவர்களில் பிஹார், ஒடிசா, குஜராத், ஜார்க்கண்ட் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களே அதிகம். 22.5 லட்சம் தமிழர்கள் மகாராஷ்டிராவில் இருக்கிறார்கள். அவர்களில் பலர் ஆத்தூர், திருவண்ணாமலை, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் பகுதி கிராமங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் பட்டியலினத்தவர். பலர் அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டார்கள். தமிழகத்தில் வசிக்கும் பட்டியலினத்தவரை ஒப்பிடும்போது அவர்களின் பொருளாதார வாழ்க்கை சற்றே மேம்பட்டதாகவே இருக்கிறது.

புலம்பெயர் தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் மாநிலங்களில் இரண்டாவது மாநிலம் தமிழகம்தான். உத்தரகாண்ட், டெல்லி, குஜராத் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

எம்.எஸ்.செல்வராஜ்

தமிழகத்தில் நாங்கள் ஒரு வருடம் முன்பு கணக்கெடுத்தபோது 87 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் இங்கு இருந்தது தெரியவந்தது. இன்றைய தேதிக்கு அந்த எண்ணிக்கை ஒரு கோடியைத் தொட்டிருக்கும். கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் புலம்பெயர் தொழிலாளர்கள் வசிக்கிறார்கள். சென்னை, மதுரை, திருச்சியிலும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பிஹார், குஜராத், உத்தரப் பிரதேசம், ஒடிசா, ஜார்க்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

1990-களில் நிகழ்ந்த தாராளமயமாக்கலின் தொடர்ச்சியாகவே இந்தப் புலம்பெயர்வு நடந்துள்ளது. புதிய பொருளாதார மண்டலம், சிறப்புப் பொருளாதார மண்டலம், மாறிவந்த அரசியல் சூழல் போன்றவை இதற்குக் காரணமாக இருந்துள்ளன. புலம்பெயர்ந்து வந்தவர்களில் பலருக்கு அவரவர் கிராமங்களில் ஓரளவுக்கு நிலபுலன்கள் இருக்கும். மழையில்லை, போதிய விளைச்சல் இல்லை, விவசாயத்திற்குப் பாதுகாப்பின்மை, தொழிற்சாலைகளுக்காக நிலம் கையகப்படுத்தப்படுவது என்பன போன்ற காரணங்களால் அவர்கள் பிழைப்புக்காக வெளி மாநிலங்களுக்குப் புலம்பெயர்ந்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இங்கு வந்திருக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் இரும்பு உருக்குதல், பனியன் உற்பத்தி, கட்டிடங்கள், பாலம், மெட்ரோ திட்டம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் என கடினமான வேலைகளிலேயே ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்கள் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் வேலை பார்க்க வேண்டிய நிலை இருக்கிறது. சொந்த ஊரில் தினக்கூலியாக ரூ.100, ரூ.200 வாங்கவே திண்டாடியவர்கள், இங்கே ரூ.300, ரூ.400 கிடைப்பதால் சற்றே நிம்மதியடைந்திருக்கிறார்கள்.

புலம்பெயர் தொழிலாளர்களை அழைத்து வர இடைத்தரகர்கள் இருக்கிறார்கள். இங்குள்ள நிறுவன அதிபர்களுக்கும் அவர்களுக்கும் இடையில்தான் நேரடித் தொடர்பு இருக்கும். ஒரு தொழிலாளிக்கு ரூ.500 முதல் ரூ.600 வரை பெற்றுக்கொள்ளும் இடைத்தரகர், தான் அழைத்து வந்த புலம்பெயர் தொழிலாளிக்கு ரூ.300 முதல் ரூ.400 வரையே அளிப்பார். இப்படி நூற்றுக்கணக்கான நிறுவன அதிபர்களிடமிருந்து கணிசமான தொகையை இடைத்தரகர்கள் பெற்றுக்கொள்வார்கள்.

இந்தக் கரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குப் போக விருப்பப்பட்டாலும், இடைத்தரகர்கள் விடுவதில்லை. ஏதாவது ஒரு காரணம் சொல்லி இங்கேயே இருக்க வைக்கப் பார்க்கிறார்கள். அதையும் மீறி ஊருக்குப் புறப்படும் தொழிலாளர்களுக்கு அதிகாரிகள், அரசியல்வாதிகள் துணையுடன் தொந்தரவு தருகிறார்கள் இடைத்தரகர்கள்.

ஒவ்வொரு இடைத்தரகரும், தொழிலாளிகளின் பெயரால் முதலாளிகளிடம் பெருந்தொகையை முன்பணமாக வாங்கி வைத்திருப்பார். தொழிலாளர்கள் ஊருக்குப் போனால் திரும்பி வரமாட்டார்கள் என்பதாலும், உள்ளூர்த் தொழிலாளர்களை வைத்து வேலை வாங்கினால் 8 மணி நேர வேலை, ரூ.1,000 தினக் கூலி, மதிய உணவு, இடைவேளைகளில் பலகாரம் என்றெல்லாம் நிபந்தனைகள் எழும். தொழிலாளர் சங்கம் மூலம் உரிமைக் குரல்களும் எழும் என்பதாலும் புலம்பெயர் தொழிலாளர்களைத் தடுத்து நிறுத்துவதில் முதலாளிகளும் இடைத்தரகர்களும் முனைப்பு காட்டுகிறார்கள். தமிழகம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் இப்படி மிரட்டிப் பணிய வைக்கப்பட்டு, சொந்த ஊருக்குப் போக முடியாமல் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் ஏராளம்.

எங்கள் கணக்குப்படி எப்படிப் பார்த்தாலும் நாடு முழுக்க 40 கோடி முதல் 45 கோடி வரை புலம்பெயர் தொழிலாளர்கள் இருப்பார்கள். இவர்களில் பெரும்பாலானோர் பொது முடக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களை அடையாளம் கண்டு அரசுகள் உதவ முன்வரவேண்டும்” என்றார் எம்.எஸ்.செல்வராஜ்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x