Last Updated : 26 May, 2020 06:19 PM

 

Published : 26 May 2020 06:19 PM
Last Updated : 26 May 2020 06:19 PM

’’கால்ஷீட் தரமுடியாத அளவுக்கு பிஸி நடிகையான்னு பாரதிராஜா செம திட்டு;   நான் நடிக்க வேண்டிய‘அலைகள் ஓய்வதில்லை’ சில்க் கேரக்டர்!’’ - மனம் திறந்த வடிவுக்கரசி பிரத்யேகப் பேட்டி 


பெய்யத் தொடங்கும் வரைதான் அதன் பெயர் தூறல். பிறகு அது மழை என்றாகிவிடும் என்பார்களே. நடிகை வடிவுக்கரசியும் அப்படித்தான். ஒரு கேள்வி கேட்டுவிட்டு கையைக் கட்டிக்கொண்டு அவர்களைப் பார்த்துக்கொண்டிருக்கலாம். அந்தக் கேள்விக்குத் தக்க பதில்களையெல்லாம் தன் நினைவு அலமாரியில் இருந்து எடுத்து வந்து முழுதாக விவரித்துவிடும் மிகச்சிறந்த ‘கதைசொல்லி’ அவர்.


‘ஒரு ஒருமணி நேரத்துல முடிஞ்சிரும்தானே. மத்தியானத்துக்கு மேல வீட்டுக்குப் போகணும். நைட் ஊருக்குப் போறதுக்கு ஏற்பாடு பண்ணனும்’ என்றவர், கிட்டத்தட்ட இரண்டே முக்கால் மணி நேரங்கள் பேட்டி கொடுத்தார். ‘அம்மா... டைம் ஆயிருச்சே...’ என்று அரைமனதுடன் சொன்னபோது, ‘பரவாயில்ல, போகட்டும். ஒரு ஃப்ளோல நல்லாவே ஞாபகம் வந்து சொல்லிட்டிருக்கேன், போகட்டும்’ என்று வெள்ளந்தியாய்ச் சிரித்துக் கொண்டே சொன்னார் வடிவுக்கரசி.


‘இந்து தமிழ் திசை’யின் ‘Rewind With Ramji' நிகழ்ச்சிக்காக, வடிவுக்கரசி அளித்த நீண்டதான முழுமையான வீடியோ பேட்டியின் எழுத்தாக்கம் இது.


‘’எல்லாருக்கும் இருக்கிற ஆசைதான் எனக்கும். நடிகர்திலகம் சிவாஜி அப்பாவோட நடிக்கணும்ங்கறது. அவரை பெரியப்பா (ஏ.பி.நாகராஜன்) வீட்டு ஃபங்ஷன்லலாம் பாத்திருக்கேன்னாலும் கூட, அவரோட சேர்ந்து நடிச்ச முதல் படம் ‘வா கண்ணா வா’. சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் படம்.


ராம்குமார் அண்ணன், பிரபு, மனோன்னு எல்லாரும் ‘அப்பாவோட நடிக்கிறே?’ன்னு சொன்னப்போ, எனக்கு தலைகால் புரியலை. இதுல பாத்தீங்கன்னா...’மெட்டி’ படத்துக்குக் கொஞ்சம் கூட மேக்கப் போட்டுக்கக் கூடாது. இங்கே... ‘வா கண்ணா வா’ படத்துக்கு நகத்துக்குக் கூட மேக்கப் போட்டுக்கணும். ஒரே நேரத்துல இந்த ரெண்டு படங்களுக்கும் ஷூட்டிங் நடந்துச்சு.


‘வா கண்ணா வா’ முடிச்சிட்டு, ‘மெட்டி’ல நடிக்க ஃபுல் மேக்கப்போட போய் இறங்குவேன். மகேந்திரன் சார் என்னைப் பாத்துட்டு வாயை மூடிக்கிட்டுச் சிரிப்பார். ‘என்னம்மா இது? யாரும்மா நீங்க’ன்னு கிண்டல் பண்ணுவார். ’சார்... உங்களுக்குத் தெரியாதா சார்?’னு சொல்லுவேன். அசோக்குமார் சார், ‘என்ன, டான்ஸ் ஆடப்போறாங்களா இவங்க?’ன்னெல்லாம் கேப்பார். அந்த அளவுக்கு மேக்கப்பே இருக்கக் கூடாது அவங்களுக்கு.


‘வா கண்ணா வா’ல அப்படியொரு கேரக்டர். அவரை அப்பான்னுதான் கூப்பிடுவேன். அதுக்குத் தகுந்தது மாதிரி அதுல மகளா நடிச்சேன். அதுல ‘கண்ணிரண்டில் மையெழுதி’ன்னு ஒருபாட்டு. எனக்கு வளைகாப்பு பண்ற மாதிரி சீன்.


அப்போ அவரோட மடியில சாய்ஞ்சுக்கிட்டிருப்பேன். என் மோவாயைப் பிடிச்ச மாதிரி நடிச்சிருப்பார். அப்போ நான் அழ ஆரம்பிச்சிட்டேன். அந்தக் காலகட்டத்துக்குள்ளே எங்க அப்பாவோட மரணம் நிகழ்ந்திருச்சு. அப்போ, எனக்கு எங்க அப்பாவோட ஞாபகம்.


அந்தப் பாட்டு, அந்தப் படம்... ஜி.ஆர்.நாதன் சாரோட கேமிரா. லட்டு மாதிரி என்னைக் காண்பிச்சிருந்தார், அழகா! அப்ப, இப்ப மாதிரி மானிட்டர்லாம் கிடையாது. டப்பிங் பேசும்போதுதான் பாத்தேன். ’நானா இது. இவ்ளோ அழகா இருக்கேனா?’ன்னு வியந்து பாத்தேன். அப்படி வியந்து பாத்த படம் ‘வா கண்ணா வா’.


எனக்கும் சிவாஜிப்பாவுக்கும் போட்டாபோட்டி. அவரோட நான் போட்டி போடுவேன். நடிப்புல இல்ல... டைமிங்ல. சிவாஜிப்பா, 7 மணிக்கு ஷூட்டிங்னா, அஞ்சரைக்கெல்லாம் வந்துருவாரு. மேக்கப் போட்டுக்கிட்டே, அன்னிக்கு என்ன சீன், என்ன டயலாக் என்னன்னு கேட்டுக்கிட்டே இருப்பார். ’அண்ணே அண்ணே... அவர் ரெடியாகி வர்றதுக்குள்ளே எனக்கு மேக்கப் போட்டுவிடுங்கண்ணே’ன்னு கேப்பேன்.


சிவாஜிப்பா ரெடியாகிட்டார்னா, ஒருநிமிஷம் கூட மேக்கப் ரூம்ல இருக்கமாட்டார். அப்போ, கேரவனும் கிடையாது. மேக்கப் ரூம்ல மட்டும்தான் ஏ.ஸி. ஷூட்டிங் நடக்கிற ஃப்ளோர்ல பெரிய ஃபேன் மட்டும்தான் வைச்சிருப்பாங்க. அங்கே வந்து உக்கார்ந்திருவாரு. அப்படி உக்கார்ந்திட்டார்னா, வெளியே போகவே மாட்டாரு. ‘பிரேக்’னு சொன்னதும்தான் வெளியே வருவாரு. யாருக்கு ஷாட் எடுத்தாலும் சரி... அவர்பாட்டுக்கு ஃப்ளோர்ல உக்காந்துக்கிட்டிருப்பாரு.


சத்யா ஸ்டூடியோல ஷூட்டிங். அங்கே ஃப்ளோருக்குப் பக்கத்துல ஒரு கொட்டகை போட்டிருப்பாங்க. அதுல சிலசமயம் உக்கார்ந்திருப்பாரு சிவாஜிப்பா. ஒருநாள் நான் நடந்துபோனேன். ‘டேய் அவளைக் கூப்புடுறா’ன்னாரு. சொன்னாங்க. போய் நின்னேன். ‘இது நடையா?நீ பொம்பளைதானே? முதல்ல பொம்பள மாதிரி நட. அப்புறம் நடிக்கக் கத்துக்கோ. நடை பழகு முதல்ல’ன்னு சொன்னாரு. ’நடையே சரியில்லியே... இங்கே ஒரு கால் அங்கே ஒரு கால்னு வைக்கிறியே’ன்னாரு.


’தரைல ஒரு கோடு நீளமா போட்டுக்கோ. தலைக்கு மேலே ஒரு வெயிட்டை வைச்சுக்கிட்டு, காலை இப்படி அப்படின்னு நட. டெய்லி நட. இப்படிப் பழகு. நடை நல்லா வந்துரும். நீ ஒரு நடிகை. கதாநாயகி. சரியா நடக்கவேணாமா?’ன்னு சொன்னாரு. எனக்கு முதல் திருத்தமே நடைதான்.


அப்புறம் அந்தப் படத்துல எனக்கு வந்தது இன்னொரு பரிட்சை. படத்துல, கிருஷ்ண ஜயந்திக்கு ஒரு பாட்டு வரும். அந்தப் பாட்டுக்கு நடுவுல ஒரு பிட்டு பரதநாட்டியம் வரும். என் நேரம்... அதுக்குள்ளேயாவது கத்துட்டிருந்திருக்கணும்; கத்துக்கலை.


அதுல தாரா மாஸ்டர். நேராப் போய், ‘மாஸ்டர், இந்த பிட்டெல்லாம் என்னை ஆடவைச்சிடாதீங்க. எனக்கு வராது’ன்னு அவங்க கால்லயே விழுந்துட்டேன். இதையெல்லாம் அங்கேருந்து பாத்துக்கிட்டே இருந்தாரு சிவாஜிப்பா. ‘என்ன கேக்கறா அவ?’ன்னு கேட்டார். ’பரதநாட்டிய பிட்டு’ன்னு இழுத்தாங்க. ‘என்னவாம்?’ன்னாரு. ‘கொஞ்சம் ஸ்டெப்ஸ் வராதாம்’னு தயங்கித் தயங்கிச் சொன்னாங்க.


’நீ ஆடிக்காட்டு முதல்ல’ன்னார். மாஸ்டருக்குச் சொல்லவா வேணும்? ஆடினாங்க. ‘இப்போ நீ ஆடு’ன்னாரு. ‘அப்பா, எனக்கு டான்ஸ் வராதுப்பா’ன்னு சொல்லி அழ ஆரம்பிச்சிட்டேன். ’வேற என்னதான் வரும் உனக்கு?’ன்னு கேட்டாரு. ’கோலாட்டமாவது ஆடுவியா? ஸ்கூல்ல ஆடிருப்பியே?’ன்னு கேட்டாரு. ‘இல்லப்பா’ன்னு சொன்னேன். ‘எந்த ஸ்கூல்ல படிச்சே?’ன்னு திட்டுறாரு என்னை!


அப்போ, அந்த பரத நாட்டிய பிட்டை சிவாஜிப்பா ஆடிக்காட்டினார். அசந்துட்டோம் எல்லாருமே! ‘இல்லப்பா, எனக்கு டான்ஸ் வரவே வராதுப்பா’ன்னு சொன்னேன். ‘சரிவுடு. இவளை ஆடச் சொல்லாதீங்க. குரூப்பை வைச்சு ஆடவையுங்க. இல்லேன்னா, மானத்தை வாங்கிருவா இவ’ன்னு சொன்னாரு. ’ஒலியும் ஒளியும்’ல பாத்தேன். நீயும் அந்த வளர்ந்தவனும் (சரத்பாபு) சேறு மிதிக்கிற மாதிரி ஆடுனீங்களே’ன்னு ‘கண்ணில் தெரியும் கதைகள்’ பாட்டைச் சொல்லிக் கேட்டாரு.


‘வா கண்ணா வா’ படத்துல சிவாஜிப்பாவும் சுஜாதாம்மாவும் நடிச்ச கேரக்டர்ஸ் அப்படியே மனசுல பதிஞ்சிருச்சு. அதுக்கு அப்புறம்தான், ஒருகட்டத்துல, ‘முதல்மரியாதை’ல நடிக்கறதுக்கு பாரதிராஜா சார் கூப்பிட்டாரு.


‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்துக்கு அப்புறம் இதுதான். நடுவுல, ‘அலைகள் ஓய்வதில்லை’ ல சில்க் ஸ்மிதா கேரக்டருக்கு என்னைத்தான் கூப்பிட்டாரு. ஒரு ரெண்டுநாள் லேட்டாப் போயிட்டேன். அதனால, சில்க் ஸ்மிதாவும் தியாகராஜனும் நடிச்சிட்டாங்க. இல்லேன்னா, நானும் சந்திரசேகரும் தான் நடிக்கவேண்டியது.
‘டேட் கூட கொடுக்கமுடியாத அளவுக்கு நீங்க பிஸியா?’ன்னு திட்டுறாரு பாரதிராஜா சார்’’ என்றார் சிரித்துக் கொண்டே!


- நினைவுகள் தொடரும்


வடிவுக்கரசியின் முழுமையான வீடியோ பேட்டியைக் காண :


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x