Last Updated : 25 May, 2020 03:38 PM

 

Published : 25 May 2020 03:38 PM
Last Updated : 25 May 2020 03:38 PM

சாலையில் தவித்த மனநோயாளி; எஸ்ஐ உதவியுடன் மீட்டு காப்பகத்தில் சேர்த்த செவிலியர்!

உணவுக்கே வழியின்றி சாலையோரம் தவித்த மனநோயாளியை மீட்டு மனநலக் காப்பகத்தில் சேர்க்க உதவியிருக்கிறார் செவிலியர் ராணி. அவருக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார் ஓர் உதவி ஆய்வாளர். இருவரின் மனிதாபிமானம் கலந்த முயற்சியால் இப்போது காப்பகத்தில் பாதுகாப்பாக இருக்கிறார் அந்த மனநோயாளி.

நாகை மாவட்டம் வடவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிராம சுகாதார செவிலியராகப் பணிபுரிகிறார் பா.ராணி. இவர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நாகை மாவட்ட நிர்வாகி மற்றும் தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில பொதுச்செயலாளர் ஆகிய பொறுப்புகளையும் வகிக்கிறார்.

இவர் கடந்த சனிக்கிழமை நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஒருவரைப் பார்க்கத் தான் வசிக்கும் பகுதியிலிருந்து சென்று கொண்டிருந்தார். அப்போது நாகை, புத்தூர் அருகே சாலையோரம் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் இருப்பதைப் பார்த்துவிட்டு அவரை நெருங்கி ஆறுதலாகப் பேசியுள்ளார்.

அந்த நபர் சொன்ன விவரங்களைக் கேட்டு ராணி அதிர்ந்து போயிருக்கிறார். 30 ஆண்டுகளுக்கு முன்னர் மகப்பேறு உதவியாளராக ராணியுடன் பணியாற்றி மறைந்த ராஜம் என்பவரின் மகனான சீதாராமன்தான் அந்த நபர். இதைக் கேட்டதும் சீதாராமனை அழைத்துச் சென்று அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்து, குடும்பத்துடன் சேர்க்கும் முயற்சியில் இறங்கினார் ராணி.

ஆனால், தொடர் விசாரணையில் ராஜம் இறந்து விட்டதும், அவருக்கு நெருங்கிய உறவினர் யாரும் இல்லாததும் தெரியவந்தது. அதற்காக சீதாராமனை அப்படியே விட்டுவிடாத ராணி, அவரை உரிய இடத்தில் சேர்க்க முடிவு செய்தார். உடனடியாக நாகப்பட்டினம், வெளிப்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விவேக் ரவிராஜைத் தொடர்பு கொண்டு இந்தக் தகவலைச் சொல்லியிருக்கிறார்.

அவரும் உடனடியாகச் செயல்பட்டு, தமிழ்நாடு அரசு மறுவாழ்வுத் துறையை அணுகியிருக்கிறார். அவர்களின் வழிகாட்டுதலில் சீர்காழி, திட்டை கிராமத்தில் செயல்படும் கார்டன் மனநல மறுவாழ்வு மையத்தைத் தொடர்புகொண்டு பேசி சீதாராமனை அங்கே சேர்க்க ஏற்பாடு செய்தார்.

இதையடுத்து, நேற்று மாலை வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் கார்டன் மனநல மறுவாழ்வு மைய நிர்வாகி ஜெயந்தியிடம் சீதாராமன் ஒப்படைக்கப்பட்டார். அப்போது ராணி மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நாகை மாவட்டச் செயலாளர் அ.தி.அன்பழகன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

’’மனித வாழ்வு மகத்தானது, அது மற்றவர்களுக்காக அர்ப்பணிக்கப்படும்போது...’’ என்ற வார்த்தைகளுக்கு உதாரணமாய் நடந்திருக்கிறார்கள் செவிலியர் ராணியும் காவல் உதவி ஆய்வாளர் விவேக் ரவிராஜும்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x