Published : 24 May 2020 07:22 PM
Last Updated : 24 May 2020 07:22 PM

இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பாமல் உணவிற்காக சுற்றுலாப் பயணிகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் குரங்குகள்

கொடைக்கானல் மலைப்பகுதியில் சாலையோரம் சுற்றுலாப்யணிகளை நம்பி வசித்துவந்த குரங்குகள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பாமல் சாலைகளில் சுற்றுலாப்பயணிகளின் வருகையை எதிர்நோக்கி காத்துள்ளன.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியின் குளுமையை ரசிக்க ஆண்டுதோறும் சுற்றுலாப்பயணிகள் வருகை இருக்கும். கொடைக்கானல் மலைப்பகுதிகளில் குரங்குகள் அதிகம் வசித்துவருகின்றன.

இதில் சிங்கவால் குரங்குகள் வனப்பகுதிக்குள் இயற்கை உணவை உட்கொண்டு தற்சார்பு வாழ்க்கை வாழ்ந்துவருகின்றன. பிற வகைக் குரங்குகள் வனப்பகுதியில் இருந்து வெளியில் வந்து சாலையோரம் வசித்து வருகின்றன.

இதற்குக் காரணம் வாகனங்களில் செல்லும் சுற்றுலாப்பயணிகள் ஆங்காங்கே நிறுத்தி உணவு உட்கொள்ளும் போது வீணாகும் உணவுகளை உண்டு பழக்கப்படுத்திக்கொண்டுவிட்டன.

எனவே இவைகள் தங்கள் இயல்புவாழ்க்கையான மரங்களில் உள்ள கனிகள், காய்களை உண்டு வாழும் பழக்கத்தில் இருந்து தங்கள் உணவு பழக்கத்தை மாற்றிக்கொண்டுவிட்டன.

பல ஆண்டுகளாக உணவிற்காக சுற்றுலாப்பயணிகளை நம்பியே சாலையோரம் காத்திருந்து உணவுகளை உட்கொண்டுவந்த குரங்குகள் தற்போது ஊரடங்கால் சுற்றுலாப்பயணிகள் வருகை இல்லாததால் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று தங்கள் இயல்பு வாழ்க்கையை தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஊரடங்கு தொடக்கத்தில் சாலையோரம் உணவு கிடைக்காததால் உணவிற்காக வனப்பகுதிக்குள் சென்ற குரங்குகள் மீண்டும் தற்போது சாலைப்பகுதிக்கு வந்து சுற்றுலாப்பயணிகளின் வருகை எதிர்பார்த்து காத்திருக்க தொடங்கியுள்ளன.

இயற்கை உணவின் சுவை மாறி மனிதர்கள் உண்ணும் பலவகை உணவுகளை உட்கொண்டு பழகியதால் மீண்டும் இயற்கை உணவிற்கு செல்ல இவை தயக்கம் காட்டிவருவது தெரிகிறது.

இதனால் கொடைக்கானல் மலைச்சாலையில் குரங்குகள் அதிகம் உலாவருகின்றன. குரங்குகளுக்கு உணவளிக்காதீர்கள் என வனத்துறையினர் ஆங்காங்கே அறிவிப்பு பலகைகள் வைத்திருந்தபோதும், இதை சுற்றுலாப்பயணிகள் யாரும் கண்டுகொள்வதில்லை.

இதனால் இயற்கையை நம்பி வாழவேண்டிய குரங்குகள் தற்போது உணவிற்கு மனிதர்களை நம்பியிருக்கவேண்டியநிலைக்கு ஆளாகி தற்போது சுற்றுலாபயணிகளின் வருகைக்காக காத்துக்கிடக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x