Last Updated : 24 May, 2020 04:54 PM

 

Published : 24 May 2020 04:54 PM
Last Updated : 24 May 2020 04:54 PM

கண்ணாடி, முகக்கவசம் அணிந்து முடி திருத்தம்: புறஊதா கதிர் மூலம் சீப்பு, கத்திரிகள் சுத்தம்- முன்மாதிரியாக திகழும் தூத்துக்குடி இளைஞர்

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 2 மாதங்களுக்கு பிறகு சலூன் கடைகள் இன்று திறக்கப்பட்டன. இதனால் சலூன் கடைகளுக்கு முன்பு பலர் நீண்ட நேரம் காத்திருந்து முடிவெட்டினர்.

புறஊதா கதிர் மூலம் சீப்பு, கத்திரிகளை சுத்தம் செய்து கண்ணாடி முகக்கவசம் அணிந்து முடிதிருத்தம் செய்து முன்மாதிரியாக திகழ்கிறார் தூத்துக்குடி இளைஞர் பொன் மாரியப்பன்.

கரோனா ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் சலூன் கடைகள் கடந்த 2 மாதங்களாக மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் ஊரக பகுதியில் உள்ள சலூன் கடைகளை திறக்க கடந்த வாரம் அனுமதி அளிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக நகர்ப்புறங்களில் உள்ள சலூன் கடைகளையும் பல்வேறு நிபந்தனைகளுடன் திறக்க அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து நகர்ப்புற பகுதிகளிலும் சலூன் கடைகள் 2 மாதங்களுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டன.

2 மாதங்களாக மூடி வெட்டாமல் இருந்த பலர் ஆவலுடன் சலூன் கடைகளுக்கு வந்து, கடைகளுக்கு வெளியே நீண்ட நேரம் காத்திருந்து முடிவெட்டிவிட்டு சென்றனர்.

தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியில் சலூன் கடை நடத்தி வருபவர் பொன் மாரியப்பன். புத்தகப் பிரியரான இவர் தனது சலூன் கடையையே குட்டி நூலகமாக மாற்றியுள்ளார்.

இதன் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானார் பொன் மாரியப்பன். 2 மாதங்களுக்கு பிறகு இன்று கடையை திறந்த இவர், வாடிக்கையாளர்களுக்கு முடிதிருத்தம் செய்து முடித்த பிறகு அவர்களுக்கு பயன்படுத்தும் சீப்பு, கத்திரி உள்ளிட்ட உபகரணங்களை புறஊதா கதிர் மூலம் சுத்தம் செய்த பின்னரே அடுத்த வாடிக்கையாளருக்கு அவைகளை பயன்படுத்துகிறார்.

மேலும் கையுறை, முகக்கவசம் அணிந்து முடிதிருத்தும் இவர், வாடிக்கையாளர்களிடம் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள கண்ணாடியால் ஆன முகக்கவசம் அணிந்து வேலை செய்கிறார்.

மற்ற முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு முன் உதாரணமாக திகழும் பொன் மாரியப்பனை பலரும் பாராட்டினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x