Published : 26 May 2020 11:21 AM
Last Updated : 26 May 2020 11:21 AM

தொழில்கள் முடங்கும் அபாயத்தால் திணறி நிற்கும் தென்னிந்தியாவின் மான்செஸ்டர்!

கரோனா பொதுமுடக்கம் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தால், பல்வேறு தொழில் நகரங்கள் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன. ‘தென்னிந்தியாவின் மான்செஸ்டர்’ என்று அழைக்கப்படும் கோவையும் இதற்கு விதிவிலக்கல்ல என்று களத்திலிருந்து வரும் தகவல்கள் சொல்கின்றன.

கோவையில், 1980-களுக்குப் பின் பஞ்சாலைகள் சரிவுக்குப் பின்னர் சிறிய தேக்கம் ஏற்பட்டது. எனினும், அதன் பின்னர் பல்வேறு தொழில்கள் மூலம் கோவை மெல்ல எழுந்து நின்றது. 1998 கோவை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து இன்னொரு தேக்கம் உருவானது. குண்டுவெடிப்பு நடந்து சுமார் 10 வருட காலம் வெளியூர், வெளிமாநில, வெளிநாட்டு வியாபாரிகள், தொழில் முனைவோர் கோவைக்கே வர அஞ்சும் சூழ்நிலை இருந்தது. அந்தச் சூழ்நிலையை போலீஸார் முழுமையாக மாற்றியமைத்தனர்.

அதன் மூலம் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாகக் கோவையில் பழைய தொழில்கள் மட்டுமன்றி புதுப்புது தொழில்களும் படிப்படியாக வளர்ச்சியடைந்தன. வியாபாரிகளும் தொழில் முனைவோரும் அச்சம் தவிர்த்து இங்கே வந்து தொழில் தொடங்க ஆரம்பித்தனர். தென் மாவட்டங்கள், வட மாவட்டங்களிலிருந்து தொழிலாளர்கள் கோவைக்கு வந்துகொண்டிருந்த நிலை மாறி, வட மாநிலத்தவர்கள் இங்கு வந்து குவியத் தொடங்கினர். இந்த நிலையில்தான் கரோனா வடிவில் மீண்டும் சோதனையை எதிர்கொண்டது கோவை.

கரோனா நோய்ப் பரவல் மற்றும் பொது முடக்கத்தைத் தொடர்ந்து 53 நாட்கள் மூடப்பட்டிருந்த தொழில் நிறுவனங்கள், பொதுமுடக்கத்தில் தளர்வுகள் செய்யப்பட்ட பின்னர், படிப்படியாகச் செயல்பாட்டுக்கு வர ஆரம்பித்தன. கிராமங்களில் 50 சதவீதத் தொழிலாளர்களைப் பயன்படுத்தி தொழில் நிறுவனங்களை நடத்தலாம் என அறிவிக்கப்பட்டது.

ஆட்டோ மொபைல்ஸ், ஜவுளி, பவுண்டரி, ஃபேப்ரிகேஷன், மோட்டார் பம்ப், வெட் கிரைண்டர், மெட்டல் ஸ்டீல் தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் இயங்கத் தொடங்கியிருக்கின்றன. ஆனால், பெரும்பாலான நிறுவனங்களில் போதுமான திறன் பெற்ற தொழிலாளர்கள் இல்லாததால் 30 சதவீத உற்பத்தியைக் கூட எட்ட முடியாமல் அந்நிறுவனங்கள் திணறி வருகின்றன.

மாவட்ட அளவில் இருக்கும் 17,500 தொழில் நிறுவனங்கள் 1.50 லட்சம் தொழிலாளர்கள் இல்லாமல் முழுமையான செயல்பாட்டுக்கு வர முடியாமல் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. திறன் பெற்ற தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்றுவிட்ட நிலையில் தொழில் நிறுவனங்களின் உற்பத்தி ஸ்தம்பித்துள்ளது.

குறிப்பாக, உற்பத்தித் தளவாடங்கள், உதிரி பாகங்கள், பொருள்கள் சீரமைப்பு நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள், துணி நூல் உற்பத்தி நிறுவனங்கள், சாயப் பட்டறைகள் போன்றவை தொழிலாளர்கள் மற்றும் தேவையான ஆர்டருக்காகக் காத்திருக்கும் நிலைமை உள்ளது.

இது தொடர்பாகத் தொழில் முனைவோர் சிலர் நம்மிடம் கூறுகையில், “முழுமையான அனுபவம் மற்றும் திறன் பெற்ற தொழிலாளர்கள் இருந்தால் மட்டுமே நிறுவனங்களை நடத்த முடியும். இரண்டு மாதங்களுக்கு முன்பு இருந்ததைப் போல அதிக ஆர்டர்கள் இப்போது இல்லை. ஆர்டர்கள் வந்தாலும் அதைப் பூர்த்தி செய்யும் வகையில் தொழிலாளர்கள் இல்லை.

குறைந்த தொழிலாளர்களைக் கொண்டு அதிக நாட்கள் பொருட்களை உற்பத்தி செய்வதால் லாபம் கிடைக்காது. பற்றாக்குறை அதிகரித்துவரும் நிலையில் உற்பத்திப் பொருட்களின் விலையும் கணிசமாக உயரும் நிலைமை இருக்கிறது. தற்போதுள்ள சூழலில் இன்ஜினீயரிங் நிறுவனங்களின் உற்பத்தியானது சரிவைச் சந்தித்து வருகிறது. இந்த நிலைமை சரியாக ஒரு வருடம்கூட ஆகலாம், அதற்குள் சில ஆயிரம் தொழில்கள் காணாமலும் போகலாம்” என்றனர் வருத்தத்துடன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x