

மனிதனுடன் பிறந்த தேடல் உணர்ச்சியே பயணத்தின் அடிப்படை. வெறுமனே இடங்களைப் பார்ப்பது, அறிவது மட்டும் பயணத்தின் நோக்கமல்ல; நாம் சென்ற புதிய இடத்தில் வாழும் மனிதர்களை அறிவது அவர்களது வாழ்வைப் புரிந்துகொள்வதுதான் பயணத்தின் உண்மையான பலனாக இருக்க முடியும். நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரிடமும் ஏதோ ஒரு கதை இருக்கும் என்பார்கள். அப்படி ஒரு கதையைத்தான் வைத்திருந்தார் தனுஷ்கோடியில் சந்தித்த குமார்.
ஒரு புயல் நாளில் தனுஷ்கோடிக்குப் பயணம் செல்ல நேரிட்டது. அன்று இரவு புயல் கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ரயில் பாம்பன் பாலத்தின் மீது செல்லும்போதே கடல் அலைகளின் ஆக்ரோஷத்தையும் அபாயகரமான வேகத்தில் வீசும் சூறாவளிக் காற்றையும் உணர முடிந்தது.
பேருந்துகளின் ஓட்டம் அன்று குறைவாகவே இருந்தது. கிடைத்த பேருந்தில் ஏறி தனுஷ்கோடியை அடைந்தபோது, இன்னும் 5 கிலோ மீட்டர் கடற்கரை மணலில் வேனில் செல்ல வேண்டும் என்பது தெரியவந்தது. கடல் சீற்றம் காரணமாக அன்று வேன்கள் இயக்கப்படவில்லை. மாற்றுவழிகளுக்கு விடாமல் முயன்றுகொண்டிருந்த வேளையில், எதிர்பட்டார் குமார். 30 வயது மதிக்கத்தக்க வகையிலிருந்த அவர் ஒரு மீனவர் மட்டுமல்ல; சுற்றுலா வழிகாட்டியும்கூட. அவர் தனுஷ்கோடியின் கோர வரலாற்றை விவரித்தார்.
1964 டிசம்பர் 22 அன்று இரவு 11.35 மணிக்குத் தனுஷ்கோடியில் சுழன்றடித்த சூறாவளியைப் பற்றிப் பகிர்ந்துகொண்டார். ராட்சச அலைகள் தனுஷ்கோடியை விழுங்கிவிடும் ஆவேசத்துடன் புரண்டு புரண்டு வந்தன என்பதைச் சொன்னார். காளி என்ற ஒரு மனிதரைத் தவிர எஞ்சிய அனைவரும் கடல் நீரில் இழுத்துச் செல்லப்பட்டனர். அவர்களது வீடுகளும் உடைமைகளும் கடல் நீரில் மூழ்கிப் போயின. அந்தக் கடும் புயலிலும் காளி மட்டும் எப்படியோ நீந்தியே ராமேஸ்வரத்தை அடைந்தார். அதன் காரணமாகப் பின்னர் அவர் ‘நீச்சல் காளி’ என்று அந்த மக்களால் அழைக்கப்படுகிறார்.
அந்தக் காளி வேறு யாருமல்ல, குமாரின் தந்தை. அதனால்தான் தந்தையிடம் பலமுறை கேட்ட சம்பவத்தை நேரில் பார்த்ததுபோல் குமாரால் விவரிக்க முடிகிறது. வேன்கள் ஓடவில்லையென்றாலும், புதிதாகப் போடப்பட்டுக்கொண்டிருந்த தார்ச் சாலை வழியாக, ஒரு ஜேசிபி வண்டியில் தனுஷ்கோடிக்கு அழைத்துச் சென்றார். அந்தத் தார்ச் சாலையில், ஒரு புறம் வங்காள விரிகுடாவும் மறுபுறம் இந்து மகா சமுத்திரமும் சீறிக்கொண்டிருந்தன. எதிர்பாராத வகையில் கிடைத்த அந்த ஜேசிபி பயணத்தை எளிதில் மறக்க முடியாது.
சில குடிசைகளையும் உப்புக் காற்றில் உதிர்ந்துகொண்டிருக்கும் சிதிலமடைந்துபோன சில கட்டிடங்களையும் தவிர அங்கு வேறு எதுவும் இல்லை. 60 வருடங்களுக்கு முன்னர் இது நகரமாகவும் ராமேஸ்வரம் கிராமமாகவும் இருந்தது என்பதை நம்புவதற்குச் சிரமமாகத்தான் இருந்தது. அங்கிருக்கும் இடிந்துபோன தேவாலயம், அந்தச் சூறாவளிச் சம்பவத்துக்கான மவுனச் சான்றாக நிற்கிறது. அந்தக் கொடிய இரவில் அவர்கள் சிந்திய கண்ணீரும் நாதியற்றுப் போன சூழலில் அந்தத் துர்பாக்கிய ஜீவன்களின் அழுகுரலும் நம் மனத்தை நிறைக்கின்றன. இயற்கைக்கு முன்னர் நாம் எவ்வளவு சிறியவர்கள்.
50 வருடங்களுக்கு முன், அரசாங்கம் தனுஷ்கோடியை வாழத் தகுதியற்ற இடம் என்று அறிவித்து, மனிதர்கள் அங்கு வாழ்வதைத் தடைசெய்துவிட்டது. ஆனால், தற்போது இறந்துவிட்ட நீச்சல் காளி அரசாங்கத்திடம் போராடி, தன் குடும்பம் வாழ்வதற்கு அனுமதி வாங்கி இருக்கிறார். ஏன் நீங்கள் இன்னும் இங்கு வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள் என்று குமாரிடம் கேட்டபோது, ''இது நான் பிறந்த மண். வங்காள விரிகுடா என் தந்தை. இந்து மகாசமுத்திரம் என் அன்னை. எனக்கு அவர்கள் தீங்கிழைக்க மாட்டார்கள்'' என்று நம்பிக்கையுடன் சொல்கிறார். நம்பிக்கை தானே வாழ்க்கை!
படங்கள்: முகமது ஹுசைன்
தொடர்புக்கு: mohamed.hushain@hindutamil.co.in