Last Updated : 26 May, 2020 03:22 PM

 

Published : 26 May 2020 03:22 PM
Last Updated : 26 May 2020 03:22 PM

’எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்’ ’சிங்காரவேலனே தேவா’;  மெல்லிசையின் ஆரம்பம் எஸ்.எம்.சுப்பையா நாயுடு! 

’மெல்லிசை மன்னர்’ எம்.எஸ்.வி. மறைவையடுத்து, அவருக்காக, பிரமாண்டமான இசை நிகழ்ச்சி நடத்தினார் இளையராஜா. அந்த நிகழ்ச்சியின் மூலம் வந்த தொகையை, மெல்லிசை மன்னரின் குடும்பத்தாரிடம் வழங்கினார். எம்.எஸ்.வி.யை தன் குருநாதராகவே ஏற்றுக்கொண்ட இளையராஜாவின் வெளிப்பாடு இது.
கிட்டத்தட்ட இப்படியொரு நிகழ்வு, 40 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. ’மெல்லிசை மன்னர்’ எம்.எஸ்.விஸ்வநாதன், 1979-ம் ஆண்டு, இன்னிசைக் கச்சேரி ஒன்றை நடத்தினார். அந்த இசை நிகழ்ச்சிக்கு எக்கச்சக்க கூட்டம் கூடியது. கிட்டத்தட்ட ஒருலட்சம் ரூபாய் வசூலானது. 40 வருடங்களுக்கு முன்பு ஒரு லட்ச ரூபாய் வசூல் என்றால்... அதன் இன்றைய மதிப்பைக் கணக்கிட்டுக்கொள்ளுங்கள். எம்.எஸ்.வி நடத்திய இன்னிசைக் கச்சேரி, அவருக்காக நடத்திக் கொள்ளவில்லை. தன் குருநாதருக்காக நடத்தியது. குருநாதரின் சிகிச்சைக்காகவும் அவரின் குடும்பத்துக்காகவும் நடத்தியது. மெல்லிசை மன்னர்களின் குருநாதர்... பிரபல இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு.

மெல்லிசைக்கும் கர்நாடக சங்கீத இசைக்கும் முன்னோடி என்று தமிழிலும் தெலுங்கிலும் இன்றைக்கும் சுப்பையா நாயுடுவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் திரையுலகத்தாரும் ரசிகர்களும்.


அண்ணாவின் ‘வேலைக்காரி’, கலைஞரின் ‘மலைக்கள்ளன்’ , எம்ஜிஆரின்’ ராஜகுமாரி’, ‘மர்மயோகி’, நம்பியார் ஏராளமான வேடங்களில் நடித்து அசத்திய ‘திகம்பர சாமியார்’ , சிவாஜியின் ‘அன்னையின் ஆணை’ என ஏராளமான படங்களுக்கு இசையமைத்து பாடல்களை மிகப்பெரிய வெற்றிப் பாடல்களாக, முணுமுணுக்கும் பாடல்களாக்கினார் சுப்பையா நாயுடு.


‘என்னருகில் நீயிருந்தால் இயற்கையெல்லாம் சுழலுவதேன்’ என்ற பாடலை இன்றைக்கும் ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். எம்ஜிஆரின் பிரமாண்டப் படைப்பான ‘நாடோடி மன்னன்’ படத்தையும் மறக்கமுடியாது.அதில் உள்ள எல்லாப் பாடல்களையும் மறக்கவில்லை மக்கள். ‘தூங்காதே தம்பி தூங்காதே’ பாடலையும் ‘வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், இப்படை தோற்கின் எப்படை வெல்லும்’ என்று எம்ஜிஆருக்கு, அவரின் திரை வாழ்வுக்கும் அரசியலுக்குமாக அன்றைக்கும் கட்டியம் இசைத்தவர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு.


62ம் ஆண்டில், எஸ்.ஜானகியின் குரலில், ‘சிங்கார வேலனே தேவா’ என்ற தேமதுரப் பாடலை இன்றைக்கும் ரிங்டோனாகவும் காலர்டியூனாகவும் வைத்துக்கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.


‘’மெல்லிசை மன்னர்கள் என்று எங்களுக்குப் பட்டம் கொடுத்திருக்கிறார்கள். திரை இசையில், அந்த மெல்லிசை எப்படி இருக்கவேண்டும் என்பதை, எஸ்.எம்.சுப்பையா நாயுடுவிடமும் ஜி.ராமநாதனிடமும்தான் கற்றுக் கொண்டோம். இவர்களை குரு ஸ்தானத்தில் வைத்துப் போற்றுகிறோம்’ என்று மெல்லிசை மன்னர்கள் நெகிழ்ந்து பதிவிட்டிருக்கிறார்கள், பல மேடைகளில்!


1914-ம் ஆண்டு மார்ச் மாதம் 14-ம் தேதி பிறந்த எஸ்.எம்.சுப்பையா நாயுடு, 76-ம் ஆண்டு வரை இசையமைத்து வந்தார். பிறகு பக்கவாதத்தால் படுத்தபடுக்கையானார். அந்த சமயத்தில்தான், எம்.எஸ்.விஸ்வநாதன், அவருக்காகவே இசை நிகழ்ச்சி நடத்தினார். ஒருலட்சம் ரூபாயை சுப்பையா நாயுடுவின் குடும்பத்துக்கு வழங்கினார்.
79-ம் ஆண்டு மறைந்தார் எஸ்.எம்.சுப்பையா நாயுடு. அவரின் பாடல்களைக் கொஞ்சம் கேட்டுப் பார்த்தால், அவற்றில் உள்ள தனித்துவத்தை அறிந்து சிலிர்த்துப் போவோம்.


79-ம் ஆண்டு மே மாதம் 26-ம் தேதி மறைந்தார். இன்று இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு நினைவுநாள்.


இசைமேதை எஸ்.எம்.சுப்பையா நாயுடுவைப் போற்றுவோம்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x