Published : 24 May 2020 06:39 PM
Last Updated : 24 May 2020 06:39 PM

கரோனா ஊரடங்கால் தகவல் பெறும் உரிமைச்சட்டம் பயன்பாடு முடக்கம்: மேல்முறையீடு மனுக்களுக்கு கால நீட்டிப்பு வழங்கப்படுமா? 

தமிழகத்தில் ‘கரோனா’ ஊரடங்கால் கடந்த இரண்டு மாதமாக ஒட்டு மொத்தமாக இச்சட்டம் பயன்பாடு முடக்கிப்போய் உள்ளது.

கடந்த 2005-ம் ஆண்டு தகவல் பெறும் உரிமைச்சட்டம் நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்தது. அரசுத் துறைகளில் பல்வேறு முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வரவும், பொதுமக்கள் நேரடியாக அரசு ஆவணங்களைப் பார்வையிடவும் இந்தச் சட்டம் வழிவகை செய்துள்ளது.

சாமாணியனும் அரசை கேள்விக்கேட்கக்கூடிய, அரசின் நடைமுறைகளைத் தெரிந்து கொள்ளக்கூடிய அற்புதமான சட்டம் இந்தத் தகவல் அறியும் உரிமைச்சட்டம். தமிழகத்தில் ‘கரோனா’ ஊரடங்கால் கடந்த இரண்டு மாதமாக ஒட்டு மொத்தமாக இச்சட்டம் பயன்பாடு முடக்கிப்போய் உள்ளது.

அதனால், ஊரடங்கு நாட்களில் முடங்கிய தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மேல்முறையீடு மனுக்களுக்கான கூடுதல் கால அவகாசம் அளித்து நீட்டிப்பு செய்யப்படவேண்டும் என்று தமிழ்நாடு தகவல் ஆணையத்தை சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

அதனால், தமிழ்நாடு தகவல் ஆணையம் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை அறிமுகப்படுத்த போவதாக அறிவித்து இருந்தது. ஆனால், இந்த அறிவிப்பு தற்போது வரை நடைமுறைக்கு வராததால் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாததால் இந்த சட்டம் எந்த நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்டதோ அது நிறைவடையாமல் போய்விட்டது என்று சமூக ஆர்வலர்கள் ஆதங்கம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் கார்த்திக் கூறியதாவது: தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தகவல் கேட்டு மனு அளித்தவர்களுக்கு அரசு துறை பொதுதகவல் அலுவலர், ஒரு மாதத்திற்கு தகவல் அனுப்பியிருக்க வேண்டும். ஆனால், தற்போது ‘கரோனா’ ஊரடங்கால்

தகவல் கேட்டு மனு செய்தவர்களுக்கு அந்தந்த அரசுத்துறை பொது தகவல் அலுவலரால் தகவல் அளிக்க முடியவில்லை.

பொதுவாக ஒரு மாதத்திற்குள் தகவல் கிடைக்கபெறாதவர்கள் தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005 பிரிவு 19(1) ன்படி முதல் மேல் முறையீடு மனுவை அந்தந்த அரசு அலுவலகங்களின் பொதுத்தகவல் அலுவலருக்கு மனு அனுப்ப வேண்டும். இல்லையென்றால் பொதுதகவல் அலுவலருக்கு அனுப்பப்பட்ட மனு செல்லாதகிவிடும். தற்போது ஊரடங்கு மே மாதம் 31ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், ஜூன் மாதத்திலிருந்து மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

ஆதலால் மனு அனுப்பியவர்களுக்கு தமிழ்நாடு தகவல் ஆணையம் இதுவரை மேல்முறையீட்டு மனுக்களுக்கான காலநீட்டிப்பு சம்பந்தமாக எவ்வித நிலைப்பாடும் எடுக்கவில்லை. மறுபுறம் நீதிமன்றங்கள் முடக்கத்தால் மனுக்களுக்கான நீதிமன்றம் தபால்த்தலை கிடைக்காமல் சிரமம் ஏற்பட்டது.

மேலும், மனுக்களை பிரதி எடுப்பது, ஜெராக்ஸ் நகல் எடுப்பது, பொது போக்குவரத்து ஸ்தம்பிப்பால் தபால் நிலையங்களுக்கு செல்ல முடியாத நிலை என்று நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டதால் பொதுமக்களால் இச்சட்டத்தை பயன்படுத்துவதில் கடும் சிக்கலை ஏற்படுத்தியது. தற்போது கொரோனா சமயத்தில் அரசுத்துறைகளின் செயல்பாடுகளின் வெளிப்படைதன்மையை அறிந்துக்கொள்ள உதவுவது தகவல் பெறும் உரிமைச்சட்டம் பிரதான பங்கு வகிக்கிறது.

முதலமைச்சர் கே. பழனிச்சாமி அவர்கள் தமிழக அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்க அனுமதி அளிப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் இருக்கின்ற ஊழியர்களை வைத்து தகவல் பெறும் உரிமைச்சட்டத்தில் பெறுப்படும் மனுக்களுக்கு தகவல்கள் தயாரிக்கும் பணிகளை மேற்கொள்ளப்படுமா? என்பது மிக பெரிய கேள்வி எழுந்துள்ளது.

கடந்த இரண்டு மாத ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் அத்தியவசிய பொருட்கள், மருத்துவம் மற்றும் இறப்பு சடங்குகள் தவிர வெளியே வரமுடியாமல் வீட்டிற்குள் முடக்கிவிட்டனர்.

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை பயன்படுத்தும்போது இது போன்ற பேரிடர் அனுபவம் இச்சட்டத்தை பயன்படுத்தும் பொதுமக்களுக்கும், தகவல் ஆணையத்திற்கும் ஏற்பட்டதில்லை. இந்த குழப்பமான சூழ்நிலையில் மே மாதம் ஆரம்பத்தில் தமிழ்நாடு தகவல் ஆணையம் மேல்முறையீடு மனுக்களால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படுத்தும் விதமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை அறிமுகப்படுத்த போவதாக தெரிவித்தது.

ஆனாலும் இன்றுவரை இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வரவில்லை. தகவல் பெறும் உரிமைச்சட்டம் பயன்பாட்டை தமிழகத்தில் ஆன்லைன் வசதியுடன் டிஜிட்டல் தொழில்நுட்பமாக மாற்றவேண்டும் என்ற மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. அது நிறைவேற்றப்பட இந்த ‘கரோனா’ ஊரடங்கு சரியான காலம், ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x