Published : 28 May 2020 02:42 PM
Last Updated : 28 May 2020 02:42 PM

செயலி மூலம் விண்ணப்பித்தால் மட்டுமே மது: மதுக்கடைக்குப் போகும் முன்பே தள்ளாடும் கேரள மதுப்பிரியர்கள்!

கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்கும் விதமாக கேரளாவில் இத்தனை நாளும் மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தன. இதையடுத்து மது கிடைக்காத விரக்தியில் தீவிர குடிநோயாளிகள் சிலர் தற்கொலை செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து கேரளத்தில் தீவிரக் குடிநோயாளிகளுக்கு மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இருந்தால் மது விநியோகிக்கலாம் என முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார். சமூக ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இது தொடர்பான வழக்கில் கேரள உயர் நீதிமன்றமும் ‘மதுவை எந்த வகையிலும் மருந்துப் பொருளாக ஏற்க முடியாது’ என அரசுக்குக் குட்டு வைத்தது.

இதனால் மது விற்பனை செய்யும் திட்டத்தைக் கேரள அரசு கைவிட்டது. இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு கேரள அரசு மீண்டும் கள்ளுக் கடைகளைத் திறந்தது. அதன் தொடர்ச்சியாக இன்று முதல் மாநிலம் முழுவதும் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

கேரள மாநில மதுபானங்கள் விற்பனை அமைப்பான ’பெவ்கோ’ இதற்கென்று பிரத்யேகமாக ‘பெவ் க்யூ’ என்னும் செயலியை நிறுவி, அதன் மூலம் மதுப்பிரியர்களுக்கு முன்னதாகவே டோக்கன்களை விநியோகித்தது. இந்த டோக்கனைப் பெற்றவர்கள் செயலி மூலம் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மதுக்கடைகளில் மட்டுமே மதுவை வாங்க முடியும். இப்படி மாநிலம் முழுவதும் இருக்கும் 1,168 மதுக்கடைகளுக்கும் செயலி மூலம் டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் அரசு நடத்தும் ‘பெவ்கோ’ மதுக்கடைகளும், மாநில கூட்டுறவு விற்பனைச் சந்தைப்படுத்துதல் பிரிவின் கீழ் வரும் மது விற்பனையகங்களும் அடங்கும்.

தமிழகத்தில் இதற்கு முன்பு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டபோது மது வாங்குவதற்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டது. இதனால் மதுப்பிரியர்கள் ஆதார் அட்டையைத் தேடி அலைந்தனர். சில வீடுகளில் மனைவிமார் தங்களது கணவன்மார் குடிக்கக்கூடாது என்பதற்காக ஆதார் அட்டைகளைப் பதுக்கிவைத்த சம்பவங்களும் நடந்தன.

அதேபோல் கேரளத்தில் மது வாங்குவதற்கு ஸ்மார்ட்போனில், ப்ளே ஸ்டோரில் ’பெவ் க்யூ ஆப்’ மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பதால் ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் தங்கள் நண்பர்களை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர் மதுப்பிரியர்கள். இன்னும் சில குடிநோயாளிகளுக்கு சேமிப்பு, தரமான செல்போன் பயன்படுத்தும் அனுபவம் இல்லாததால் குடிக்கும் முன்பே தள்ளாடும் நிலையில் உள்ளனர். இதேபோல் குடிப்பதற்காகவே டெக்னாலஜி படிக்க வேண்டிய அவசியமும் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

இன்று முதல் கேரளத்தில் மதுவிற்பனை தொடங்கியுள்ள நிலையில், ‘பெவ் க்யூ ஆப்’ நேற்றுதான் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், அறிமுகம் செய்யப்பட்ட 24 மணி நேரத்துக்குள் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த ‘ஆப்’பை டவுண்லோடு செய்திருக்கிறார்கள். அதேநேரம் இந்த ‘ஆப்’ மதுப்பிரியர்களை அநியாயத்துக்குத் தள்ளாடவும் வைத்துவிட்டது. சிலருக்கு, தங்களுக்கு அருகில் இருக்கும் கடைகளுக்குப் பதிலாக தொலைவில் இருக்கும் கடைகளில் மது வாங்க அனுமதி வந்திருப்பதாக வேதனை தெரிவிக்கிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய கொல்லத்தைச் சேர்ந்த மதுப்பிரியர் கோபி, “நீண்ட நாள்களுக்குப் பிறகு கடை திறப்பதால் ‘ஆப்’ மூலம் மதுவாங்க விண்ணப்பித்தேன். கொல்லத்தில் உள்ள கடைக்குப் பதில் எனக்கு திருவனந்தபுரம் மாவட்டத்திலுள்ள ஒரு கடையின் பெயர் வந்துவிட்டது. கரோனா காலமான இப்போது ஒரு மாவட்டத்தை விட்டு, அடுத்த மாவட்டம் செல்வதற்கு இ- பாஸ் வாங்க வேண்டியது கட்டாயம். அப்படியான சூழலில் மாவட்டம் விட்டு மாவட்டம் மதுவாங்கப்போவது சாத்தியமா?

இப்படி இந்தச் செயலியில் ஏகப்பட்ட சிக்கல்கள் இருக்கின்றன. ஓ.டி.பி எண் வருவதிலும் தாமதம் ஏற்படுகிறது. இந்தச் செயலியில், மது விநியோகிக்கும் நாள், நேரம், கடை என அத்தனை விவரங்களையும் முன்கூட்டியே சொல்கிறார்கள். தாமதமாகப் போனால்கூட மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு முறை விண்ணப்பித்து வாங்கினாலும், வாங்கத் தவறினாலும் மீண்டும் விண்ணப்பிக்க நான்கு நாள்கள் காத்திருக்க வேண்டும்” என அதிருப்திப் பட்டியலை வாசித்தவர், “இத்தனையும் தாண்டிக் குடிக்க வேண்டுமா என ஒருகட்டத்தில் வெறுப்பே வருகிறது” என்றார்.

மதுக் கடைகளில் பார் வசதி கிடையாது. மதுவை வாங்கிவிட்டுச் சென்றுவிட வேண்டும். தனிமனித இடைவெளி விட்டு நிற்க வேண்டும். ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் வரக் கூடாது எனப் பல வழிகாட்டி நெறிமுறைகளையும் வகுத்துள்ளது கேரள அரசு. ஸ்மார்ட்போன் இல்லாதவர்களுக்கு எஸ்.எம்.எஸ் வழியாகவும் இந்தச் சேவை கிடைக்க அரசு அடுத்தகட்ட முயற்சியில் இறங்கியுள்ளது.

அதேசமயம், “இது சோதனை முயற்சிதான். போகப் போக மதுப்பிரியர்களின் மனக்குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் செயலியில் மாற்றங்கள் செய்யப்படும்” எனவும் அரசுத் தரப்பில் விளக்கப்பட்டுள்ளது.

எது எப்படியோ கேரளத்தில், மதுக்கடை வாசலை மிதிக்கும் முன்னதாகவே மதுப்பிரியர்களைத் தள்ளாட வைத்துவிட்டது பெவ் க்யூ செயலி!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x