Published : 25 May 2020 07:20 PM
Last Updated : 25 May 2020 07:20 PM

பிரியாணி கொடுத்தது திமுக; பிரச்சினையில் சிக்கியது போலீஸ்: கோவை போலீஸாருக்கு இப்படியும் ஒரு சிக்கல்

பிரியாணிக்கும் அரசியலுக்கும் இடையே பிரிக்க முடியாத பந்தம் இருக்கிறது போலும். பிரியாணி தொடர்பாகக் கோவையில் நடந்திருக்கும் சமீபத்திய சம்பவம், இரண்டு போலீஸாரின் இடமாற்றத்துக்குக் காரணமாகியிருப்பதுதான் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

கோவை ஆத்துப்பாலம் என்.பி இட்டேரி பகுதியில், திமுக மீனவர் அணி நிர்வாகி ஒருவர் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இரண்டு நாட்களுக்கு முன்பு 1,500 பேருக்கு பிரியாணி வழங்கினார். பிரியாணியைத் தயார் செய்து வீடு வீடாகச் சென்று அவர் வழங்கியதாகச் சொல்லப்படுகிறது. அப்போது ரோந்துப் பணியில் இருந்த போத்தனூர் போலீஸார் இருவர் இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனுக்குத் தகவல் தெரிவிக்கவில்லை. மேலும், அப்பகுதி உளவுப் பிரிவு போலீஸார் இருவரும் தங்கள் மேலதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

இதுகுறித்துக் கட்சி மேலிடத்தில் புகார் செய்த அதிமுக பிரமுகர் ஒருவர், “எதிர்க்கட்சிக்காரர்கள் நம்மை மீறி ஊருக்குள் பிரியாணி கொடுத்துள்ளனர். அதைப் போலீஸார் தடுத்திருக்கலாம் அல்லது நமக்குத் தகவல் தந்திருக்கலாம். ஆனால், அதைச் செய்யாமல் எதிர்க்கட்சிகளுக்குச் சாதகமாக நடந்து கொண்டிருக்கிறார்கள்” என்று சொல்லி இருக்கிறார்.

இதையடுத்து, ‘பொதுமுடக்க நேரத்தில் அனுமதியின்றி பிரியாணி விநியோகிக்கப்பட்டது எப்படி?’ என சம்பந்தப்பட்ட நான்கு போலீஸாரிடமும் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து மூன்று சிறப்பு எஸ்.ஐ.க்கள் மற்றும் ஒரு ஏட்டு ஆகியோர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, நம்மிடம் பேசிய போலீஸார் சிலர், “இப்படியெல்லாம்கூட சிக்கல் முளைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. பிரியாணி விநியோகத்தை வைத்து நடந்த அரசியலில், போலீஸாரின் தலை உருள்வதெல்லாம் இதற்கு முன்னர் நடந்திராதது. இதுபோல இன்னும் என்னென்ன நடக்குமோ தெரியவில்லை. ஒன்று மட்டும் நிச்சயம். இனி யாரேனும் இப்படி இஷ்டத்துக்கு உணவு விநியோகிக்க நாங்கள் அனுமதிக்கவே மாட்டோம்” என்றனர் உறுதியுடன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x