Last Updated : 28 May, 2020 12:49 PM

 

Published : 28 May 2020 12:49 PM
Last Updated : 28 May 2020 12:49 PM

மாதவிடாய் சுகாதார தினம்: கறைகளை மறைக்க வேண்டாம்; உரையாடலைத் தொடங்குவோம்!

பண்பாட்டு ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் தினம்தினம் மாற்றங்களை நோக்கி மனித சமூகம் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இன்னமும் பள்ளிகளிலும், அலுவலகங்களிலும் பொது இடங்களிலும் அந்த நாட்களை தயக்கத்துடனே கடக்கும் பெண்களின் மனநிலையில் மாற்றம் வரவில்லை.

மாதவிடாய்...! இன்னமும் நமது சமூகத்தில் வெளிப்படையான உரையாடலை ஏற்படுத்தவில்லை. இன்னும் பல வீடுகளில் ஒவ்வொரு மாதமும் பெண்களுக்குள்ளே பகிரப்படும் ரகசியங்களாக அவை பார்க்கப்படுகின்றன.

சமூக வலைதளங்கள் பெரும் வளர்ச்சியையும், தாக்கத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்திலும் மாதவிடாய் குறித்தும், அது சார்ந்த விழிப்புணர்வு குறித்தும் பொதுத் தளங்களில் விவாதிக்கும் நபர்களின் எண்ணிக்கை மிகச் சொற்பம்தான். மாதவிடாய் குறித்த சந்தேகங்களும், அதில் பெண்கள் அனுபவிக்கும் உடல் சார்ந்த பிரச்சினைகளையும் பற்றி விவாதங்கள் எழும்போதெல்லாம் வெட்கப்பட்டு விலகி நின்று வேடிக்கை பார்க்கும் கூட்டம்தான் இன்றளவும் பெரும்பான்மையாக உள்ளது.

உண்மையில் மாதவிடாய் குறித்துப் பேசுவது, இன்றளவும் விரும்பத்தகாத தலைப்பாகவே அணுகப்படுகிறது. இந்த நிலையில் மே 28 ஆம் தேதி உலக மாதவிடாய் சுகாதார நாளான இன்று அதையே இங்கு பேச இருக்கிறோம்.

மாதவிடாய் குறித்தும், அது சார்ந்த விழிப்புணர்வின் தேவை குறித்தும் 'இந்து தமிழ்' இணையதளம் சார்பாக, குழந்தைப் பிறப்பு மற்றும் பாலூட்டுதல் பயிற்சியாளர், மகப்பேறு ஆலோசகர் டீனா அபிஷேக்கிடம் பேசினேன்.

“தற்போதுள்ள காலங்களில் 9, 10 வயதிலேயே சிறுமிகள் பருவமடைந்து விடுகின்றனர். இவ்வாறு இருக்கையில் முன்னரே பெண் குழந்தைகளுக்கு பருவம் அடைதல் என்றால் என்ன, மாதவிடாய் என்றால் என்ன என்பது பற்றிய புரிதலை பெற்றோர்கள் நிச்சயம் ஏற்படுத்த வேண்டும். வருங்காலத்தில் தாய்மை அடைவதற்கான படிநிலையில் நம் உடலில் ஏற்படும் பரிமாண மாற்றங்கள்தான் இவை என்பதைக் குழந்தைகளுக்கு நாம் புரியவைக்க வேண்டும்.

ஆனால், இவற்றை பெற்றோர்கள் தவறும்பட்சதில் குழந்தைகள் மன அழுத்தத்துக்கு உள்ளாகலாம். இதனை நாம்தான் தவிர்க்க வேண்டும். மேலும் தொடர்ந்து மாதவிடாய் என்பது நம் சமூகத்தில் வழக்கமான உரையாடலாக இல்லாமல் இருந்து வருகின்றது. பெண் குழந்தைகளிடமே இதுபற்றிப் பேசத் தயங்கும்போது, ஆண் குழந்தைகளிடம் மாதவிடாய் குறித்து எவ்வாறு பேசப் போகிறோம்.

ஆண் குழந்தைகளிடமும் இது பற்றிய உரையாடலை பெற்றோர்கள் ஏற்படுத்த வேண்டும். நாம் நட்பான முறையில் இத்தகைய உரையாடல்களை ஏற்படுத்த தவறிவிட்டால் குழந்தைகளே தங்களது நண்பர்களிடமிருந்து இதுகுறித்த தவறான தகவலைப் பெற்று குழப்ப நிலைக்கு உள்ளாகிவிடுகின்றனர்.

பெற்றோர்கள் சிறுவயதிலிருந்தே குழந்தைகளிடம் மாதவிடாய் குறித்த உரையாடலில் ஈடுபடத் தயங்கக் கூடாது.

மகப்பேறு ஆலோசகர் சீனா அபிஷேக்
மகப்பேறு ஆலோசகர் டீனா அபிஷேக்

மாதவிடாய் சார்ந்து பெண்கள் அதிகம் எதிர்கொள்ளும் பிரச்சினை என்னவென்றால், பெரும்பாலான இளம் பெண்களுக்கு மாதவிடாய் சீராக வருவதில்லை. ஆனால் அதனைப் பெண்கள் கவனமாக எடுத்துக்கொள்ளாமல் அலட்சியமாக இருந்து விடுகின்றனர்.

இது தொடர்பாக மருத்துவர்களையும் அவர்கள் அணுகுவதில்லை. உடற்பயிற்சி செய்வது, உணவு முறையில் மாற்றம் செய்வது என எதையும் அவர்கள் பின்பற்றறுவது இல்லை. இதில் பெரிய தவறு என்றால் இதுகுறித்து அவர்கள் வெளியே கூறவும் பயப்படுகிறார்கள்.

திருமணம் முடிந்து குழந்தை பெறும் நிலை வரும்போதுதான் இந்தப் பிரச்சனையின் தீவிரம் அவர்களுக்குப் புரிய ஆரம்பிக்கிறது. பிள்ளை பெறுதல் இல்லை என்றால் பெரும்பாலான பெண்கள் மாதவிடாய் வராதது குறித்து எந்தக் கவலையும் அடைய மாட்டார்கள் என்றே கூறலாம். ஆனால் இதனை இப்படியே விட்டுவிட்டால் நோய்த்தொற்றுக்கு வழிவகுக்கும் என்பதை உணர வேண்டும். நாம் நவீன காலத்துக்கு வந்துவிட்டோம். நமது உடை, செல்போன், பழக்க வழக்கங்களில் முன்னேறிவிட்டோம். ஆனால், மாதவிடாய் சார்ந்த வெளிப்படைத் தன்மைக்கு நாம் இன்றும் தயாராகவில்லை. எனவே மாதவிடாய் குறித்து வெளிப்படையாகப் பேச வேண்டும்.

விளம்பரங்களை நம்பாதீர்கள்

பெண்களின் பிறப்புறுப்புகளைச் சுத்தம் செய்வதற்கு விளம்பரங்கள் காட்டும் வேதியியல் பொருட்களைப் பயன்படுத்தாதீர்கள். மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றே இம்மாதிரியான பொருட்களைப் பயன்படுத்த வேண்டும். என்னைக் கேட்டால் பெண்களின் பிறப்புறுப்புகளில் இயற்கையான கிருமிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள அமில திரவம் சுரக்கிறது. அதுவே தடுப்பு அரணாக இருக்கும். அந்த அமில திரவம் எந்த நுண்கிருமியையும் அங்கு தங்கவிடாது. தற்போது உள்ள யூடியூப் கலாச்சாரத்தில் அங்கு என்ன கூறுகிறார்களோ அதனையே பின்பற்றும் பழக்கம் இருக்கிறது. அதனைப் பெண்கள் தவிர்க்க வேண்டும்.

அடுத்தது மிக முக்கியமானது சுகாதாரம். மாதவிடாய்க் காலங்களில் மட்டுமல்லாது பெண்கள் தங்கள் பிறப்புறுப்புகளைச் சுத்தம் செய்வதை பழக்கமாகக் கொள்ள வேண்டும். சுத்தப்படுத்துவதற்கு சோப்புகளை உபயோகிக்கக் கூடாது. தண்ணீரே போதுமானது. அடுத்து மாதவிடாயின்போது பயன்படுத்தப்படும் பேட்களை விளம்பரங்களில் காட்டுவது போல் 12 மணி நேரம் பயன்படுத்தக் கூடாது. பயன்படுத்தவும் முடியாது.

ஏனெனில் 12 மணி நேரத்திற்கு நீங்கள் பேட்களைப் பயன்படுத்தும்போது அதில் உள்ள வேதியியல் பொருட்களும், மாதவிடாயின்போது வெளியேறும் ரத்தமும் இணைந்து நோய்த்தொற்றை ஏற்படுத்தலாம்.


5 மணி நேரத்திற்கு ஒரு பேடைப் பயன்படுத்த வேண்டும். அதிகபட்சமாக 6 மணி நேரத்துக்குப் பயன்படுத்தலாம். அதன் பிறகு பேடை மாற்ற வேண்டும். அதுவும் இதில் காட்டன் பேட்களைப் பயன்படுத்துவது நல்லது.

வெட் - டிஷ்யூ பேப்பர்களால் சுத்தம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும் இளம்பருவப் பெண்களுக்கு பெண்ணுறுப்பு பகுதியின் மேற்பகுதியில் டிரிம் செய்வதன் அவசியத்தை பெற்றோர்கள் சொல்லித் தர வேண்டும். அப்பகுதிகளில் வேக்சின் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

அடுத்து துணிக்கு வருவோம். மாதவிடாய்க் காலங்களில் ஒருவேளை நீங்கள் துணி பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்றால் தூய்மையான துணிகளைப் பயன்படுத்த வேண்டும். அவ்வாறு பயன்படுத்திய துணிகளைத் தூய்மை செய்த பிறகு வெயிலில் காயவைத்த பிறகு மீண்டும் பயன்படுத்த வேண்டும்.

இரும்புச் சத்து உணவுகளைச் சேர்க்க வேண்டும்

இளம் பருவத்தில் உள்ள பெண்கள் அன்றாட வாழ்வில் இரும்புச் சத்து தொடர்பான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். கம்பு, ராகி போன்ற தானிய வகைகளில் இரும்புச் சத்து நிறைய உள்ளது. ஆனால் இவை எல்லாம் சூட்டைத் தருபவை என்று நாம் தவிர்த்து விடுகிறோம். உண்மையில் இம்மாதிரியான பாரம்பரிய உணவுகளை நாம் தவிர்க்கக் கூடாது. நிறைய தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். முருங்கைக் கீரையை வாரத்துக்கு இரண்டு முறை எடுத்துக்கொள்ள வேண்டும். அத்திப் பழம், பேரீச்சம் பழங்களை வழக்கமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். பழைய நாட்களில் இரும்புக் கடாய்களில் சமைத்ததைப் போல மீண்டும் பழக்கப்படுத்திக் கொள்ளலாம்.

ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் உணவில் வைட்டமின் சி சேர்த்துக்கொள்ள வேண்டும். துரித உணவுகளை தவிர்க்க வேண்டும். உளுந்து, வேர்க்கடலை ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். இவற்றின் மூலம் கால்சியம் குறைபாடு தீரும்.

சில பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் அதிக ரத்தப்போக்கு இருக்கும். அவர்கள் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. இம்மாதிரியான உணவுப் பழக்கங்களை பெண் குழந்தைகளுக்குப் பழக்கப்படுத்தினால்தான் எதிர்காலத்தில் எந்தவிதப் பிரச்சனையும் இல்லாமல் பிரசவம் ஏற்படும்.

50 வயதுக்கு அதிகமான பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும்போதும் அது படிப்படியாகத்தான் நிற்கும். சில நேரங்களில் அவர்களுக்கு அதிக ரத்தப் போக்கு இருக்கும். அவர்கள் சத்து மிக்க உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் மாதவிடாய் நிற்பது தொடர்பாக மருத்துவரை அணுகுவது நல்லது.

பேடைவிட கப்களைப் பயன்படுத்தலாம்

என்னைப் பொறுத்தவரை பேட்களை விட கப்களைப் பயன்படுத்துவதுதான் சிறந்தது என்று கூறுவேன். மாதவிடாய் கப்களைப் பொறுத்தவரை அவை நமது உடலுக்கு எளிமையாகப் பொருத்தும் வடிவமைப்பிலேயே அமைந்துள்ளன. மாதவிடாய் கப்களைப் பயன்படுத்துவது முதல் இரண்டு மூன்று மாதங்களுக்கு கஷ்டமாக இருக்கலாம். பின்னர் இவை பயன்படுத்துவதற்கு எளிமையாக இருக்கும். நிறையப் பேருக்கு மாதவிடாய் கப்கள் கருப்பைக்குள் வைக்கப்படுகிறதா என்ற சந்தேகம் உள்ளது. உண்மையில் கருப்பை உள்ளே அமைந்துள்ளது.

கருப்பை வாயின் முனைப்பகுதி மூடியுள்ளது. இதன் காரணமாக கப் அங்கு செல்லாது. வெஜினல் கேனல் பகுதியில்தான் நாம் மாதவிடாய் கப்பை வைக்கப்போகிறோம். இது நிச்சயம் கருப்பை பகுதிக்குச் செல்லாது. மேலும் கப் வைத்துப் பயன்படுத்தும்போது அமர்ந்தால் மாதவிடாயிலிருந்து வெளியேறிய ரத்தம் மீண்டும் உள்ளே சென்றுவிடுமோ என்று சிலர் பயப்படுகிறார்கள். நிச்சயம் அவ்வாறு எல்லாம் ரத்தம் சென்றுவிடாது. மாதவிடாய் கப்களை மருத்துவ நிபுணர்கள் உட்படநிறையப் பேர் பயன்படுத்துகிறார்கள். இதுகுறித்து பயம் கொள்ள வேண்டாம்.

மாதவிடாய் கப்பையும் ஐந்து மணி நேரத்திற்குப் பிறகு சுத்தம் செய்த பின்னர்தான் மீண்டும் பயன்படுத்த வேண்டும். வீட்டில் இருந்தீர்கள் என்றால் சுடுதண்ணீரைப் பயன்படுத்தி கப்பைச் சுத்தம் செய்யலாம். சாதாரண நீரிலும் கப்பைச் சுத்தம் செய்யலாம். அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் தண்ணீர் அசுத்தமாக இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மாதவிடாய்க்குப் பயன்படுத்தும் கப்களில் குழந்தைப் பிறப்புக்கு முன், குழந்தைப் பிறப்புக்குப் பின் என்ற இருவகைகள் உள்ளன. அதைக் கவனித்து வாங்க வேண்டும். இது தொடர்பாக சந்தேகம் இருந்தால் மருத்துவர்களை அணுகலாம்.

இறுதியாக நான் கூறுவது ஒன்றுதான், மாதவிடாயின்போது வெளியேறும் ரத்தம் அசுத்தமானதோ, தீட்டோ கிடையாது. நல்ல ஆரோக்கியமான ரத்தம்தான் வெளியேறுகிறது. இதுகுறித்து வெட்கப்படவோ, பேசவோ எந்தத் தயக்கமும் கொள்ள வேண்டாம். மாதவிடாய் குறித்த உரையாடல்கள் பரவலாக வேண்டும். அதை நாம்தான் ஏற்படுத்த வேண்டும் என்று நாம் உணர வேண்டும்” என்று டீனா அபிஷேக் தெரிவித்தார்.

2015-2016 ஆம் ஆண்டு தேசிய சுகாதார அமைப்பு வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி, இந்தியாவில் உள்ள பெண்களில் மாதவிடாய் காலங்களில் 58% பெண்கள் மட்டுமே சானிட்டரி நாப்கின்களை உபயோகிக்கிறார்கள். இதில் கிராமங்களில் 48.5%, நகரங்களில் 77.5% பெண்களும் நாப்கின்களைப் பயன்படுத்துகிறார்கள். மீதமுள்ள சதவீதத்தினருக்கு சானிட்டரி நாப்கின் என்பதே அவர்களது பொருளாதாரத்திற்கு விலை உயர்ந்த பொருளாகவே பார்க்கப்படுகிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்து இல்லை.

இதன் காரணமாகவும், பள்ளிகளில் போதிய கழிப்பறை வசதி இல்லாத காரணத்தினாலும் இளம் சிறுமிகள் தங்களது பள்ளிப்படிப்பை பாதியிலேயே கைவிடும் சூழலும் இந்திய சமூகத்தில் தொடர்ந்து கொண்டேதான் வருகிறது. இந்த நிலையில் நிச்சயம் மாற்றம் தேவை.

மாதவிடாய் சார்ந்த விழிப்புணர்வும், அதுகுறித்த சுகாதாரம் சார்ந்த உரையாடல்களையும் கண்டு விலகிச் செல்லாமல் நிச்சயம் கவனம் குவிக்கப்பட வேண்டும். வீடுகளில் மாதவிடாய் தொடர்பான ஆரோக்கியமான உரையாடல்கள் எந்தவிதக் கட்டாயமுமின்றி தன்னியல்பாக ஏற்பட வேண்டும். மாதவிடாய் குற்றம் இல்லை.

மாதவிடாய் கறைகளை மறைக்க வேண்டாம்.. உரையாடலைத் தொடங்குவோம்..!

தொடர்புக்கு: indumathy.g@thehindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x