Published : 27 May 2020 04:10 PM
Last Updated : 27 May 2020 04:10 PM

கரோனாவால் கையில் இருந்த பணம் காலி; வாங்க மக்கள் வராததால் காய்கறிகள் விலை வீழ்ச்சி- விற்காமல் அழுகுவதால் கடனுக்கு விற்கும் வியாபாரிகள் 

பணப்புழக்கம் இல்லாததால் மக்கள் காய்கறிகள் வாங்க வராததால் மதுரையில் மொத்த காய்கறிக் கடைகள் முதல் சில்லறைக் கடைகள் வரை வெறிச்சோடி காணப்படுகின்றன.

ஹோட்டல்கள், திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளும் நடக்காததால் வாங்க ஆளில்லாமல் காய்கறிகள் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.

காய்கறி விற்பனையில் தென் தமிழகத்தில் மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட் முக்கியமானது. தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து ஒரு நாளைக்கு 100 லாரிகள், 25 வேன்களில் இங்கு காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன.

‘கரோனா’ ஊரடங்கால் மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட், தற்காலிகமாக மாட்டுத்தாவணி பஸ்நிலையம் மற்றும் அம்மா திடலில் செயல்படுகின்றன. காய்கறிகள் வழக்கம்போல் விற்பனைக்கு வந்தாலும் அதை வாங்க சிறு, குறு வியாபாரிகளும், மக்களும் முன்போல் வரவில்லை.

ஊரடங்கு தொடங்கியபிறகு முதல் 2 மாதம் வரை காய்கறிகள் கடும் கிராக்கியுடனே விற்றன. ஒவ்வொரு காய்கறியும் கிலோ ரூ.50 முதல் ரூ.100 வரை விற்பனையாகின.

அதனால், ஆரம்பத்தில் விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் இந்த ‘கரோனா’ ஊரடங்கு பெரும் லாபத்தை அள்ளிக் கொடுத்தது. தற்போது ‘கரோனா’ ஊரடங்கால் வேலையிழப்பு, வருமானம் குறைவு உள்ளிட்டவற்றால் மக்களிடையே பணப்புழக்கம் குறைந்துவிட்டது. அதனால், மளிகைக் கடைகள், வணிக நிறுவனங்கள், காய்கறிக் கடைகள் காலை முதல் இரவு வரை திறந்துவைத்திருந்தாலும் கூட்டம் இல்லை.

மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் சில்லறை வியாபாரிகள், பொதுமக்கள் வராமல் காய்கறிகள் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

ஒரு கிலோ வெண்டைக்காய் வெறும் 7 ரூபாய்க்கும், தக்காளி 10 ரூபாய்க்கும், கத்தரிக்காய் 12 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 10 ரூபாய்க்கும் விற்கிறது. அதுபோல் சின்ன வெங்காயம் 30 ரூபாய், முட்டைகோஸ் 15 ரூபாய், உருளைகிழங்கு 20 ரூபாய், கேரட் 20 ரூபாய், பச்சை மிளகாய் 18 ரூபாய், கருவேப்பிலை 25 ரூபாய், புதினா 20 ரூபாய்க்கும் விற்கிறது. பிட்ரூட் 12 ரூபாய், சவ்சவ் 10 ரூபாய், சேனை கிழங்கு 30 ரூபாய், முருங்கைக்காய் 20 ரூபாய், மாங்காய் 15 ரூபாய், புடலைங்காய் 12 ரூபாய், பாகற்காய் 25 ரூபாய்க்கும் விற்கிறது.

காய்கறிகள் விலை குறைந்தும் மக்கள் வாங்க வராமல் அவை விற்பனையாகாமல் கடைகளில் அழுகுகின்றன.

இதுகுறித்து மாட்டுத்தாவணி மொத்த காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் முருகன் கூறியதாவது:

காய்கறிகள் விலை குறைவிற்கு ஹோட்டல்களில் வியாபாரம் இல்லாதது முக்கியக் காரணம். திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடக்கவில்லை. ஹோட்டல் வியாபாரம் முன்போல் இல்லாததால் காய்றிகள் விலை குறைந்துள்ளது.

காய்கறிகள் விலை குறைந்ததால் எங்களுக்கும் கமிஷன் கிடைக்கவில்லை. காய்கறிகள் அழுகாமல் இருக்க சில்லறை வியாபாரிகளுக்கு கடனுக்கு தூக்கி விடுகிறோம்.

எங்களை விட விவசாயிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். லாபத்திற்கு விற்காவிட்டாலும் பறிப்பு கூலி, போக்குவரத்துச் செலவுக்குக் கூட அவர்களுக்கு கட்டுப்பாடியான விலை கிடைக்கவில்லை. கடைசியில் ஏமாற்றத்துடனே திரும்பிச் செல்கின்றனர்.

நோய் குணமடைகிறதோ இல்லையோ ஒரு நோயாளி எந்த நம்பிக்கையில் மருத்துவமனையில் சிகிச்சைப்பெறுகிறாரோ அதுபோல் ஒவ்வொரு நாளும் இன்றாவது விலை கிடைக்குமா? என்ற நப்பாசையில் அவர்கள் காய்கறிகளை பறித்துக் கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x