Published : 27 May 2020 11:37 AM
Last Updated : 27 May 2020 11:37 AM

சென்னையில் கரோனா; கொழிஞ்சாம்பாறைக்கு ஊரடங்கு: துணை சபாநாயகர் பேச்சு நடத்தியும் அகலாத துயரம்

சென்னைக்குத் தேள் கொட்டினால் கொழிஞ்சாம்பாறைக்கு நெறி கட்டலாமா? அப்படித்தான் இருக்கிறது கரோனாவுக்காகக் காவல் துறையினர் செய்கிற கெடுபிடிகள் என்று பொங்குகிறார்கள் கோவை - பாலக்காடு எல்லைகளில் இருக்கும் தமிழர்கள்.

கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி நடுப்புணி, கோவிந்தாபுரம், மீனாட்சிபுரம், வேலந்தாவளம், ஆனைகட்டி, வாளையாறு பகுதிகள் கேரள எல்லைகளாக விளங்குகின்றன. இவற்றில் நடுப்புணி, கோவிந்தாபுரம், மீனாட்சிபுரம், வேலந்தாவளம் எல்லைகளுக்கெல்லாம் நடுநாயகமாக விளங்குவது கேரளத்தின் கொழிஞ்சாம்பாறை நகரம். பாலக்காடு மாவட்டம், சித்தூர் தாலுகாவில் வரும் இப்பகுதியில் வசிப்பவர்களில் 80 சதவீதம் தமிழர்கள்தான்.

இவர்கள் வேலை, வியாபாரம், விவசாயம், பள்ளி, கல்லூரி எனப் பல்வேறு விஷயங்களுக்காகக் கோவை மாவட்ட எல்லைக்குள் வந்து செல்ல வேண்டிய நிலை பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. பால் பொருட்கள், காய்கனிகள், கறிக்கோழிகள், உரம் மற்றும் விவசாய இடுபொருட்கள் போன்ற தேவைகளுக்கு தினம்தோறும் அங்கிருந்து இங்கும், இங்கிருந்து அங்கும் சென்று வருவார்கள்.

கரோனா பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்ட பின்னர் இவர்கள் பாடு திண்டாட்டமாகிவிட்டது. காய்கனிகள், பழங்கள், பால், வேளாண் விஷயங்களுக்காவது விதிவிலக்கு கொடுங்கள் என இப்பகுதி பிரமுகர்கள் பாலக்காடு ஆட்சியர் முதல் கேரள அமைச்சர் வரை கோரிக்கை வைத்தும் பலன் ஏதும் இல்லை. சமீபத்தில், கேரள நீர்ப்பாசன அமைச்சரான கிருஷ்ணன் குட்டியிடம் பொள்ளாச்சி தொகுதி எம்எல்ஏவும், தமிழக சட்டப்பேரவைத் துணைத் தலைவருமான பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்துக் கேரள முதல்வரிடமும் அதிகாரிகளிடமும் பேசி சுமுக முடிவு எடுக்கப்படும் என்றும் வாக்குறுதி தந்திருந்தார் கேரள அமைச்சர்.

இதற்கிடையே, நடுப்புணி, வேலந்தாவளம், மீனாட்சிபுரம், கோவிந்தாபுரம் பகுதிகளில் எப்போதும் நடக்கும் காய்கனிச் சந்தைக்குப் பதில், கூடைகளில் காய்கனிகளை வைத்து விற்க வியாபாரிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதனால் இந்தப் பொருட்களை ஓரளவு எளிதாகப் பெற்று வந்தனர். ஆனால், கடந்த மூன்று நாட்களாக இந்தக் காய்கனி விற்பனைக்கும் சிக்கல் உருவாகியிருக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு சென்னையிலிருந்து வாளையாறு வழியே வந்த மூன்று பேருக்குக் கரோனா தொற்று உறுதியானது. கேரளத்தைச் சேர்ந்த அவர்கள் பாலக்காடு கரோனா மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதன் காரணமாகக் காய்கனி கூடைகளில் வைத்து விற்பவர்களையும் போலீஸார் விரட்டியடிக்கிறார்களாம். இதனால் காய்கனிகள் கிடைக்காமல் திண்டாடி வருகிறார்கள் கொழிஞ்சாம்பாறை மக்கள்.

இதைக் கண்டித்து கொழிஞ்சாம்பாறையில் உள்ள பல்வேறு இயக்கங்கள் அறிக்கைகள் விட்டுள்ளன. இங்குள்ள கேரளத் தமிழ் பாதுகாப்பு இயக்கம் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருக்கிறது. அந்த அமைப்பின் தலைவர் பேச்சுமுத்துவிடம் பேசினோம்.

“கரோனாவைக் காரணம் காட்டி சித்தூர் தாலுகா ஜனங்களோட வாழ்வாதாரத்தை நசுக்கிறது எந்த வகையில நியாயம்? மத்திய அரசு ஊரடங்கு அறிவிக்குது. மாநில அரசு தளர்வுகளை அறிவிக்குது. இப்படியான சூழல்ல, எது ஊரடங்கு, எது தளர்வுன்னு சாதாரண ஜனங்க அறிஞ்சுக்கவே முடியாதபடிக்கு நினைச்சதுக்கு எல்லாம் மக்களை இம்சை பண்றாங்க போலீஸ்காரங்க. கோவை, திருப்பூர், தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு அன்றாடம் சென்று திரும்பி வர வேண்டியிருக்கு. அதற்கு ஏற்றபடி எல்லை வாழ் மக்களுக்கு பாஸ் வழங்கணும்.

அதேபோல் பாலக்காடு வடகரப்பதி, எருத்தேன் பதி, கொழிஞ்சாம்பாறை, பெருமாட்டி, புதுச்சேரி ஊராட்சி முதலமடை, அட்டப்பாடி மக்களுக்கும், குமுளி வண்டிப் பெரியார், மறையூர், திருவனந்தபுரம் மக்களுக்கும் கேரள - தமிழக ஆட்சியர்கள் அனுமதிச் சீட்டு வழங்க வேண்டும். பொதுமுடக்கம் பாலக்காடுக்குப் பொருந்தும். அதற்காகக் கிழக்குப் பகுதி காய்கனி ஏல மார்க்கெட் திறக்கப்படாமல் கிடப்பதில் என்ன நியாயம்? இதனால் ஆயிரக்கணக்கான சிறு விவசாயிகளுக்குப் பெருநட்டம் ஏற்படும். இரு மாநில அரசுகள் இதைக் கவனிக்க வேண்டும்” என்றார் பேச்சிமுத்து.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x