தொழிற்சாலைகள் இங்கே; தொழிலாளிகள் எங்கே?- வேலை செய்ய ஆளில்லாமல் திணறும் நிறுவனங்கள்

தொழிற்சாலைகள் இங்கே; தொழிலாளிகள் எங்கே?- வேலை செய்ய ஆளில்லாமல் திணறும் நிறுவனங்கள்
Updated on
2 min read

சென்னை கிண்டி, அம்பத்தூர் தொழிற்பேட்டை உள்பட தமிழ்நாட்டில் உள்ள 17 தொழிற்பேட்டைகளும் 25-ம் தேதி முதல் இயங்க அனுமதிப்பதாக கடந்த வாரம் தமிழக அரசு அறிவித்தது. அதன்படி தொழில் நிறுவனங்கள் செயல்பட ஆரம்பித்துவிட்டன.

மதுரை கப்பலூர் தொழிற்பேட்டையானது நகரை விட்டு வெகுதூரத்தில் இருப்பதால், கடந்த 5-ம் தேதி முதலே செயல்பட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துவிட்டது. ஆனால், தொழிலாளர்கள் போதிய அளவில் இல்லாததால் முழு அளவில் உற்பத்தியைத் தொடங்க முடியாமல் தவிக்கின்றன தொழில் நிறுவனங்கள்.

இதுபற்றி மதுரை மாவட்ட சிறு, குறு தொழில்கள் சங்க (மடீசியா) முன்னாள் தலைவர் மணிமாறனிடம் கேட்டபோது, "முழுத்திறனையும் உற்பத்தியில் ஈடுபடுத்தினால்தான், உற்பத்திச் செலவு கட்டுக்குள் வந்து அது லாபத்தில் எதிரொலிக்கும். குறைந்தபட்சம் 75 சதவீத தொழிலாளர்களாவது வேலை பார்த்தால்தான், நஷ்டமில்லாமல் நிறுவனத்தை நடத்த முடியும். ஆனால், நிறைய வடமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார்கள்.

உள்ளூர் மற்றும் அண்டை மாவட்டத் தொழிலாளர்கள் பேருந்து வசதி இல்லாததாலும், இ - பாஸ் பிரச்சினையாலும் வேலைக்கு வர முடியாத சூழல் இருக்கிறது. ஒருவேளை 5-ம் கட்டப் பொது முடக்கத்தை அறிவித்தால் அரசு இதனையும் பரிசீலித்து சில தளர்வுகளை அளித்தால்தான் தொடர்ந்து தொழிலை நடத்த முடியும். இல்லை என்றால், சிறு, குறு நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும்" என்றார்.

கப்பலூர் தொழில் அதிபர்கள் சங்கத் தலைவர் பி.என்.ரகுநாதராஜாவிடம் கேட்டபோது, "இந்த தொழிற்பேட்டையில் நூற்பாலை, ஆயத்த ஆடை நிறுவனம், பிளாஸ்டிக் நிறுவனங்கள் உள்பட சுமார் 450 தொழில் நிறுவனங்கள் இருக்கின்றன. மொத்தம் 20 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள். அதில் சுமார் 40 சதவீதம் பேர் வடமாநிலத் தொழிலாளர்கள். ஊரடங்கு காரணமாக நிறுவனங்கள் இயங்காததால், 45 நாட்களாக அவர்களைத் தங்க வைத்து உணவும் கொடுத்து பராமரித்து வந்தோம். மீண்டும் உற்பத்தியைத் தொடங்கிய நேரத்தில், இலவசமாக ஊருக்கு ரயில் விடுகிறார்கள் என்று பெரும்பாலான தொழிலாளர்கள் கிளம்பிவிட்டார்கள்.

இப்போது, ’அங்கே வேலையில்லை... ஊரடங்கு முடிந்ததும் நாங்கள் வருகிறோம்’ என்று போன் செய்கிறார்கள். அதுவரையில் நாங்கள் உற்பத்தியைச் சமாளிப்பதற்கு ஒரு வழிதான் இருக்கிறது. மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி போன்ற மாநிலங்களில் இருந்தும், திருப்பூர், கோவை போன்ற தொழில் நகரங்களில் இருந்தும் சொந்த ஊருக்குத் திரும்பிய தொழிலாளர்களுக்குப் பயிற்சி அளித்து அவர்களை எங்களது நிறுவனங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு அரசு உதவ வேண்டும்.

வடமாநில தொழிலாளர்களைப் போல குறைந்த ஊதியம், நிறைய வேலை நேரத்துக்கு நம்மவர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால், உள்ளூரிலேயே வேலை என்பதால் கொஞ்சம் வசதியாக உணர்வார்கள் என்பதால் இந்த யோசனையைச் சொல்கிறோம்" என்றார்.

இது வெறுமனே கப்பலூர் பிரச்சினை மட்டுமல்ல, தமிழ்நாடு முழுக்கத் தொழில் நிறுவனங்கள் ஒரு பக்கமும், தொழிலாளர்கள் இன்னொரு பக்கமும் இருக்கிறார்கள். அவர்களை மனதில் கொண்டு ஐந்தாம் கட்டப் பொது முடக்கத்தை அறிவிக்கும் பட்சத்தில் புதிய தளர்வுகளை முதல்வர் அறிக்க வேண்டும் என்று தொழில் துறையினர் எதிர்பார்க்கிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in